சசிகலா அணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் விலை போனார்களா..?

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பு கூவத்தூர் நட்சத்திர விடுதியில் வைத்து அதிமுக
சசிகலா அணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் விலை போனார்களா..?

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பு கூவத்தூர் நட்சத்திர விடுதியில் வைத்து அதிமுக எம்எல்ஏக்களை சசிகலா அணியினர் பேரம் பேசியதை டைம்ஸ் நவ் தொலைக்காட்சி அம்பலப்படுத்தியுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என பிளவு ஏற்பட்ட பின்னர், அந்தக் கட்சியின் பொதுச் செயலர் வி.கே.சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தை அடுத்த கூவாத்தூரில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் கடந்த பிப்ரவரி 8 -ஆம் தேதி முதல் 11 நாட்கள் தங்க வைக்கப்பட்டனர். எம்.எல்.ஏ.க்கள் அவர்களின் விருப்பத்துக்கு மாறாக அந்த விடுதியில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு கூறப்பட்டு வந்தது. இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டதுடன் பல காட்சிகள் அரங்கேறியது.

இதையடுத்து பிப்ரவரி 18-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை மீது நம்பிக்கை வாக்கெடுப்புக்கான பேரவை சிறப்புக்கூட்டம் சனிக்கிழமை காலை 11 மணிக்கு தொடங்கியது. இதற்காக நட்சத்திர விடுதியில் தங்கவைக்கப்பட்டிருந்த அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் அமைச்சர்களின் காரில் பலத்த பாதுக்காப்புடன் பேரவைக்கு அழைத்துவரப்பட்டனர்.  
 
பின்னர், அதிமுக எம்எல்ஏக்கள் தங்கியிருந்த தனியார் நடச்சத்திர விடுதி பராமரிப்பு பணி காரணமாக விடுதியை தற்காலிகமாக  மூடுவதாக விடுதி நிர்வாகம் அலறிக்கொண்டு அறிவித்தது.

நம்பிக்கை வாக்கெடுப்பில் 122 எம்எல்ஏக்களின் ஆதரவு சசிகலா தலைமையிலான எடப்பாடி பழனிசாமிக்கு இருப்பதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். இதற்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதையடுத்து நாள்தோறும் அதிமுகவில் பல அதிரடி காட்சிகள் அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில், டைம்ஸ் நவ் தொலைக்காட்சி அதிமுக எம்எல்ஏக்களை கூவத்தூர் நட்சத்திர விடுதியில் தங்கவைத்து சசிகலா அணியினர் பேரம் பேசியது தொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ளது.

கூவத்தூர் நட்சத்திர விடுதியில் இருந்து தப்பி வந்த ஓபிஎஸ் அணியை சேர்ந்த மதுரை தெற்கு எம்எல்ஏ சரவணன் பேசிய வீடியோவை டைம்ஸ் நவ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

அதில், எம்எல்ஏ சரவணன், புறப்படும்போது 2 கோடி தருவதாக சொன்னார்கள். பிறகு அது 4 கோடி ஆகி இறுதியில் கூவத்தூர் விடுதியை அடைந்த போது 6 கோடி ஆகிவிட்டதாக கூறினார். என்னடா, இது கூடிக்கொண்டே போகிறது என்று நினைத்தேன். பின்னர், பணமாக கொடுக்க முடியாது. அதனால் தங்கக்கட்டிகளாக வாங்கிக் கொள்ளுங்கள் என்றார்கள். பணமாகக் கொடுத்தாலும் தங்கம்தான் வாங்கப் போகிறோம்; தங்கமாகவே கிடைத்துவிட்டால் நல்லதுதானே என்று வீட்டுக்கு ஃபோன் போட்டு தகவலை சொல்லிவிட்டேன் என்றும் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார் எம்எல்ஏ சரவணன்.

மேலும், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக கட்சியில் நீண்ட நாட்களாக அங்கம் வகிக்கும் கோவை சூலூர் எம்எல்ஏ ஆர்.கனகராஜ் இடம்பெற்றுள்ள வீடியோவும் வெளியாகியுள்ளது.

அதிமுகவின் ஒவ்வொரு எம்எல்ஏவுக்கும் சசிகலா அணி சார்பில் ரூ.6 கோடி வரை கொடுக்க முன் வந்ததும், அவ்வளவு பணம் ஏற்பாடு செய்ய முடியாத பட்சத்தில் தங்க கட்டிகளாக கொடுப்பதாகவும் கூறியுள்ளனர்.

இதில், காங்கேயம் தொகுதி எம்எல்ஏ தனியரசு, நாகப்பட்டினம் தொகுதி எம்எல்ஏ தமிமுன் அன்சாரி மற்றும் எம்எல்ஏ கருணாஸ் மட்டும் 10 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றனர் என்றும், மற்ற யாருக்கும் ரூ.1 கோடி கூட கிடைக்கவில்லை என்று எம்எல்ஏ சரவணன் வருத்தமாக மூன் டிவி நிர்வாக இயக்குநருடன் கூவத்தூரில் நடந்தது குறித்து பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.

சூலூர் எம்எல்ஏ கனகராஜ் சசிகலா அணியினர் பணம் மற்றும் தங்கம் தருவதாக கூறினர் என்றும் வீடியோவில் பேசியுள்ளார்.

அதிமுக எம்எல்ஏக்கள் பன்னீர்செல்வம் பக்கம் செல்வதை தடுக்க, சசிகலா தரப்பினர் கூவத்துாரில் தனியார் நட்சத்திர விடுதியில் அதிமுக எம்எல்ஏக்களை தங்க வைத்து, அங்கு அவர்களுக்கு 6 கோடி ரூபாய் தர, சசிகலா குடும்பத்தினர் முன் வந்ததாக, மதுரை வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ சரவணன் கூறும் வீடியோ காட்சிகள் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக, அது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சமூக வலைதளங்களில் அதிகம் பரப்பப்பட்ட அந்த வீடியோ வைரலாக பரவி அகில இந்தியளவில் டிரெண்ட் வருகிறது.

இந்நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் பணம் பெற்றதாக வெளியான தகவல் குறித்து விசாரணை தேவை என்று பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன் வலியுறுத்தி உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com