நீட் தேர்வில் இருந்து நிச்சயம் விலக்கு: தமிழக முதல்வர் நம்பிக்கை

இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பு சேர்க்கைக்காக நடத்தப்படும் தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வில் (நீட்) இருந்து தமிழகத்திற்கு நிச்சயம் விலக்கு கிடைக்கும் என்று தமிழக முதல்வர்
தில்லி விமான நிலையத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியை வரவேற்கும் அதிமுக எம்பிக்கள்.
தில்லி விமான நிலையத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியை வரவேற்கும் அதிமுக எம்பிக்கள்.

இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பு சேர்க்கைக்காக நடத்தப்படும் தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வில் (நீட்) இருந்து தமிழகத்திற்கு நிச்சயம் விலக்கு கிடைக்கும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்தார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்த், செவ்வாய்க்கிழமை பதவியேற்க உள்ளார். இதற்கான விழா தில்லி நாடாளுமன்ற மைய அரங்கில் நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து திங்கள்கிழமை இரவு சுமார் 8 மணியளவில் தில்லி வந்தார். அவரை விமான நிலையத்தில் தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம், நாடாளுமன்ற அதிமுக குழுத் தலைவர் பி.வேணுகோபால், அதிமுக எம்பிக்கள் விஜிலா சத்தியானந்த், கே.ஆர். அர்ஜுனன், பி.நாகராஜன், தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உள்ளுறை ஆணையர்கள் ஜஸ்பீர் சிங் பஜாஜ், நா.முருகானந்தம் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இதன் பிறகு செய்தியாளர்களிடம் முதல்வர் பழனிசாமி கூறியதாவது: குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தில்லி வந்துள்ளேன். 'நீட்' தேர்வில் தமிழகத்திற்கு நிச்சயம் விலக்கு கிடைக்கும் என்பதை உறுதியாக நம்புகிறேன். பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கவும் நேரம் கேட்டுள்ளேன். அவரைச் சந்திக்க வாய்ப்புக் கிடைத்தால், 'நீட்' தேர்வு விலக்கு தொடர்பாகப் பேசுவேன். தமிழகத்தின் விவசாயிகள் நலனில் மாநில அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. தமிழக நலனுக்கு எதிரான எந்தத் திட்டத்தையும் மாநில அரசு அனுமதிக்காது என்றார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
மத்திய அமைச்சர்களுடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு: முன்னதாக, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், நிதியமைச்சர் டி.ஜெயக்குமார், சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம், உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், மின்துறை அமைச்சர் பி.தங்கமணி, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை தலைமையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோரைச் சந்தித்து நீட் தேர்வு விலக்கு விஷயத்தில் தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க உதவுமாறு கேட்டுக் கொண்டனர்.
அப்போது, தமிழக அமைச்சர்களுடன் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற அதிமுக குழுத் தலைவர் டாக்டர் பி.வேணுகோபால் ஆகியோரும் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை கூறியதாவது:
'நீட்' தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு கோரி சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்களைச் சந்தித்து, தமிழக மாணவர்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கப் போராடி வருகிறோம். இந்நிலையில், 'நீட்' தேர்வில் இருந்து விதிவிலக்கு அளிக்கும் வகையில், தமிழகத்தில் ஏற்கெனவே கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறை போல பிளஸ் டூ தேர்வு மதிப்பெண்கள்அடிப்படையில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை நடைபெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்தித்து தமிழக அமைச்சர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்களின் நலன்களுக்காகவும், அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கிலும் தமிழக அரசு தொடர்ந்து இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும், அதிமுகவும் 'நீட்' தேர்வுக்கு எப்போதும் ஆதரவு அளித்ததில்லை. 'நீட்' தொடர்பான தமிழகஅரசின் மசோதா மத்திய அமைச்சரவையில் உள்ளது. இந்த விவகாரத்தில் விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும் என்றார் தம்பிதுரை.
மாநிலங்களவையில்..: இதற்கிடையே, நிகழாண்டு 'நீட்' தேர்வில் கேள்வித்தாள் பிராந்திய மொழிகளில் வேறுமாதிரியாகவும், ஆங்கிலம், ஹிந்தி ஆகியவற்றில் வேறு மாதிரியாகவும் இருந்ததாகக் கூறப்படும் விவகாரம் குறித்து மாநிலங்களவையில் அதிமுக குழுத் தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பாக மாநிலங்களவையில் அவர் பேசுகையில், 'சீரான 'நீட்' பாடத் திட்டத்தை முதலில் அறிமுகப்படுத்த வேண்டும்' என்று வலியுறுத்தினார். பின்னர், அதிமுக உறுப்பினர்களும், திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்களும் அவையின் மையப் பகுதிக்குச் சென்று இந்த விவகாரம் தொடர்பாக குரல் எழுப்பினர். அப்போது, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா பதில் அளிக்கையில், 'இந்த விவகாரம் அரசின் பரிசீலனையில் உள்ளது' என்றார்.இதையடுத்து, உறுப்பினர்கள் தங்களது இருக்கைக்குத் திரும்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com