சேலம் எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட கட்சராயன் ஏரியை நாளை நிச்சயம் பார்வையிடுவேன்: ஸ்டாலின் அறிவிப்பு! 

ஆளுங்கட்சி மற்றும் திமுகவினருக்கு இடையே மோதல் போக்கு நிலவும் சூழலில், சேலம் எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட கட்சராயன் ஏரியை நாளை நிச்சயம் பார்வையிடுவேன் என்று திமுக செயல் தலைவர்  ஸ்டாலின்...
சேலம் எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட கட்சராயன் ஏரியை நாளை நிச்சயம் பார்வையிடுவேன்: ஸ்டாலின் அறிவிப்பு! 

சென்னை: ஆளுங்கட்சி மற்றும் திமுகவினருக்கு இடையே மோதல் போக்கு நிலவும் சூழலில், சேலம் எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட கட்சராயன் ஏரியை நாளை நிச்சயம் பார்வையிடுவேன் என்று திமுக செயல் தலைவர்  ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  

சேலம் மாவட்டம், கொங்கணாபுரம்-சங்ககிரி பிரதான சாலையில் வெட்டுக்காடு பகுதியில் சுமார் 8 ஏக்கர் 13 சென்ட் பரப்பளவில் கச்சராயன்குட்டை ஏரி உள்ளது. பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் இருந்து வந்த இந்த நீர்நிலையை, கடந்த மாதம் திமுகவினர் சீர்படுத்தினர்.

இதையடுத்து, இப்பணியை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை நேரில் பார்வையிட வருகிறார் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கான நிகழ்ச்சி ஏற்பாடுகளை, அப்பகுதி திமுகவினர் செய்து வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை அதிமுக விவசாயிகள் அணியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் கரட்டூர் மணி தலைமையில், கச்சராயன்குட்டை ஏரியின் மையப் பகுதியில் வண்டல் மண் எடுக்க முற்பட்டனர்.

அப்போது, அங்கு வந்த திமுக நிர்வாகிகள் தாங்கள் சீர்செய்த ஏரிப் பகுதியில் ஏன் பள்ளம் தோண்டுகிறீர்கள் என அதிமுகவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியதை அடுத்து, பெரும்பாலான போலீஸார் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் தாங்கள் தூர்வாரிய கச்சராயன்குட்டை ஏரியில் மண் அள்ள அனுமதி வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சேலம் மாவட்ட திமுகவினர் மகுடஞ்சாவடியில் இன்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை போலீசார் கைது செய்தனர்.  

இந்நிலையில் சேலம் எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட கட்சராயன் ஏரியை நாளை நிச்சயம் பார்வையிடுவேன் என்று சென்னையில் திமுக செயல் தலைவர்  ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'திமுக தூர்வாரிய கச்சராயன்குட்டை ஏரியில் வண்டல் மண் அள்ள அனுமதி வழங்கியது சட்ட விரோதம். இது தொடர்பாக அங்கு நிலவும் பதற்றமான சூழலை சமாளிக்க உள்துறை செயலர் முன்வர வேண்டும். சேலம் எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட கட்சராயன் ஏரியை நாளை நிச்சயம் பார்வையிட வருவேன்' என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com