கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு: மாணவ, மாணவியர் உற்சாகம்

கோடை விடுமுறைக்கு பின் புதுச்சேரியில் இன்று அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டன.

கோடை விடுமுறைக்கு பின் புதுச்சேரியில் இன்று அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனால் மாணவ, மாணவியர் உற்சாகமுடன் பள்ளிக்கு சென்றனர்.

புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் முதலே கடும் வெயில் கொளுத்தி வந்தது. இந்நிலையில் பொதுத்தேர்வுகள், முழு ஆண்டுத் தேர்வுகள் முடித்து பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது.

இந்நிலையில் கோடைக்காலத்தில் கடும் வெயில் வீசியது. புதுவையில் 106 டிகிரி வரை வெப்பம் கொளுத்தியதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள். மதிய வேளைகளில் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. இந்நிலையில் பள்ளிகளின் கோடை விடுமுறை முடிந்து பள்ளி ஜூன் 1-ம் தேதி திறப்பதாக இருந்தது.

பின்னர் கோடை வெப்பத்தின் தாக்கத்தால் 6-ம் தேதி திறக்கப்படும் என கல்வித்துறை அறிவித்தது. இதற்கிடையே புதுச்சேரியில் தொடர்ந்து கடும் வெயில் கொளுத்தியதால் பள்ளிகள் திறக்கும் தேதியை மேலும் நீட்டிக்க வேண்டும் என சட்டப்பேரவையில் பல்வேறு கட்சிகள் வலியுறுத்தின.

அதன் தொடர்ச்சியாக 12-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் அறிவித்தார்.

அதன்படி திங்கள்கிழமை புதுச்சேரி, காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறந்தன. மாணவ, மாணவியர் புதிய சீருடை, புத்தகப் பைகளுடன் உற்சாகமாக பள்ளிகளுக்கு சென்றனர்.

பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதால் கடந்த ஒன்றரை மாதங்களாக புதுவையில் குறைந்து காணப்பட்ட போக்குவரத்து நெரிசல் மீண்டும் ஏற்படத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com