அச்சத்தில் கோழிப் பண்ணையாளர்கள்

மத்திய அரசு கோழிப் பண்ணைகளை ஒழுங்குபடுத்த கொண்டுவரும் விதிமுறைகளால், இந்தியாவில் உள்ள சிறிய கோழிப் பண்ணைகள் அழிந்து போகும், பெரிய கோழிப் பண்ணைகள் பன்னாட்டு இறைச்சி விற்பனை
அச்சத்தில் கோழிப் பண்ணையாளர்கள்

மத்திய அரசு கோழிப் பண்ணைகளை ஒழுங்குபடுத்த கொண்டுவரும் விதிமுறைகளால், இந்தியாவில் உள்ள சிறிய கோழிப் பண்ணைகள் அழிந்து போகும், பெரிய கோழிப் பண்ணைகள் பன்னாட்டு இறைச்சி விற்பனை நிறுவனங்களின் அடிமையாகும் நிலை ஏற்படும் என கோழிப் பண்ணையாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
1 லட்சம் பண்ணைகள் மூலம் ரூ.90,000 கோடி வர்த்தகம்: இந்தியாவில் தமிழகம், ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், மகாராஷ்டிரம், பிகார், உத்தரப் பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் முட்டை மற்றும் இறைச்சிக் கோழிப் பண்ணைகள் பெருமளவில் உள்ளன. இந்த மாநிலங்களில் ஏறத்தாழ சுமார் 1 லட்சம் முட்டை மற்றும் கறிக்கோழிப் பண்ணைகள் உள்ளன. இந்த தொழிலில் ஆண்டுக்கு ரூ.90,000 கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெறுகிறது.
இந்த கோழிப் பண்ணைகளில் முட்டை மற்றும் இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழிகளை எவ்வாறு வளர்க்க வேண்டும் என்பதற்கு பொதுவான விதிமுறைகளை (மாட்டிறைச்சிக்கு விதித்துள்ள கட்டுப்பாடுகள் போன்று) மத்திய அரசு அறிவிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், முட்டை மற்றும் இறைச்சிக் கோழிப் பண்ணைத் தொழிலை ஒழுங்குபடுத்த சில ஆலோசனைகளை மத்திய சட்ட ஆணையம், மத்திய அரசுக்கு அளித்துள்ளது.
கோழிப் பண்ணைகளுக்கு கட்டுப்பாடு: இதன்படி, கோழிப் பண்ணைகளில் கூண்டுகளில் உள்ள ஒவ்வொரு கோழிக்கும் 3 சதுர அடி அளவுக்கு கூண்டில் இடம் இருக்க வேண்டும். இன்னும் 5 ஆண்டுகளில் கூண்டுகளை கோழிகளை விடும் முறையை முற்றிலுமாகக் கைவிட்டு, தரையில் விட்டு தான் கோழிகளை வளர்க்க வேண்டும் போன்ற ஆலோசனைகளை வழங்கியுள்ளது.
இதுபோல், கறிக் கோழியைப் பொருத்தவரை, வதை கூடங்கள் உள்ள இறைச்சிக் கோழிப் பண்ணைகள் மட்டுமே இறைச்சி விற்பனை செய்ய வேண்டும். இறைச்சியை பொட்டலங்களில் அடைத்து தான் விற்பனை செய்ய வேண்டும் என இறைச்சி விற்பனையாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கவும் ஆலோசனை கூறியுள்ளது.
நவீன தொழில்நுட்பத்தில் பண்ணைகள்: கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர்தான் கோழி வளர்ப்பு என்பது பண்ணைத் தொழிலாக மாறியுள்ளது. பண்ணை முறையிலான கோழி வளர்ப்பு தொழில்நுட்பம் தொடர்ந்து பல்வேறு மாற்றங்களைக் கண்டுள்ளது. அதன் விளைவு தான், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் கோழிப் பண்ணைகளில் 100 கோழிகளில் 98 கோழிகள் இயல்பான எண்ணிக்கையில்(ஆண்டுக்கு 180 முட்டை) முட்டையிடுகின்றன. கோழிப் பண்ணையாளர்கள், வங்கி கடனுதவியைத் தவிர, மத்திய, மாநில அரசுகளிடமிருந்து எந்தவிதமான உதவியையும் பெறாமல், கோழிப் பண்ணைத் தொழிலை மிக நவீன முறையில் நடத்தி வருகின்றனர்.
கோழிப்பண்ணை தொழில் அழிந்து விடும்: மத்திய அரசு கோழிப் பண்ணைகளை ஒழுங்குபடுத்த கொண்டுவரும் விதிமுறைகளால், இந்தியாவில் உள்ள சிறிய கோழிப் பண்ணைகள் அழிந்து போகும், பெரிய கோழிப் பண்ணைகள் பன்னாட்டு இறைச்சி விற்பனை நிறுவனங்களின் அடிமையாகும் நிலை ஏற்படும் என கோழிப் பண்ணயாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து நாமக்கல்லைச் சேர்ந்த முட்டை ஏற்றுமதியாளர் மற்றும் கால்நடை மருத்துவர் பி.வி.செந்தில் கூறியது: 30 ஆண்டுகளுக்கு முன்னால் பண்ணைகள் தொடங்கப்பட்டபோது, கோழிகள் தரையில் விட்டுத் தான் வளர்க்கப்பட்டன. அதில் கோழிகளுக்கு சரியான அளவு உணவு வழங்குவது, பராமரிப்பு, முட்டை சேகரிப்பு, கழிவுகளை அகற்றுவதில் உள்ள சிரமம், கோழிகளை சுகாதாரமாகப் பராமரிப்பதில் ஏற்பட்ட சவால்கள் போன்றவற்றால், கோழிகளை கூண்டில் வளர்க்கும் முறைக்கு மாறினோம்.
இதன் மூலம் கோழிகளுக்கு சரியான அளவு உணவு வழங்கப்படுதோடு, 100 சதவீதம் முறையாகப் பராமரிக்கவும் முடிகிறது. இதனால் தரையில் விட்டு வளர்க்கும் போது 80 சதவீதமாக இருந்த கோழிகளின் முட்டையிடும் திறன் 98 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும், நோய் தாக்குதல் 100 சதவீதம் தடுக்கப்படுகிறது.
முட்டைக்குப் போதிய விலை கிடைக்காதது, தீவன மூலப்பொருள்கள் விலையேற்றம், பறவைக் காய்ச்சல் நோய் பாதிப்பு போன்ற கடுமையான நெருக்கடிகளை பண்ணையாளர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் எதிர்கொண்டு இருந்தாலும், பண்ணைகளைப் பராமரிப்பதில் சமரசம் செய்து கொண்டதில்லை. பண்ணைகளை முறையாக கவனிக்காவிட்டால், இழப்பு பண்ணையாளர்களுக்கு தான்.
பன்னாட்டு நிறுவனங்களுக்கு சாதகம்: இதுபோல் இறைச்சிக் கோழிப்பண்ணைகள், வியாபாரிகளுக்கு நேரடியாக கோழிகளை விற்பனை செய்துவந்தது. இப்போது வதை கூடம் உள்ள இறைச்சி விற்பனை நிலையங்கள் மட்டுமே இறைச்சி விற்பனை செய்ய முடியும் என்ற நிலை உருவாகுமானால், இறைச்சிக் கோழிப் பண்ணைகள் பன்னாட்டு இறைச்சி விற்பனை நிறுவனங்களின் அடிமையாக மாறிவிடும் நிலை ஏற்படும்.
மத்திய சட்ட ஆணைய பரிந்துரைகள் எதுவும் அறிவியல் பூர்வமானதாக இல்லை. மேலும், இந்தக் கட்டுப்பாடுகளால் கோழி வளர்ப்பு பாதிக்கப்பட்டு கிராமப் பொருளாதாரம் பெரும் நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலை ஏற்படும். இதனால் சட்ட ஆணையத்தின் பரிந்துரைகள் எதையும், சட்டமாக்க மத்திய அரசு முயற்சி செய்யக் கூடாது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com