'நீட்' தேர்வு விலக்கு விவகாரம்: பிரதமர் மோடியிடம் தமிழக அமைச்சர்கள், எம்.பி.க்கள் வலியுறுத்தல்

தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வில் (நீட்) இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் மக்களவைத்
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை மக்களவைத் துணைத் தலைவர் எம். தம்பிதுரை தலைமையில் வியாழக்கிழமை சந்தித்த தமிழக அமைச்சர்கள் டி. ஜெயக்குமார், சி. விஜயபாஸ்கர், பி. தங்கமணி, சி.வி. சண்முகம்
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை மக்களவைத் துணைத் தலைவர் எம். தம்பிதுரை தலைமையில் வியாழக்கிழமை சந்தித்த தமிழக அமைச்சர்கள் டி. ஜெயக்குமார், சி. விஜயபாஸ்கர், பி. தங்கமணி, சி.வி. சண்முகம்

தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வில் (நீட்) இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை தலைமையில் தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து அமைச்சர்கள் மற்றும் சில எம்பிக்கள் நேரில் சந்தித்தனர். அப்போது, இந்த விஷயத்தில் உரிய பரிசீலனை செய்யப்படும் என்று பிரதமர் உறுதியளித்ததாக தம்பிதுரை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் வகையில், தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாவுக்கு இன்னும் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்படவில்லை. தமிழக மாநிலப் பாடத் திட்டத்தில் படித்துள்ள மாணவர்கள் 'நீட்' தேர்வால் பாதிப்புக்குள்ளாகும் நிலை இருப்பதாகக் கூறி, இந்தத் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்குமாறு மத்திய அரசை தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மாநிலங்களவையில் புதன்கிழமை இந்த விவகாரத்தை அதிமுக, திமுக, இடதுசாரிக் கட்சிகளின் உறுப்பினர்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், நிதியமைச்சர் டி.ஜெயக்குமார், சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம், உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், மின்துறை அமைச்சர் பி.தங்கமணி ஆகியோர் புதன்கிழமை இரவு தில்லி வந்தனர்.
அவர்கள் மக்களவைத் துணைத் தலைவர் மு. தம்பிதுரை தலைமையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் வியாழக்கிழமை காலை 10.15 மணியளவில் சந்தித்தனர். அப்போது, அவர்கள் மத்திய மனித வளத் மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரையும் சந்தித்தனர். அப்போது, நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தனர். இந்தச் சந்திப்பு சுமார் 25 நிமிடங்கள் நீடித்தது.
இதைத் தொடர்ந்து, அவர்கள் நண்பகல் 12.10 மணியளவில் தில்லி சாஸ்திரி பவனில் உள்ள மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தை சந்தித்து நீட் தேர்வு விவகாரம் குறித்து பேசினர். பின்னர், நாடாளுமன்றத்திற்குச் சென்ற மு.தம்பிதுரை தலைமையிலான ஐந்து அமைச்சர்களும், அதிமுக எம்.பி.க்கள் சிலரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க அவரது அலுவலகத்துக்குச் சென்றனர். நண்பகல் 12. 45 மணிக்கு பிரதமரை சந்தித்து 'நீட்' தேர்வு விவகாரம் குறித்து எடுத்துக் கூறினர். தமிழக சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், தில்லி தமிழ்நாடு இல்ல முதன்மை உறைவிட ஆணையர் நா. முருகானந்தம், அதிமுக எம்.பி.க்கள் ஏ.நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர். பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இந்தச் சந்திப்புக்குப் பிறகு மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக புதன்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்து வலியுறுத்தினோம். இந்த நிலையில், இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு மேலும் அழுத்தம் கொடுக்கும் வகையில், தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, பிரகாஷ் ஜாவடேகர், ரவிசங்கர் பிரசாத் ஆகியோரை நேரில் சந்தித்தேன்.
தமிழக மக்களின் உணர்வுகள், மாணவர்களின் நிலைமை ஆகியவை குறித்து எடுத்துரைத்து நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் வகையில், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றிஅனுப்பிவைக்கப்பட்டுள்ள மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு வலியுறுத்தினோம்.
மேலும், தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், தமிழக அரசின் சார்பிலான சுயநிதி மருத்துவக் கல்லூரிகளிலும் 12-ஆம் வகுப்புத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். அதைப் பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர்கள் கூறினர். அதேபோல, பிரதமரிடம் கோரிக்கை மனு அளித்தோம். அவர் இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் இருப்பதாகக் கூறினார். இருப்பினும், இந்த விஷயத்தில் தேவையான நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாக அமைச்சர்களுக்கு அறிவுறுத்துவதாக நம்பிக்கை வார்த்தைகளைக் கூறியுள்ளார். இதனால், நல்ல தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
'நீட்' தேர்வு கூடாது என்பதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மிகவும் உறுதியாக இருந்தார். 'நீட்' தேர்வால் தமிழக மாநிலப் பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். 2010-இல் மத்தியில்ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான் 'நீட்' தேர்வைக் கொண்டு வருவதில் தீவிரம் காட்டியது. இந்தத் தேர்வு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு ஏதுவாக உள்ளது. அதே சமயம், தமிழக மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் இந்த விவகாரத்தில் தமிழகத்துக்கு நீதி கிடைக்கும் வகையில் மாநில முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சார்பில் அமைச்சர்கள் தில்லிக்கு வந்து மத்திய அமைச்சர்களையும், பிரதமரையும் சந்தித்துள்ளனர். 'நீட்' விஷயத்தில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதுதான் எங்களது கடமை என்றார் மு.தம்பிதுரை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com