தினகரன் குடும்பத்தார் கட்சியிலிருந்து ஒட்டு மொத்தமாக விலக்கி வைப்பு  அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு!

தினகரன் குடும்பத்தார்  ஒட்டு மொத்தமாக கட்சியிலிருந்து விலக்கி வைக்கப்படுகிறார்கள் என்று தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தினகரன் குடும்பத்தார் கட்சியிலிருந்து ஒட்டு மொத்தமாக விலக்கி வைப்பு  அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு!

சென்னை: தினகரன் குடும்பத்தார்  ஒட்டு மொத்தமாக கட்சியிலிருந்து விலக்கி வைக்கப்படுகிறார்கள் என்று தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை திரும்ப பெரும் முயற்சியில், தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக அம்மா அணி துணை பொதுச் செயலாளரான டி.டி.வி.தினகரன், நேற்று முன்தினம் தில்லி திகார் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியானர்.

இன்று அவர் பெங்களூரு சிறையில் உள்ள கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலாவை சந்திக்க சென்றுள்ளார்.மேலும் மீண்டும் கட்சி பணிகளை தொடர்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று காலை தலைமைச்  செயலகத்தில், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அறையில், அமைச்சர்கள் 'திடீர்' ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனையில் அமைச்சர்கள் தங்கமணி, சி.வி.சண்முகம், ராஜலக்ஷ்மி, வெல்லமண்டி நடராஜன், செங்கோட்டையன், காமராஜ், செல்லூர் ராஜு, மணிகண்டன், திண்டுக்கல் சீனிவாசன், ஓ.எஸ்.மணியன், சரோஜா, சம்பத். எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட பலரும் இடம் பெற்றனர். பின்னர் இவர்களுடன் சுகாதாரத்துறை அமைசச்சர் விஜயபாஸ்கர் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோரும் இணைந்து கொண்டனர்.  

சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த ஆலோசனைக்கு பிறகு, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இந்த 19 அமைச்சர்களும் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இந்த தொடர் ஆலோசனைகளுக்கு பிறகு அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அமைச்சர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.  அப்பொழுது ஜெயக்குமார் தெரிவித்ததாவது:

வரும் ஜூன் 14-ஆம் தேதி தமிழக சட்டசபை கூட உள்ள நிலையில் கட்சியும் ஆட்சியும் எப்படி வழி நடத்தி செல்லப்பட வேண்டும்  என்பது குறித்து முதல்வருடன் ஆலோசனை செய்தோம்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, இந்த கட்சியையும் ஆட்சியையும் நாங்கள் அவரது வழியில் வழி நடத்தி வருகிறோம். ஜெயலலிதாவின் திட்டங்களை தொடர வேண்டிய நிலையில் நாங்கள் உள்ளோம்.நான்கு ஆண்டு கால் ஆட்சியைத் தொடர வேண்டியதே எங்கள் முக்கிய இலக்கு. எனவே இதற்காக செயல்பட வேண்டிய நிலையில் உள்ளோம். 

கடந்த எப்ரல் 17-ஆம் தேதி அன்று தினகரன் அவராகவே கட்சியில் இருந்து ஒதுங்கி இருப்பதாக அறிவித்தார். எனவே அந்த அறிவிப்பின்படி அவர் செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது. கட்சி நலனுக்காக தினகரன் குடும்பத்தார் அனைவரையும் ஒட்டு மொத்தமாக கட்சியிலிருந்து விலக்கி வைப்பதாக நாங்கள் ஒன்று கூடி முடிவெடுத்துள்ளோம்.

கிளை கழகங்கள் தொடங்கி கட்சியினர் யாரும் அவரை தொடர்பு கொள்ள மாட்டார்கள். இதில் எங்களுக்கு எந்த வித குழப்பமும் இல்லை. நாங்கள் தெளிவாக இருக்கிறோம். கட்சியின் நலனே நமது பிரதான நோக்கமாகும்.

முதல்வர்  எடப்பாடி பழனிசாமி சிறப்பான முறையில் அம்மா வழியில் ஆட்சி செய்து வருகிறார். யாருடைய தயவில், யாருடைய கட்டுப்பாட்டிலும் ஆட்சியும் கட்சியும் இல்லை.  தினகரன் குடும்பத்தாரை ஒதுக்கி வைத்து நல்லாட்சி நடக்கிறது.எனவே யாருடைய பின்னணியும் இன்றி அம்மா வழியில் நல்லாட்சியைத் தொடர்வோம்.

இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்தார்.

பெங்களூரு பரப்பன அக்ராஹார சிறையில் அதிமுக  பொதுச் செயலாளர் சசிகலாவை, அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தற்சமயம் சந்தித்து பேசிவரும் நிலையில், ஜெயக்குமாரின் பேட்டியானது அதிர்வலைகளை கிளப்பி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com