பேரவைக்கு வராமல் இருக்க கருணாநிதிக்கு அனுமதி: எதிர்ப்பின்றி நிறைவேறிய மு.க.ஸ்டாலின் தீர்மானம்

கருணாநிதி சட்டப் பேரவைக்கு வராமல் இருப்பதற்கான அனுமதி செவ்வாய்க்கிழமை கொண்டு வரப்பட்ட தீர்மானம் மூலம் வழங்கப்பட்டது.
பேரவைக்கு வராமல் இருக்க கருணாநிதிக்கு அனுமதி: எதிர்ப்பின்றி நிறைவேறிய மு.க.ஸ்டாலின் தீர்மானம்

கருணாநிதி சட்டப் பேரவைக்கு வராமல் இருப்பதற்கான அனுமதி செவ்வாய்க்கிழமை கொண்டு வரப்பட்ட தீர்மானம் மூலம் வழங்கப்பட்டது.
சட்டப் பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும், இதற்கான தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்து பேசியது: முன்னாள் முதல்வரும், இப்போதைய சட்டப் பேரவை உறுப்பினருமான கருணாநிதிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளதையடுத்து அவர் உடல் நலம் பெறும் வரையில் பூரண ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், சட்டப் பேரவை விதி 20 (1)-ன் கீழ் சட்டப் பேரவை உறுப்பினர் மு.கருணாநிதி கடந்த ஜூன் 14-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு நடைபெற்று வரும் தமிழக சட்டப் பேரவைக் கூட்டத் தொடருக்கு வராமல் இருப்பதற்கான அனுமதி அளிக்கப் பெற வேண்டும் என்ற தீர்மானத்தை வாசித்தார்.
இந்தத் தீர்மானத்தை பேரவைத் தலைவர் பி.தனபால், குரல் வாக்கெடுப்புக்கு அனுமதித்தார். அப்போது, 'ஏற்போர் ஆம்' எனக் கூறுமாறு என பேரவைத் தலைவர் தெரிவித்தபோது, திமுக உறுப்பினர்கள் அனைவரும் 'ஆம்' எனக் குரல் எழுப்பினர். 'மறுப்போர் இல்லை' எனக் கூறுமாறு தெரிவித்தபோது, அதிமுக உறுப்பினர்கள் உள்பட யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் மௌனமாக இருந்தனர். இதையடுத்து, தீர்மானம் நிறைவேறியதாக பேரவைத் தலைவர் பி.தனபால் அறிவித்தார்.
பேரவை விதி கூறுவதென்ன?
அனுமதி பெறாமல் பேரவைக் கூட்டத்தின் 60 நாள்களுக்குத் தொடர்ந்து எந்த உறுப்பினரும் வராமல் இருந்தால் அவரது பதவி காலியானதாக அறிவிக்கப் பெற வேண்டும். அதேசமயம், பேரவைக் கூட்டங்களுக்கு வராமல் இருப்பதற்கான அனுமதியை உறுப்பினர்களுக்குப் பேரவை அளிக்கலாம்.
வராத காலத்தைக் குறிப்பிட்டு அதற்கான தீர்மானத்தை அவரோ அல்லது அவருக்காக வேறோரு உறுப்பினரோ கொண்டு வரலாம். இந்தத் தீர்மானம் திருத்தமோ, விவாதமோ இல்லாமல் வாக்கெடுப்புக்கு விடப்பட வேண்டும் என்று விதியில் கூறப்பட்டுள்ளது.
இந்த விதிப்படி கருணாநிதிக்கு பேரவைக்கு வராமல் இருப்பதற்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com