டி.டி.வி. தினகரனுக்கு ஜாமீன்

'இரட்டை இலை' சின்னத்தைப் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறி தில்லி காவல்துறை தொடுத்த வழக்கில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள
டி.டி.வி. தினகரனுக்கு ஜாமீன்

'இரட்டை இலை' சின்னத்தைப் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறி தில்லி காவல்துறை தொடுத்த வழக்கில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள அதிமுக அம்மா கட்சி துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா ஆகியோரை ஜாமீனில் விடுதலை செய்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுதொடர்பாக, குற்றம்சாட்டப்பட்டுள்ள தினகரன், மல்லிகார்ஜுனா ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுக்கள் மீது தில்லி தீஸ் ஹசாரி நீதிமன்ற சிறப்பு நீதிபதி பூணம் சௌத்ரி வியாழக்கிழமை பிறப்பித்த உத்தரவு வருமாறு:
காவல் தேவையில்லை: இந்த வழக்கில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள டி.டி.வி. தினகரன், மல்லிகார்ஜுனா ஆகியோரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கத் தேவை எழவில்லை. மேலும், டி.டி.வி. தினகரன் உள்ளிட்டோரின் குரல் பதிவு தொடர்புடைய குறுந்தகடு, அவருடைய செல்லிடப்பேசி ஆகியவை காவல்துறையினரால் ஏற்கெனவே பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. லஞ்ச ஒழிப்புச் சட்டப்படி தொடுக்கப்பட்டுள்ள இந்த வழக்கில், தேர்தல் சின்னத்தை ஒதுக்க லஞ்சம் வாங்கவும் சட்டவிரோதச் செயலில் ஈடுபடவும் முயன்ற அரசு ஊழியர் யார் என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இத்தகைய சூழலில், குற்றம்சாட்டப்பட்ட தினகரன் 38 நாள்களாக சிறையில் காவலில் வைக்கப்பட்டுள்ளார். மிகப் பெரிய அரசியல் கட்சியான அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் பதவியை டி.டி.வி. தினகரன் வகித்து வருவதாலும், சமூகத்தின் மிக முக்கிய நபராக கருதப்படுவதாலும் அவர் தலைமறைவாகிவிடுவார் என்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று நீதிமன்றம் கருதுகிறது.
நிபந்தனைகள் என்ன?: எனவே, டி.டி.வி. தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா ஆகியோரை ஜாமீனில் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிடுகிறது. இருவரும் தலா ரூ.5 லட்சத்துக்கு சொந்த ஜாமீன் பத்திரங்களையும், அதே தொகைக்கு இரு நபர் உத்தரவாத ஜாமீன் பத்திரத்தையும் தாக்கல் செய்ய வேண்டும்.
நீதிமன்றக் காவலில் இருந்து வெளியே வந்ததும், இந்த வழக்கு தொடர்பான சாட்சியங்களை கலைக்கவோ, தொடர்புகொள்ளவோ இருவரும் முயற்சிக்கக் கூடாது. நீதிமன்றத்தின் முன்னனுமதி பெறாமல் இருவரும் வெளிநாடு செல்லக் கூடாது. கடவுச்சீட்டு வைத்திருந்தால் அதை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். காவல் துறையினர் எப்போது விசாரணைக்காக அழைத்தாலும் அதற்கு ஒத்துழைக்க வேண்டும் என சிறப்பு நீதிபதி பூணம் சௌத்ரி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
விடுதலையில் தாமதம்: இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி தினகரனுக்கான ஜாமீன் தொகை, அதே தொகைக்கு இரு நபர் ஜாமீன் பத்திரங்கள் ஆகியவற்றைத் தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இதனால், தினகரன் வியாழக்கிழமை விடுதலையாகவில்லை. முன்னதாக, ஜாமீன் உத்தரவு வெளியாவதையடுத்து அதிமுகவைச் சேர்ந்த அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டாக்டர் பி.வேணுகோபால், தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம், எம்எல்ஏக்கள் வெற்றிவேல், தங்கதமிழ்செல்வன் ஆகியோர் தில்லியில் முகாமிட்டிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com