இரு அணிகளும் இணைய 2 மாத கால அவகாசம்

அ.தி.மு.க.வைச் சேர்ந்த இரு அணிகளும் இணைய 2 மாத கால அவகாசம் கொடுப்போம் என அதிமுக அம்மா அணி பொதுச் செயலர் சசிகலா தெரிவித்ததாக அக்கட்சியின் துணைப் பொதுச் செயலர்
இரு அணிகளும் இணைய 2 மாத கால அவகாசம்

அ.தி.மு.க.வைச் சேர்ந்த இரு அணிகளும் இணைய 2 மாத கால அவகாசம் கொடுப்போம் என அதிமுக அம்மா அணி பொதுச் செயலர் சசிகலா தெரிவித்ததாக அக்கட்சியின் துணைப் பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன் திங்கள்கிழமை பெங்களூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
'இரட்டை இலை' சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாகத் தொடரப்பட்ட வழக்கில் தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த டி.டி.வி.தினகரன் 40 நாள்களுக்குப் பின்னர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். தில்லியில் இருந்து அண்மையில் சென்னைக்கு திரும்பினார்.
இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரத்தில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை தினகரன் திங்கள்கிழமை சுமார் ஒரு மணி நேரம் சந்தித்துப் பேசினார்.
அப்போது அரசியல் நிலவரம், தமிழக அரசின் செயல்பாடுகள், அதிமுக உள்கட்சிப் பிரச்னைகள் குறித்து அவர் பேசினார். மேலும், தான் கைது செய்யப்பட்டது, கட்சியில் தனக்கு எதிராக நடைபெற்ற சதி உள்ளிட்ட அரசியல் நடவடிக்கைகளையும் தினகரன் விவரித்திருக்கிறார். சந்திப்பின்போது தினகரனின் மனைவி அனுராதா, இரு உறவினர்கள் உடனிருந்தனர். இதுகுறித்து தினகரன் செய்தியாளர்களிடம் கூறியது:
இரு அணிகளும் இணைந்து செயல்பட வேண்டும்: அதிமுக, தமிழக அரசில் நடந்துவரும் நிகழ்வுகள் குறித்து எடுத்துரைத்தேன். கடந்த ஏப்ரலில் சில அமைச்சர்கள் தங்கள் சுய பயத்தால் என்னை (தினகரன்) கட்சிப் பணியில் இருந்து ஒதுங்கியிருக்குமாறு கேட்டுக் கொண்டனர். இதன்பின்னர், 45 நாள்கள் கடந்தபிறகு எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இரு அணியினரும் ஒருவரையொருவர் தாக்கிப் பேசி வருகிறார்கள். இதன்மூலம் கட்சிக்கும், ஆட்சிக்கும் பின்னடைவை ஏற்படுத்தி வருகிறார்கள். அவர்கள் சொன்னபடி இரு அணியினரும் ஒன்றாக இணைய 2 மாதங்கள் கால அவகாசம் கொடுப்போம் என்று சசிகலா கேட்டுக்கொண்டார். அதற்குள் அவர்களின் பயம் தெளிந்து சசிகலா தலைமையின் கீழ் செயல்படுவார்கள் என்று நம்புவோம்.
இல்லையெனில், 2 மாதங்களுக்கு பின்னர் எப்படிச் செயல்பட வேண்டும் என்று சசிகலா கூறியிருக்கிறார். அதுவரை அதிமுகவினரை வழக்கம்போல சந்திப்பேன். இரு அணியினரும் இணைந்து செயல்பட வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாகும்.
அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்த அனுமதிக்க மாட்டோம்: இரட்டை இலை சின்னம் கிடைத்து, வெற்றி பெறுவதற்காக ஒதுங்கியிருக்கக் கேட்டுக்கொள்கிறார்கள். அதிமுகவுக்கு பின்னடைவு ஏற்பட்டால், அதைத் தடுக்க எங்களுக்குத் தெரியும். அப்போது சசிகலா கூறியுள்ளபடி, நாங்கள் செயல்படுவோம். அதிமுகவைக் காப்பாற்ற வேண்டும் என்பதே முக்கியம். அதற்கு பின்னடைவை ஏற்படுத்த ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றார்.
பேட்டியின்போது, எம்எல்ஏக்கள் இன்பதுரை, தங்க.தமிழ்ச்செல்வன், வெற்றிவேல், பார்த்திபன், சுப்பிரமணியன், ஜக்கையன், ஜெயந்தி, பாலசுப்பிரமணியன், ஏழுமலை, தங்கதுரை, கதிர்காமம், மக்களவை உறுப்பினர் நாகராஜ், கட்சியின் கர்நாடக மாநிலச் செயலர் வா.புகழேந்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com