ராணுவ வீரர்களுக்கான பாதுகாப்பு அம்சங்களை அதிகப்படுத்த வேண்டும்: வாசன் வலியுறுத்தல்

ராணுவ வீரர்கள் பணியில் ஈடுபட்டிருக்கும்போது குண்டு துளைக்காத வாகனம், உடைகள் போன்ற பாதுகாப்பு அம்சங்களை சரியான
ராணுவ வீரர்களுக்கான பாதுகாப்பு அம்சங்களை அதிகப்படுத்த வேண்டும்: வாசன் வலியுறுத்தல்

சென்னை: ராணுவ வீரர்கள் பணியில் ஈடுபட்டிருக்கும்போது குண்டு துளைக்காத வாகனம், உடைகள் போன்ற பாதுகாப்பு அம்சங்களை சரியான முறையில் மேலும் அதிகப்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
''இந்திய ராணுவத்தைச் சேர்ந்த வீரர்கள் நேற்று காஷ்மீர் பகுதியில் உள்ள முண்டா பகுதியில் ராணுவ வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் மறைந்திருந்த தீவிரவாதிகள் ராணுவ வாகனத்தின் மீது துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில் தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தாலுக்கா, சேப்பந்தல் பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் மணிவண்ணண் உட்பட இருவர் உயிரிழந்தனர்.

மேலும் 4 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர். இது மிகவும் வேதனைக்குரியது. இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. வீர மரணம் அடைந்த தமிழகத்தைச் சேர்ந்த மணிவண்ணன் உட்பட இரு ராணுவ வீரருக்கும் தமாகா வீர வணக்கத்தை உரித்தாக்கிக் கொள்கிறது.

மத்திய, மாநில அரசுகள் - நாட்டிற்காக உயிர் நீத்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு அதிகபட்ச இழப்பீட்டுத் தொகையும், அவரது குடும்ப உறுப்பினருக்கு அரசுப் பணியும் வழங்க வேண்டும். மேலும் படுகாயமடைந்த ராணுவ வீரர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளித்து விரைவில் அவர்கள் குணமடைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நம் நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாப்பதில் ராணுவ வீரர்களின் பணி மிகவும் போற்றுதலுக்குரியது. இவர்களை அவ்வப்போது தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள் தாக்குவதும், சுட்டுக்கொள்வதும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது. அவ்வப்போது தீவிரவாத, பயங்கரவாத, பிரிவினைவாத அமைப்புகளுக்கு ராணுவம் தக்க பதிலடி கொடுத்து, ஒடுக்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது.

இருப்பினும், நாட்டைப் பாதுகாப்பதில் ராணுவ வீரர்களின் பணியை மத்திய அரசு மிக முக்கியமாகக் கருதி அதற்காக தொடர் கண்காணிப்பு, தீவிர நடவடிக்கை ஆகியவற்றை மேலும் துரிதப்படுத்திட வேண்டும்.

மேலும் ராணுவ வீரர்கள் பணியில் ஈடுபட்டிருக்கும்போது குண்டு துளைக்காத வாகனம், உடைகள் போன்ற பாதுகாப்பு அம்சங்களை சரியான முறையில் மேலும் அதிகப்படுத்திக் கொடுக்க வேண்டும்.

எனவே, மத்திய பாஜக அரசு நாட்டில் தீவிரவாதம், பயங்கரவாதம், பிரிவினைவாதம் ஆகியவற்றை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்க வேண்டும்'' என்று வாசன் வலியுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com