சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் பொன். மாணிக்கவேல் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் சிலை கடத்தல் தொடர்பாக நிலுவையில் இருக்கும் வழக்குகளை ஐ.ஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் விசாரிக்க வேண்டும்
சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் பொன். மாணிக்கவேல் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் சிலை கடத்தல் தொடர்பாக நிலுவையில் இருக்கும் வழக்குகளை ஐ.ஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிலை கடத்தலில் பணியில் உள்ள காவலர்கள் காதர் பாஷா, சுப்புராஜ் உள்ளிட்டோருக்குத் தொடர்பு இருப்பதாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்ற காவலர் எழுதிய கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு வழக்குரைஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதில், சிலை கடத்தல் குறித்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் புகார் அளிக்கப்பட்டும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிலைகளை விற்றுப் பணம் பெற்ற வழக்கில் தொடர்புடைய காவலர்கள் பதவி உயர்வு பெற்றுள்ளனர். எனவே, இவர்கள் மீதான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கோரியிருந்தார்.
இம்மனு மீதான விசாரணை நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு நிலுவையில் இருந்து வருகிறது . கடந்த முறை இந்த வழக்கு விசாரணையின் போது ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, நீதிபதி ஆர்.மகாதேவன் பிறப்பித்த உத்தரவு:
தமிழகம் முழுவதும் சிலை கடத்தல் தொடர்பாக நிலுவையில் இருக்கும் வழக்குகளை ஐ.ஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான குழுவினரே விசாரிக்க வேண்டும். அவர் தலைமையில், அவருடன் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் பணிபுரிந்த காவலர்கள் திருச்சியில் தங்கியிருந்து சிலை கடத்தல் வழக்கின் விசாரணையை முடிக்க, சிறப்பு முகாமை ஒரு வாரத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் உருவாக்கித் தர வேண்டும்.
தமிழகம் முழுவதும் நிலுவையில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு வழக்குகள் அனைத்தையும் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும். நாள்தோறும் என்ற அடிப்படையில், வழக்கு விசாரணையை விரைவாக முடிக்க வேண்டும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் மேற்கொள்ள வேண்டும்.
வெளிநாடுகளுக்கு சிலைகள் கடத்தப்பட்டிருந்தால், அதுகுறித்த விவரங்களை மத்திய அரசின் வருவாய்த்துறை, விசாரணை அதிகாரிக்கு வழங்க வேண்டும். இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் எத்தனை கோயில்கள் உள்ளன, அவற்றில் எத்தனை அர்ச்சகர்கள் பணிபுரிகின்றனர் என்ற விவரங்களை ஐ.ஜி.பொன் மாணிக்கவேலிடம், இந்து சமய அறநிலையத்துறை வழங்க வேண்டும். ஒரு அர்ச்சகரோ அல்லது நிர்வாகியோ ஒன்றுக்கும் மேற்பட்ட கோயில்களில் இருந்தால் அவர்கள் பற்றிய விவரங்களையும் வழங்க வேண்டும். சிலை கடத்தல் விவகாரத்தில் கூட்டாகச் செயல்பட்ட கே.காமராஜ், ஏ.ராமச்சந்திரன், தலைமை எழுத்தர் கே.ராஜா ஆகியோர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பந்தநல்லூர் சிலை கடத்தலில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி மீது வழக்குப் பதிவு செய்து , முதல் தகவல் அறிக்கை பிரதியை விசாரணை அதிகாரி பொன் மாணிக்கவேலிடம் ஒப்படைக்க வேண்டும்.
அரிய பொக்கிஷமான சிலைகள் நம்மிடம் உள்ளன. அந்த சிலைகளைப் பாதுகாக்க வேண்டிய கடமை இந்து சமய அறநிலையத் துறைக்கு உள்ளது. ஆனால் அத்துறை தனது கடமையில் இருந்து தவறிவிட்டிருப்பது வேதனையளிக்கிறது.
தமிழகம் முழுவதும் உள்ள சிலை பாதுகாப்பு மையங்களில், எத்தனை சிலைகள் உள்ளன , கூடுதலாக எத்தனை மையங்கள் வேண்டும் என்பதை அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த மையங்களில் எவ்வளவு சிலைகள் பராமரிக்கப்படுகிறன என்பது குறித்த குறிப்பேட்டை நான்கு வாரத்தில் கணினிமயமாக்க வேண்டும். ஒவ்வொரு கோயில்களிலும் எத்தனை சிலைகள் உள்ளன என்பதையும் கணினிமயமாக்க வேண்டும். மேலும் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கோயில்களிலும் பாதுகாப்பு அறை இருக்க வேண்டும். அவற்றை 24 மணி நேரமும் கண்காணித்து உரிய பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும்.
இதற்குத் தேவையான ஆலோசனைகளை பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழுவிடம் அரசு அதிகாரிகள் பெற வேண்டும். சிலை கடத்தல் தடுக்கப்படவும், பூஜைகளுக்கு எடுத்து செல்லப்படும் சிலைகளைக் கண்காணிக்கவும் கண்காணிப்புக் கேமிரா வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
தொல்லியல் துறை ஆணையர், ஒரு குழு அமைத்து குறிப்பிட்ட கால இடைவெளியில் சிலை பாதுகாப்பு மையத்தில் உள்ள சிலைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். மேலும் இந்த அனைத்து உத்தரவுகளையும் நிறைவேற்றியது தொடர்பான அறிக்கையை செப்டம்பர் 4-ஆம் தேதி அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் எனக் கூறி, விசாரணையை ஒத்தி வைத்து நீதிபதி ஆர்.மகாதேவன் விரிவாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com