சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டம் தாற்காலிகமாக வாபஸ்

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வந்த விவசாயிகளின் போராட்டம் தாற்காலிகமாக திரும்பப் பெறப்படுவதாக அய்யாக்கண்ணு அறிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டம் தாற்காலிகமாக வாபஸ்


சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வந்த விவசாயிகளின் போராட்டம் தாற்காலிகமாக திரும்பப் பெறப்படுவதாக அய்யாக்கண்ணு அறிவித்துள்ளார்.

கரும்பு நிலுவைத் தொகையை வழங்குதல், விவசாய வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் நேற்று சென்னை சேப்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டதால் சேப்பாக்கம் வாலாஜா சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், தமிழக முதல்வர் பழனிசாமியை அய்யாகண்ணு இன்று காலை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக முதல்வர் உறுதி அளித்ததாகக் கூறப்படுகிறது.

முதல்வரை சந்தித்து விட்டு வெளியே வந்த அய்யாகண்ணு, விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக முதல்வர் உறுதி அளித்திருப்பதை அடுத்து, போராட்டம் தாற்காலிகமாக திரும்பப் பெறுவதாக அறிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், தமிழக விவசாயிகள் பெற்ற விவசாய வங்கிக் கடன்களை 2 மாதத்துக்குள் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும், 4 வருடமாக வழங்கப்படாத கரும்பு நிலுவைத் தொகையை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.

ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும், அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் உறுதி அளித்துள்ளார்.

எனவே, முதல்வரின் உறுதிமொழியை ஏற்று நேற்று தொடங்கிய விவசாயிகளின் போராட்டத்தை தாற்காலிகமாக திரும்பப் பெறுகிறோம். ஆனால், 2 மாதத்துக்குள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்று என்றும் அய்யாகண்ணு கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com