53 ஆண்டுகளுக்குப் பிறகு சாலை வசதி: தனுஷ்கோடிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

ராமநாதபுரம் மாவட்டம் முகுந்தராயர் சத்திரம் முதல் தனுஷ்கோடி வரை புதிதாக சாலை அமைக்கப்பட்டதையடுத்து சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
53 ஆண்டுகளுக்குப் பிறகு சாலை வசதி: தனுஷ்கோடிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

ராமநாதபுரம் மாவட்டம் முகுந்தராயர் சத்திரம் முதல் தனுஷ்கோடி வரை புதிதாக சாலை அமைக்கப்பட்டதையடுத்து சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

ராமேசுவரத்திலிருந்து 24 கி.மீ.தொலைவில் உள்ளது தனுஷ்கோடி. பாரதத்தின் எல்லையில், ராமர் தமது வில்லை வைத்த இடம் என்ற பொருளில் இதற்கு தனுஷ்கோடி என பெயரிடப்பட்டதாக கூறப்படுகிறது. இலங்கையுடன் வர்த்தகத் தொடர்பு கொண்டு சிறந்த தொழில் நகராக விளங்கிய தனுஷ்கோடி கடந்த 1964 ஆம் ஆண்டு புயலால் முழுவதுமாக அழிந்து போனது. தனுஷ்கோடி செல்லும் சாலைகளும் சேதமடைந்தன. இதனால், ராமேசுவரத்திலிருந்து முகுந்தராயர் சத்திரம் வரை மட்டுமே சுற்றுலாப் பயணிகள் செல்ல முடிந்தது. அதற்குப் பிறகு சாலையின் இருபுறமும் சேதமடைந்தும் கடலால் அரிக்கப்பட்டும் இருந்தன.

இந்த நிலையில் முகுந்தராயர் சத்திரத்திலிருந்து இந்தியாவின் நில எல்லையான அரிச்சல்முனை வரை செல்லும் தனுஷ்கோடி சாலையை சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு சீரமைக்கும் பணிகளை மத்திய அரசு தொடங்கியது.

மொத்தம் 9.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிதாக தார்ச்சாலை அமைக்கும் பணியை தேசிய நெடுஞ்சாலைத்துறை தொடங்கியது. இதற்காக மத்திய அரசு ரூ.75 கோடியை கடந்த 2015 ஆம் ஆண்டு ஒதுக்கியது.

சாலை அமைக்கப்பட்ட பிறகு சாலையின் இருபுறங்களிலும் காற்றின் வேகம் காரணமாக மணல் குவிந்து சாலையை முடிவிடும் சூழல் உருவானது.

இதனையடுத்து மணல் வருவதைத் தடுக்கும் வகையில் கற்களால் ஆன தடுப்பு உருவாக்கப்பட்டது. மேலும் இந்தியாவின் கடைக்கோடியாக இருப்பதால் அரிச்சல் முனை தார்ச்சாலையின் முடிவில் ஒரு தூண் அமைத்து அதன் உச்சியில் அசோகச் சக்கரத்தையும் தேசிய நெடுஞ்சாலைத்துறை வடிவமைத்துள்லது.

சாலைப் பணிகள் முடிந்த நிலையில் கடந்த 27-ஆம் தேதி பிரதமர் மோடி இந்தச் சாலையையும் திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இதனைத் தொடர்ந்து ராமேசுவரம் கோயிலுக்கு வரும் யாத்ரீகர்களும், சுற்றுலாப் பயணிகளும், கார்கள், வேன்களிலும் அரிச்சல் முனை கடற்கரை வரத் தொடங்கியுள்ளனர். ராமேசுவரம் பேருந்து நிலையத்திலிருந்து அரசுப்பேருந்துகளும் அரிச்சல்முனை வரை இயக்கப்படுகின்றன.

சுற்றுலாப்பயணிகள் கடலின் அழகை ரசிப்பதோடு அசோகச் சக்கரம் உள்ள தூண் அருகே நின்று புகைப்படங்களும், எடுத்து மகிழ்கின்றனர்.

இங்கு வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகள் சிலர் கூறுகையில், இந்தியாவின் எல்லையாக இருக்கும் இந்த தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு வந்து செல்வதே மகிழ்ச்சியாக உள்ளது என்றனர்.

மேலும், அயோத்தியில் இருந்து ராமேசுவரத்துக்கு ரயில் சேவையும் தொடங்கப்பட்டுள்ளதால், வரும் நாள்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com