நீட் தேர்வு: ஜூலை 27-இல் திமுக சார்பில் மனிதச்சங்கிலி போராட்டம்: மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு

நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து திமுக சார்பில் ஜூலை 27-ஆம் தேதி மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்துவது
மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்கு தலைமை வகித்த திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் . உடன் (இடமிருந்து) துணைப் பொதுச்செயலாளர்கள் சுப்புலெட்சுமி ஜெகதீசன், வி.பி.துரைசாமி,
மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்கு தலைமை வகித்த திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் . உடன் (இடமிருந்து) துணைப் பொதுச்செயலாளர்கள் சுப்புலெட்சுமி ஜெகதீசன், வி.பி.துரைசாமி,

நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து திமுக சார்பில் ஜூலை 27-ஆம் தேதி மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்துவது என்று அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
பொதுச்செயலாளர் க.அன்பழகன், முதன்மைச் செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர்கள் வி.பி.துரைசாமி, ஐ.பெரியசாமி, சுப்புலெட்சுமி ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திமுகவில் மொத்தம் 67 மாவட்டச் செயலாளர்கள் உள்ளனர். இதில் சில மாவட்டச் செயலாளர்கள் மட்டும் நீட் தேர்வு விவகாரம் குறித்து பேச அனுமதிக்கப்பட்டனர்.
மாவட்டச் செயலாளர்கள் பேச்சு: தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் கீதா ஜீவன், நீட்தேர்வு குறித்து போராட்டம் நடத்துவது பொதுமக்கள் மத்தியில் வேறு வகையிலான விளைவுகளை ஏற்படுத்தி விடக் கூடாது. அதைக் கருத்தில் கொண்டு போராட்டம் நடத்த வேண்டும் என்றார்.
விருதுநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் தங்கம் தென்னரசு, ஒரே நாடு ஒரே மொழி என்ற ஒற்றைக் கலாசாரத்தைக் கொண்டு வந்து மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு பறிக்கப் பார்க்கிறது. இதை அனுமதிக்கக் கூடாது என்றார்.
அனைத்துத் துறைகளிலும்... விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளர் பொன்முடி, நீட் தேர்வு விவகாரம் மட்டுமில்லை, அனைத்து துறைகளிலும் மாநில அரசின் உரிமையைப் பறிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. இதனை எதிர்க்க வேண்டிய கடமை இருக்கிறது என்றார்.
இறுதியாக மு.க.ஸ்டாலின் பேசும்போது நீட் தேர்வைக் கண்டித்து திமுக நடத்தும் மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் மாணவ, மாணவியரை அதிக அளவில் பங்கேற்கச் செய்ய வேண்டும். மாணவர்கள் பங்கேற்றால்தான் திமுகவின் போராட்டம் வெற்றிபெறும் என்றார்.
கூட்டத்தில் சலசலப்பு: சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் பேச்சால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அன்பழகன் பேசும்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவைவிட அதிகாரம் மிக்கவர் போன்ற தோற்றத்தை ஏற்படுத்த நினைக்கிறார். இந்த அரசுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தி இருக்கிறது. அதனால், ஆட்சியை அகற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற அக்கறை மு.க.ஸ்டாலினுக்கு இருப்பதுபோல மற்ற உறுப்பினர்களுக்கும் இருக்க வேண்டும் என்றார். இது கூட்டத்தில் பங்கேற்ற சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மனிதச் சங்கிலிப் போராட்டம்: நீட் தேர்வுக்கு விலக்கு கோரி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு மத்திய அரசுக்கு உரிய முறையில் அழுத்தம் கொடுத்து, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற தமிழக அரசு தவறி விட்டது. இதனால் மாநிலப் பாடத்திட்டத்தில் பிளஸ் 2 படித்த 4.2 லட்சம் மாணவர்களுக்கான 85 சதவீத இடங்கள் மருத்துவக் கல்லூரியில் பறி போயிருக்கிறது. இந்த இடங்கள் அனைத்தும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தேர்வு எழுதிய 4,675 மாணவர்கள் மட்டுமே செல்லும் நிலை ஏற்பட்டு தமிழகத்தில் சமூக நீதிக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது.
எனவே, நீட் தேர்வு விலக்குக்கான 2 மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை உடனே வழங்க வலியுறுத்தி ஜூலை 27-ஆம் தேதி மாலை 4 மணி முதல் 5 மணி வரை சென்னை உள்பட அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் மனிதச் சங்கிலிப் போராட்டம் அறவழியில் நடத்தப்படும்.
மாநில நலன் கருதி நடைபெறும் ஜனநாயகரீதியான மக்கள் போராட்டங்களை நசுக்கும் வகையில் குண்டர் சட்டம் பயன்படுத்துவதை உடனடியாக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள திருமுருகன் காந்தி, வளர்மதி ஆகியோரை எவ்வித நிபந்தனையும் இல்லாமல் விடுதலை செய்ய வேண்டும். கதிராமங்கலத்தில் போராடிய பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட மக்களையும் விடுதலை செய்வதுடன், ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
தீர்மானங்கள் நிறைவேற்றம்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும். கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4,500 கொள்முதல் விலை வழங்க வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரணம், வறட்சிக் காலத்தில் விவசாயத் தொழிலாளர்களுக்கு நிவாரணத் தொகை ஒவ்வொரு மாதமும் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டப்பேரவையில் சிறப்பான முறையில் செயல்பட்ட மு.க.ஸ்டாலின், துரைமுருகனுக்குப் பாராட்டு உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ரஜினி, கமல் பங்கேற்பு: முரசொலியின் பவள விழா ஆகஸ்ட் 10, 11-ஆம் தேதிகளில் சிறப்பாகக் கொண்டாடப் பட உள்ளது. இந்த விழாவில் பங்கேற்க நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என திமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com