வீணையும், கீதையும் தான் மதசார்பின்மையின் பிரதிபலிப்பு: ஹெச்.ராஜா

அப்துல் கலாம் அவர்களின் சிலையில் உள்ள வீணையும், பகவத் கீதையும் தான் மதசார்பின்மையின் பிரதிபலிப்பு என ஹெச். ராஜா ஞாயிற்றுக்கிழமைகூறினார்.
வீணையும், கீதையும் தான் மதசார்பின்மையின் பிரதிபலிப்பு: ஹெச்.ராஜா

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் சொந்த ஊரான ராமேசுவரத்தில் உள்ள அவரது சொந்த ஊரான பேய்க்கரும்பில் ரூ.15 கோடி செலவில் கட்டப்பட்ட அவரது மணிமண்டபத்தை பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 27-ந் தேதி திறந்து வைத்தார். 

இந்த மணிமண்டபத்தில் இடம்பெற்ற அப்துல் கலாம் சிலைகளில் ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அதில் கலாம் அவர்கள் வீணை வாசிப்பது போன்ற சிலை வைக்கப்பட்டு அதன் அருகில் பகவத் கீதை புத்தகம் இடம்பெற்றது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

அப்துல் கலாம் சாதி, மத, இன, மொழி என அனைத்துக்கும் அப்பாற்பட்டவர். எனவே வீணை வாசிப்பது போன்றும் பகவத் கீதை இடம்பெற்றதும் தவறு என தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் அவ்விடத்தில் திருக்குறள் வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். 

இந்நிலையில், அந்தச் சிலையில் இடம்பெற்றுள்ள பகவத் கீதை அருகில் இஸ்லாமின் புனித நூலான குர்ரான் மற்றும் கிறிஸ்துவ புனித நூலான பைபிள் ஆகியவற்றை வைத்து இதனை அரசியலாக்க வேண்டாம் எனவும் கலாம் அவர்களின் அண்ணன் பேரன் சலீம் கோரிக்கை வைத்தார். 

இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா கூறியதாவது:

டாக்டர். அப்துல் கலாம் அவர்கள் கர்நாடக இசையில் மிகவும் ஈடுபாடு உள்ளவர். அவர் மிகச் சிறப்பாக வீணை வாசிக்கக்கூடியவர். அதனால் தான் அவர் வீணை வாசிப்பது போன்ற சிலை வடிவமைக்கப்பட்டது. அவர் இல்லத்திலும் இதுபோன்ற புகைப்படம் உள்ளது.

அதுமட்டுமில்லாமல் அவர் பகவத் கீதையை மிகவும் மதிக்கக்கூடியவர். மதசார்பின்மை என்பது இஸ்லாமிய பாரம்பரியத்தில் பிறந்த கலாம் அவர்கள் பகவத் கீதையை மதித்தது. நம் நாட்டின் பாரம்பிரய இசையில் மிகவும் ஈடுபாடு கொன்டவர்.

இவை அனைத்தும் ஒருங்கிணைந்த காரணமாகவே மத்திய அரசு மதசார்பின்மை தத்துவத்தை இதன்மூலம் குறிப்பிடுகிறது. இது கூட தெரியாமல் வைகோ போன்றவர்கள் பேசுவது அவர்களின் சிந்தனையில் பக்கவாதம் இருப்பதை காட்டுகிறது. 

பாரபட்சம் காரணமாகவே இதுபோன்று பேசி வருகிறார்கள். ஹிந்து கையில் குர்ரான் அல்லது பைபிள் இருந்தால் இவர்கள் ஏன் என்று கேட்க மாட்டார்கள். ஆனால் டாக்டர் கலாம் அவர்களின் கையில் வீணை இருந்தால் மட்டும் ஏன் என்று கேட்பார்கள்.

இதிலிருந்து வைகோ போன்றவர்களின் சிந்தனையில் கோளாறு இருப்பது தெரிகிறது.

நினைவு மணிமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள வீணை வாசிப்பது போன்ற அப்துல் கலாம் சிலை மற்றும் அதன் அருகில் இடம்பெற்றுள்ள பகவத் கீதை ஆகியவற்றை விம்ர்சிப்பவர்களின் சிந்தனையில் பழுது ஏற்பட்டுள்ளது. வீணையும், பகவத் கீதையும் மதசார்பின்மையின் பிரதிபலிப்பு. எனவே தான் அவை அங்கு இடம்பெற்றுள்ளன என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com