தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு: சிறையில் சித்திரவதை செய்வதாக சுகேஷ் சந்திரா புகார்

தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கைது செய்யப்பட்டு, தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர், தனக்கு சிறை அதிகாரிகள்
தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு: சிறையில் சித்திரவதை செய்வதாக சுகேஷ் சந்திரா புகார்

தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கைது செய்யப்பட்டு, தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர், தனக்கு சிறை அதிகாரிகள் சித்திரவதை செய்வதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
அதையடுத்து, சிறை நிர்வாகத்துக்கு தில்லி உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சுகேஷ் சந்திரா தனது வழக்குரைஞர் அமன் லேகி மூலமாக, தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், கூறப்பட்டுள்ளதாவது:
திகார் சிறையில் தனியறையில் அடைக்கப்பட்டிருக்கும் என்னை ஆடைகளைக் களைந்து சிறை அதிகாரிகள் சித்திரவதை செய்தனர். திகார் சிறைக்கு தமிழ்நாடு சிறப்புக் காவல் படையைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். அவர்களுடன் சேர்ந்து கொண்டு திகார் சிறை அதிகாரிகள் என்னை துன்புறுத்துகிறார்கள் என்று அந்த மனுவில் சுகேஷ் சந்திரா குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு, நீதிபதி அசுதோஷ் குமார் முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறியதாவது:
சிறை அதிகாரிகள் மீது சுகேஷ் சந்திரா சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் கடுமையானவை. எனவே, சிறைக்காவலில் உள்ள சுகேஷ் சந்திரா துன்புறுத்தப்படவில்லை என்பதை சிறை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.
அபாயகரமான குற்றவாளிகள் மட்டுமே தனிச்சிறையில் அடைத்து வைக்கப்படுவார்கள். அவர்களுக்கான சிறையில், பண மோசடி வழக்கில் கைதான சுகேஷ் சந்திராவை அடைத்து வைத்திருப்பதற்கான காரணத்தை சிறை நிர்வாகம் தெரிவிக்க வேண்டும். பாலியல் ரீதியாக அவரை துன்புறுத்துவது கவலை அளிக்கிறது. இதுபோன்ற சம்பவங்களை சகித்துக்கொண்டிருக்க முடியாது.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு சாதாரணமாக மறுப்பு தெரிவிப்பது மட்டும் போதாது. இந்த விவகாரத்தில் அனைத்து விவரங்களையும் சிறை நிர்வாகம் அளிக்க வேண்டும்.
எனவே, இதுதொடர்பாக, தில்லி ஆம் ஆத்மி அரசும், திகார் சிறையின் காவல் துறை டி.ஜி.யும் பதில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இதுதவிர, சுகேஷ் சந்திரா துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் சிறைப் பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமராவின் காட்சிப் பதிவுகளையும் சிறை நிர்வாகம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். அதையடுத்து, வழக்கு விசாரணை, ஆகஸ்ட் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இரட்டை இலைச் சின்னத்தை சசிகலா தலைமையிலான அதிமுக அம்மா அணிக்கு பெற்றுத் தருவதற்காக, தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக, பெங்களூரைச்சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரா, தில்லியில் கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
தில்லி சாணக்யபுரியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அவர் தங்கியிருந்த அறையில் இருந்து ரூ.1.3 கோடி ரொக்கம் பறிமுதல் செய்ததாகப் பின்னர் போலீஸார் தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக, அடுத்த சில தினங்களில் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும், அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவும் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே, தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரா, கடந்த மாதம் ஜாமீன் கோரியிருந்தார். அவருக்கு தில்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் மறுத்துவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com