தமிழக மீனவர்கள் இன்னல்களை தீர்க்க கச்சத் தீவை மீட்க வேண்டும்: பிரதமர் மோடியிடம் முதல்வர் வலியுறுத்தல்

தமிழக மீனவர்கள் தொடர்ந்து சந்தித்து வரும் இன்னல்களை தீர்க்க கச்சத் தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதல்வர்

தமிழக மீனவர்கள் தொடர்ந்து சந்தித்து வரும் இன்னல்களை தீர்க்க கச்சத் தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தினார்,.
ராமேசுவரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் மணிமண்டபம் திறப்பு விழாவில் கலந்து கொண்டுமுதல்வர் பேசியது:
நாட்டின் தென்கோடியில் உள்ள சைவ திருத்தலமான ராமேசுவரம் ராமாயணத்தால் புகழ் பெற்றதைப்போல, இப்போது அப்துல் கலாமால் புகழ் அடைந்துள்ளது. பெற்றோர் பாமரர்களாக இருந்தபோதும், வளர்ச்சி அடையாத குக்கிராமத்தில் பிறந்து உண்மை, உழைப்பு, தன்னம்பிக்கை இவற்றை மட்டுமே மூலதனமாகக் கொண்டு நாட்டின் மிகப்பெரிய பதவிகளான குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் பொறுப்புக்கு வரமுடியும் என்பதற்கு அப்துல் கலாமும், பிரதமர் நரேந்திர மோடியும் மிகச் சிறந்த உதாரணங்கள். அதனால்தான் கலாமின் மணிமண்டபத்தை பிரதமர் திறந்து வைப்பது இங்கு மிகவும் பொருத்தமானது ஆகும்.
கலாமுக்கு மணிமண்டபம் அமைக்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இடம் ஒதுக்கி கொடுத்ததுடன், அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், அறிவியல் வளர்ச்சிக்கு சிறந்த பங்களிப்பைத் தருபவர்களுக்கு கலாமின் பெயரால் ரூ. 5 லட்சம் ரொக்கம் மற்றும் 8 கிராம் தங்கப்பதக்கத்துடன் கூடிய விருதை அறிவித்தார்.
ராமேசுவரத்துக்கு கலாம் நினைவிடம், ராமநாதசுவாமி கோயில் மற்றும் அமைதியான கடல் அலை ஆகியன பெருமை சேர்க்கின்றன. அலைகள் அமைதியாக இருந்தாலும், இங்குள்ள மீனவர்கள் வாழ்க்கையில் அமைதி இல்லை. தமிழகத்தில் கடலோரத்தில் உள்ள 5 மாவட்டங்களில் 305 மீனவக் கிராமங்களில் 3 லட்சத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடி தொழிலை நம்பி உள்ளனர். தமிழக மீனவர்கள் தொடர்ந்து சந்தித்து வரும் இன்னல்களை தீர்க்க கச்சத் தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு ஆழ்கடல் மீன்பிடித் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் இழுவலை மீன்பிடி படகுக்கு பதிலாக செவுள் வலை மீன்பிடி படகு கட்டும் திட்டத்துக்கு ரூ. 1520 கோடி வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அக்கோரிக்கையை ஏற்று ரூ. 200 கோடியை பிரதமர் வழங்கியுள்ளார்.
தமிழக அரசு பங்களிப்பாக ரூ. 86 கோடியுடன் ரூ. 286 கோடியில் இத் திட்டம் செயல்படுத்தப்படும். முதல் கட்டமாக 500 படகுகள், ஆழ்கடல் மீன்பிடி படகுகளாக மாற்றப்படும். அதைத்தொடர்ந்து 3 கட்டங்களாக மொத்தம் 2500 படகுகள் பாக் வளைகுடாவில் மீன்பிடிக்கும் வகையில் மாற்றப்பட உள்ளன. இதன் மூலம் தமிழக மீனவர்கள் சந்தித்து வரும் துயரங்கள் வெகுவாகக் குறையும். அவர்களது வாழ்வாதாரமும் உயரும். மூக்கையூர் துறைமுகம் அமைக்கும் பணிக்கான மத்திய அரசின் பங்களிப்பை விரைவில் விடுவிக்க வேண்டும்.
இலங்கை அரசால் பிடித்து வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 2,664 பேரும், 357 படகுகளும் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சீரிய முயற்சி, மத்திய அரசின் தொடர் நடவடிக்கையால் மீட்கப்பட்டனர். அதேபோல, இலங்கை அரசின் பிடியில் உள்ள தமிழக மீனவர்கள் 75 பேரையும், 149 படகுகளையும் உடனடியாக விடுவிக்க இலங்கை அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
தமிழகத்தில் சுற்றுலா தலங்களை மேம்படுத்த மத்திய அரசு ரூ. 93.91 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இதில் ராமேசுவரத்துக்கு மட்டும் ரூ. 15.86 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல அம்ருத் திட்டத்தில் ரூ. 47 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. ராமேசுவரம் மக்களின் 50 ஆண்டு கனவான அரிச்சல்முனைக்கு கடற்கரை சாலை திறக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற திட்டங்களைக் கொடுத்துள்ள பிரதமருக்கும், மத்திய அரசுக்கும் தமிழக அரசு சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ராமேசுவரத்தின் குடிநீர் தேவை, தெருவிளக்கு , பாதாள சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ. 75 கோடியில் நகர வளர்ச்சித் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை சிறப்பு நிதியாக மத்திய அரசு வழங்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com