சிசுவின் பாலினத்தைத் தெரிவித்த அரசு மருத்துவரை பிடிக்க உதவிய கர்ப்பிணிகள்

சிசுவின் பாலினத்தை தெரிவித்த அரசு மருத்துவரைக் கைது செய்ய மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்க அதிகாரிகளுக்கு இரண்டு கர்ப்பிணிகள் உதவி செய்தனர்.
சிசுவின் பாலினத்தைத் தெரிவித்த அரசு மருத்துவரை பிடிக்க உதவிய கர்ப்பிணிகள்


சிசுவின் பாலினத்தை தெரிவித்த அரசு மருத்துவரைக் கைது செய்ய மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்க அதிகாரிகளுக்கு இரண்டு கர்ப்பிணிகள் உதவி செய்தனர்.

கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை வெளியில் தெரிவித்ததற்காக முன்னாள் அரசு மருத்துவரை கையும் களவுமாகக் கைது செய்த மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் டாக்டர் ஏ.தண்டபாணி என்பவர் அந்தப் பகுதியில் மகப்பேறு மருத்துவமனை மற்றும் ஸ்கேன் பரிசோதனை மையத்தை நடத்தி வந்தார். அறுவைச் சிகிச்சை நிபுணரான இவர், அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றியவர்.

இவரது மருத்துவமனையில், கருவில் உள்ள சிசுவின் பாலினத்தைக் கண்டறிந்து தெரிவிப்பதாக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்துக்கு புகார் வந்தது.

இதனையடுத்து இயக்ககத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குறிப்பிட்ட மருத்துவமனைக்கு சோதனைக்குச் சென்றனர். அவர்களுடன் இரு கர்ப்பிணிகளையும் உடன் அழைத்துச் சென்றனர்.

இதனையடுத்து தண்டபாணி, கர்ப்பிணிகளில் ஒருவருக்கு ஸ்கேன் செய்து பாலினத்தைத் தெரிவித்துள்ளார். அவரிடம் ரூ.3 ஆயிரம் கட்டணமாகப் பெறப்பட்டுள்ளது. மற்றொரு கர்ப்பிணியிடம் கருவில் குழந்தை இன்னும் வளரவில்லை. எனவே, அடுத்த மாதம் வந்து ஸ்கேன் செய்து கொள்ளுமாறு கூறி ரூ.1,500 கட்டணம் பெற்றுள்ளார். மீதிக் கட்டணத்தை அடுத்த மாதம் பரிசோதனைக்கு வரும்போது செலுத்துமாறு கூறியுள்ளார்.

இதனையடுத்து, பெண்களுடன் சென்ற அதிகாரிகள் அவரைக் கையும் களவுமாகப் பிடித்து, நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இது தொடர்பாக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அதிகாரிகள் கூறுகையில், இந்த மருத்துவரின் மனைவி மகப்பேறு நல மருத்துவர். இவரது பெயரில் அனுமதி பெறப்பட்டுள்ளது. இவர்களது மருத்துவமனையில் ஏராளமான கருச்சிதைவு மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. எனவே, இவர் சட்டவிரோதமாக கருக்கலைப்புகளையும் செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
மருத்துவமனையில் இருந்த ஸ்கேன் கருவி பறிமுதல் செய்யப்பட்டது. மருத்துவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் அவரின் உரிமம் தாற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

மேலும் நாமக்கல், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் கருவில் உள்ள சிசுவின் பாலினத்தைத் தெரிவிப்பதாக பல்வேறு புகார் வந்துள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com