24 மணி நேரத்தில் புதிய மின் இணைப்பு: புதிய திட்டம் தொடக்கம்

வீடு மற்றும் வணிக பயன்பாட்டுக்கு 24 மணி நேரத்தில் மின் இணைப்பைப் பெறும் புதியத் திட்டத்தை தமிழக மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி திங்கள்கிழமை தொடங்கினார்.
24 மணி நேரத்தில் புதிய மின் இணைப்பு: புதிய திட்டம் தொடக்கம்

வீடு மற்றும் வணிக பயன்பாட்டுக்கு 24 மணி நேரத்தில் மின் இணைப்பைப் பெறும் புதியத் திட்டத்தை தமிழக மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி திங்கள்கிழமை தொடங்கினார்.
இந்தத் திட்டத்தின்படி, புதிய மின் இணைப்பு கோரும் வீடுகள் மற்றும் வணிகக் கட்டடங்கள் மின்பகிர்மானப் பெட்டியிலிருந்து 100 அடி தூரத்துக்குள் இருந்தால், விண்ணப்பித்த 24 மணி நேரத்துக்குள் இணைப்பு வழங்கப்படும்.
மின் இணைப்பு கோரும் இடம் புதைவடம் இருக்கும் பகுதியில் இருந்தால் விண்ணப்பித்த 48 மணி நேரத்துக்குள் இணைப்பு வழங்கப்படும். இந்தத் திட்டம் அடுக்குமாடி குடியிருப்புகள், பலமாடி வணிகக் கட்டடங்களுக்குப் பொருந்தாது.
எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பிப்போர் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் www.tangedco.gov.in   என்ற இணையதளத்தின் மூலமாகவோ, அந்தந்தப் பகுதி மின்வாரிய அலுவலகத்தில் நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம். இணையதளத்தில் விண்ணப்பிப்போர், விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பத்தின் நிலை குறித்து இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
புதைவடப் பகுதியில் உள்ள விண்ணப்பதாரருக்கு, மதிப்பீட்டுக் கட்டணம் ஏதாவது இருந்தால் அதனை முதல் மின்பயன்பாட்டு கட்டணத்தோடு சேர்த்துக் கட்ட வேண்டும். இந்த மதிப்பீட்டுக் கட்டணமானது விண்ணப்பதாரருக்கு மின் அஞ்சல், குறுஞ்செய்தி அறிவிப்பு மூலம் தெரிவிக்கப்படும்.
பொருள்கள் வழங்க வேண்டாம்: புதிய இணைப்பைப் பெறுவதற்கு விண்ணப்பதாரர் புதைவடம் மற்றும் இதரப் பொருள்களை வழங்கத் தேவையில்லை. விண்ணப்பாதர்கள் இது தொடர்பான புகார்களை மின்வாரிய கணிகாணிப்புப் பிரிவுத் தலைவருக்கு adgp@tnebnet.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது 044 - 2852 0416 என்ற தொலைபேசி எண்ணுக்கு அனுப்பலாம்.
இந்தத் திட்டத்தின் தொடக்க விழா சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. திட்டத்தைத் தொடங்கி வைத்து அமைச்சர் தங்கமணி பேசியது: தமிழகம் கடந்த 2 ஆண்டுகளாக மின்மிகை மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது. மின்சார நிலையங்களில் பாராமரிப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தமிழகத்தைப் பொருத்தவரை 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உபரியாக உள்ளது.
கூடங்குளத்தில் தயாரிக்கப்படும் மின்சாரத்தைத் தமிழகத்துக்கு முழுமையாக வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
அனுமதியின்றி மின்சாரத்தை பயன்டுத்தி விதிமீறலில் ஈடுபட்டு வருவோர் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அண்மையில் விதிமீறிலில் ஈடுபட்டோருக்கு ரூ.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றார்.
மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் எம்.சாய்குமார் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
குறுந்தகவல் மூலம் மின்தடை அறிவிப்பு!
குறுந்தகவல் மூலம் வாடிக்கையாளர்களுக்கு மின்தடை குறித்த அறிவிப்பை அனுப்பும் 'மின்சார நண்பன்' என்ற திட்டமும் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
மத்தியஅரசின் உர்ஜா மித்ரா திட்டத்தின் அடிப்படையில் இது தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, கிராமப்புற மர்றும் நகப்புறங்களில் உள்ள மின்நுகர்வோர்களுக்கு அந்தந்தப் பகுதிக்கான திட்டமிட்ட மின்தடை குறித்த அறிவிப்பு செல்லிடப்பேசியில் குறுந்தகவலாக அனுப்பப்படும்.
இதற்காக தமிழகத்தில் உள்ள 1.6 கோடி வாடிக்கையாளர்களின் செல்லிடப்பேசி எண்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. மின்தடை ஏற்படுவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பு குறுந்தகவல் அனுப்பப்படும். குடியிருப்புப் பகுதிகளில் ஏற்படும் மின்தடை குறித்த விவரங்கள் மட்டுமே மின்நுகர்வோருக்கு அனுப்பப்படும். வணிக நிறுவனங்களுக்கு இந்தத் திட்டம் பொருந்தாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com