பிளஸ் 1 வகுப்பில் இட ஒதுக்கீட்டு முறையில் மாணவர் சேர்க்கை: சிறுபான்மையினர் பள்ளிகளுக்கான சலுகையால் பலன் கிடைக்குமா?

பிளஸ் 1 வகுப்பில் இட ஒதுக்கீட்டு முறையில் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், சிறுபான்மையினர் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள
பிளஸ் 1 வகுப்பில் இட ஒதுக்கீட்டு முறையில் மாணவர் சேர்க்கை: சிறுபான்மையினர் பள்ளிகளுக்கான சலுகையால் பலன் கிடைக்குமா?

பிளஸ் 1 வகுப்பில் இட ஒதுக்கீட்டு முறையில் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், சிறுபான்மையினர் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகையால் முழுபலன் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய 9.82 லட்சம் மாணவர்களில் 9.26 லட்சம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதனை அடுத்து பிளஸ் 1 வகுப்புக்கான சேர்க்கை தொடங்கியுள்ளது.
பிளஸ் 2 தேர்வில் 100 சதவீத தேர்ச்சி என்ற குறிக்கோளை முன்வைத்து அனைத்து பள்ளிகளும் செயல்படுவதால், 470 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு மட்டுமே முதல் தொகுதியில் (உயிரியல் அல்லது கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல், கணிதம்) வாய்ப்பு வழங்கப்பட்டு வந்தது.
அடுத்தபடியாக, ப்யூர் சயின்ஸ் பிரிவுக்கு (இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல்) முக்கியத்துவம் அளிக்கப்பட்டதோடு, வணிகவியல் பாடப் பிரிவு (கணக்கு பதிவியல், வணிகவியல், பொருளியல்), கலைப் பிரிவு, தொழிற்கல்வி பிரிவுகள் அடுத்தடுத்த நிலையில் இருந்தன.
தனியார் பள்ளிகள் மட்டுமன்றி, அரசு உதவிபெறும் பள்ளிகளிலும், முதல் தொகுதி (பயோ-மேக்ஸ்) மற்றும் ப்யூர் சயின்ஸ் பாடப் பிரிவுகளில் சேர்வதற்கு மாணவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாகப் புகார் எழுந்தது. இந்நிலையில், அனைத்து வகை பள்ளிகளில் மேல்நிலைக் கல்வி முதலாமாண்டு மாணவர் சேர்க்கை இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் இருக்க வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, பொதுப் பிரிவினருக்கு 31 சதவீதம், பழங்குடியினர் 1, ஆதிதிராவிடர் 18, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 20, பிற்படுத்தப்பட்டோர் 3.5, பிற்படுத்தப்பட்டோர் 26.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்கவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடப் பிரிவு வாரியாக நிர்ணயம் செய்யப்பட்ட இடங்களில் பொதுப் பிரிவினருக்கான 31 சதவீத இடத்துக்கான பட்டியல் முதலில் தயாரிக்கப்பட வேண்டும். அதிலும் குறிப்பிட்ட பாடப் பிரிவுக்கு விண்ணப்பித்துள்ள அனைத்து இன மாணவ, மாணவியர் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே சேர்க்கை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் பின்னரே, அந்தந்த பிரிவினருக்கான பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம், நிகழாண்டு முதல் 480 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த மாணவர்களுக்கு மட்டுமே முதல் பாடப் பிரிவில் இடம் அளிக்கப்படும் என்ற நிலை மாறுவதற்கு வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் இட ஒதுக்கீடு சேர்க்கை முறை, சிறுபான்மையினர் பள்ளிகளுக்கு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் பொருத்தவரை, தனியார் மெட்ரிக். பள்ளிகளுக்கு இணையாக, பல மாவட்டங்களிலும் சிறுபான்மையினர் பள்ளிகள் கடந்த 20 ஆண்டுகளாக நற்பெயரை உருவாக்கியுள்ளன. இந்த சூழலில், அந்த பள்ளியில் பயின்ற மாணவருக்கே விரும்பிய பாடத்தை தேர்வு செய்யும் நிலை பல ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வருகிறது. இதனைக் கருத்தில்கொண்டு, இட ஒதுக்கீட்டு முறையில் சிறுபான்மை பள்ளிகளையும் இணைக்க வேண்டும் என்பதே பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது.
இது குறித்து கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறியது: சிறுபான்மை பள்ளிகளில் 50 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர். மற்ற பள்ளிகளில் 30 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என விதிமுறை உள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து சிறுபான்மைப் பள்ளி ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மேல்நிலைக் கல்வி முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான இட ஒதுக்கீட்டிலிருந்தும் சிறுபான்மையினர் பள்ளிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.
பெரும்பாலும், அரசு பள்ளிகளில் இந்த பிரச்னை ஏற்படுவதில்லை. சிறுபான்மையினர் பள்ளிகளிலேயே 460 மதிப்பெண்களுக்கு கூடுதலாக பெற்ற மாணவர்களால் விரும்பிய பாடத்தை தேர்வு செய்ய முடியாத நிலை உள்ளது. தற்போது, அந்த பள்ளிகளுக்கு விதிவிலக்கு அளித்துவிட்டு இடஒதுக்கீட்டு முறையை நடைமுறைப்படுத்துவதால், முழுமையான பலன் கிடைக்கப் போவதில்லை என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com