விமான நிலையம், ராணுவ கேன்டீன்களில் மது விற்பனைக்குத் தடை கோரி வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

விமான நிலையங்கள், ராணுவ கேன்டீன்களில் மது விற்க வழங்கப்பட்ட உரிமங்களை ரத்து செய்யக் கோரும் மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை

விமான நிலையங்கள், ராணுவ கேன்டீன்களில் மது விற்க வழங்கப்பட்ட உரிமங்களை ரத்து செய்யக் கோரும் மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த எல்.அப்சர் உசேன் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் மது விற்பனைக்கு 11 வகையான உரிமங்கள் வழங்கப்படுகின்றன. உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து தமிழகத்தில், எஃப்.எல்.2, எஃப்.எல்.3, எஃப்.எல்.3ஏ, எஃப்.எல்.3ஏஏ ஆகிய உரிமங்கள் பெற்ற மதுக்கடைகளை மட்டும் மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆனால், தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் விமான நிலையங்கள், ராணுவ கேன்டீன்கள் உள்ளிட்டவற்றில் மது விற்பனைக்கு எஃப்.எல்.4ஏ, எஃப்.எல்.5, எஃப்.எல்.7, எஃப்.எல்.9, எஃப்.எல்.10 ஆகிய உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மதுக் கடைகளை மூடுவதற்கு எவ்வித உத்தரவும் தமிழக அரசு பிறப்பிக்கவில்லை. மது போதையால் நடக்கும் விபத்துக்களை தடுப்பதே உச்சநீதிமன்ற உத்தரவின் நோக்கம். ஆனால், தமிழக அரசின் இந்த நடவடிக்கை உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உள்ளது. எனவே நெடுஞ்சாலைகளில் உள்ள விமான நிலையங்கள், ராணுவ கேன்டீன்கள் உள்ளிட்டவற்றில் மது விற்பனை செய்வதற்கான உரிமங்களை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஏ.செல்வம், என்.ஆதிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுவுக்கு தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலர், டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டனர். விசாரணை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com