குடிநீர் தட்டுப்பாடு எதிரொலி: தொகுதி மேம்பாட்டு நிதியில் எம்.எல்.ஏ.க்கள் 60 சதவீதம் ஒதுக்கீடு

தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில், அதனைப் போக்குவதற்காக தொகுதி மேம்பாட்டு நிதியில் பாதிக்கும் மேற்பட்ட தொகையை எம்.எல்.ஏ.-க்கள் அளித்து வருகின்றனர்.

தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில், அதனைப் போக்குவதற்காக தொகுதி மேம்பாட்டு நிதியில் பாதிக்கும் மேற்பட்ட தொகையை எம்.எல்.ஏ.-க்கள் அளித்து வருகின்றனர்.
இந்த நிதியைக் கொண்டு குடிநீர் குழாய்கள் சீரமைப்பு, ஆழ்துளை கிணறுகள் அமைப்பது போன்ற பணிகள் செய்யப்பட்டு வருவதாக பேரவைச் செயலக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால், பல்வேறு மாவட்டங்களில் குறிப்பாக ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, திண்டுக்கல் போன்ற தென் மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது.
தொகுதி நிதி: குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் எம்.எல்.ஏ.-க்களும் தங்களது பங்குக்கு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து, தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ. கூறும்போது, தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூ.2 கோடி வழங்கப்பட்டது. இப்போது அது ரூ.2.50 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. நிகழ் நிதியாண்டில் தொகுதி மேம்பாட்டுக்காக செலவிடப்பட வேண்டிய விவரங்களை எழுத்துப்பூர்வமாக அளித்துள்ளோம். அதில், 1.10 கோடிக்கும் அதிகமான தொகை குடிநீர் பிரச்னையைத் தீர்ப்பதற்காக மட்டுமே செலவிடக் கோரியுள்ளோம். குறிப்பாக, குடிநீர்க் குழாய்கள் அமைப்பது, ஆழ்துளை கிணறுகள் அமைப்பது, குடிநீர் இணைப்பு இல்லாத இடங்களில் அவற்றை ஏற்படுத்தித் தருவது போன்ற பணிகளுக்காக அந்த நிதியைச் செலவிட வேண்டுமென பரிந்துரைகளை அனுப்பியுள்ளோம் என்றார்.
சென்னையில் சிக்கல்: சென்னையைப் பொருத்தவரை பல இடங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. ஆழ்துளைகளில் தண்ணீர் இல்லாத சூழ்நிலையில் பணம் கொடுத்து லாரிகளில் குடிநீரைப் பெற்று பயன்படுத்தி வருகின்றனர்.
பணம் செலுத்தி குடிநீரைப் பெறும் சேவையை சென்னை குடிநீர் வாரியமும் மேற்கொள்கிறது. ஆனால், இதற்காக 15 முதல் 20 நாள்கள் வரை காத்திருக்க வேண்டியிருப்பதாக பொது மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பொது மக்கள் கூறுகையில், 9,000 லிட்டர் குடிநீர் கொண்ட லாரி தண்ணீருக்கு ரூ.600 வரை கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்யப்படுகிறது. ஆனால், இந்தக் குடிநீர் உரிய நேரத்தில் கிடைப்பதில்லை. இதற்கு மாறாக ரூ.3,000 வரை கூடுதலாகக் கொடுத்தால் தண்ணீர் உடனடியாக வந்து விடுகிறது. அரசு நிர்ணயித்த தொகைக்குப் பதிலாக கூடுதலாகச் செலுத்துவோருக்கு மட்டுமே குடிநீர் அளிக்கப்படுகிறது. இதற்கான மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
பிற மாவட்டங்களில் உள்ளதைப் போன்று சென்னையிலும் எம்.எல்.ஏ.-க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை முழுமையாகப் பயன்படுத்தி குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com