ராமநாதபுரம் அருகே பாகிஸ்தான் முதியவர் உள்பட 3 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடியில் பாகிஸ்தானை சேர்ந்த முதியவர் உள்பட 3 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து அவர்கள் உளவாளிகளா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பரமக்குடி நீதிமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை காவல்துறையினரால் ஆஜர்படுத்தப்பட்டு அழைத்து வரப்படும் ஏர்வாடி இளைஞர்கள். (உள்படம்) பாகிஸ்தான் முதியவர் முகம்மது யூனுஸ்.
பரமக்குடி நீதிமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை காவல்துறையினரால் ஆஜர்படுத்தப்பட்டு அழைத்து வரப்படும் ஏர்வாடி இளைஞர்கள். (உள்படம்) பாகிஸ்தான் முதியவர் முகம்மது யூனுஸ்.

ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடியில் பாகிஸ்தானை சேர்ந்த முதியவர் உள்பட 3 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து அவர்கள் உளவாளிகளா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏர்வாடியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ள முதியவர் ஒருவர் இரவு நேரங்களில் மட்டும் வெளியில் செல்வதாகவும் அவரது நடவடிக்கைகள் சந்தேகப்படும்படியாக இருப்பதாகவும் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சாதாரண உடையணிந்த போலீஸார் அவரது நடவடிக்கைகளைக் கண்காணித்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பாகிஸ்தான் கராச்சி பகுதி ஜோடியா பஜாரைச் சேர்ந்த முகம்மது யூனுஸ் (65) என்பதும் ,அவரிடம் இந்தியா வந்ததற்கான முறையான ஆவணங்கள் எதுவும் இல்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர் தங்கியிருந்த இடத்தில் போலீஸார் சோதனை நடத்தினர். இதில், அவர் பெயரில் குஜராத்தில் வசிப்பது போன்று இரு போலி ஆதார் அட்டைகள், ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் வசிப்பது போன்ற இரு போலி ஆதார் அட்டைகள் இருந்தன. மேலும் அவரிடம் பாகிஸ்தான் பணம் ரூ. 2500, இத்தாலி பணமும் இருந்தன. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர் குஜராத்தில் ஆமதாபாத், உத்தரப் பிரதேசத்தில் அஜ்மீர் தர்கா பகுதிகளில் தங்கியிருந்தது தெரியவந்தது.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இலங்கையிலிருந்து கள்ளப்படகில் புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபேட்டை வந்து அங்கிருந்து ஏர்வாடி வந்து தங்கியுள்ளார். தனக்கு, இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு வர ஏர்வாடியை சேர்ந்த அகமது மகன் அப்துல்அஜீஸ் (26), ஹாஜா அலாவுதீன் மகன் செய்யதுஅபுதாஹீர்(23) ஆகியோர் உதவியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முகம்மது யூனுஸþக்கு அப்துல் அஜீஸ் கள்ளப்படகு ஏற்பாடு செய்து கொடுத்ததும், செய்யது அபுதாஹீர் 2014 ஆம் ஆண்டு இலங்கையில் கஞ்சா கடத்தியதாக கைது செய்யப்பட்டு அந்நாட்டின் சிறையில் இருந்தவர் என்றும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அவர்களையும் போலீஸார் கைது செய்தனர்.
பின்னர் 3 பேரும் பரமக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி பிரசாத் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களிடம் விசாரணை மேற்கொண்ட நீதிபதி, சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இவர்களின் நடவடிக்கைகள் சந்தேகத்துக்கு இடமாக இருந்ததையடுத்து 3 பேரும் பாகிஸ்தான் உளவாளிகளா என பல்வேறு விசாரணை அமைப்புகள் விசாரணையைத் தொடங்கியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com