ஆட்சிக் கவிழ்ந்தால் பதவியைப் பிடித்து விடலாம் என நினைக்கிறார் மு.க.ஸ்டாலின்: ஓபிஎஸ்

ஆட்சிக் கவிழ்ந்தால் பதவியைப் பிடித்து விடலாம் என மு.க.ஸ்டாலின் நினைக்கிறார். அதற்கு மக்கள் ஒருபோதும் விட மாட்டார்கள்
ஆட்சிக் கவிழ்ந்தால் பதவியைப் பிடித்து விடலாம் என நினைக்கிறார் மு.க.ஸ்டாலின்: ஓபிஎஸ்

திருநெல்வேலி: ஆட்சிக் கவிழ்ந்தால் பதவியைப் பிடித்து விடலாம் என மு.க.ஸ்டாலின் நினைக்கிறார். அதற்கு மக்கள் ஒருபோதும் விட மாட்டார்கள் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

அதிமுக (புரட்சித் தலைவி அம்மா அணி) சார்பில் பாளையங்கோட்டையில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசியது:

அதிமுகவின் வெற்றிக்கு இம் மாவட்ட மக்கள் பெரிதும் உதவியுள்ளனர். அதிமுக நிறுவனர் தலைவர் எம்.ஜி.ஆர்., முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் கட்சியை தொண்டர்கள் இயக்கமாக உள்ளது. ஆனால், அந்த நோக்கத்தை மாற்றப் பார்க்கிறார்கள். அதனை எதிர்த்து தர்மயுத்தம் நடத்தப்பட்டு வருகிறது. உண்மையான தொண்டர்களும், மக்களும் புரட்சித்தலைவி அம்மா அணிக்கு ஆதரவு அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

எம்ஜிஆர் கட்சியை தொடங்கிய போது உடனிருந்த தலைவர்கள், தொண்டர் கள் இன்று நம்பக்கம் இருக்கின்றனர். இந்த இயக் கத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்கு இங்கு கூடி உள்ளனர்.

2011 ஆம் ஆண்டு சசிகலா உள்பட அவரது குடும்பத்தினர் 16 பேரை ஜெயலலிதா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கிவிட்டார். 3 மாதம் கழித்து சசிகலா திரும்பி வந்த போது, ஜெயலலிதா உதவியாளராக மட்டுமே சேர்த்துக் கொண்டார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள், ஜெயலலிதா மரணம் வரை கட்சியில் சேர்க்கப்படவில்லை. ஆனால், அவர்கள் தற்போது பொதுச் செயலாளர், துணை பொதுச் செயலாளர் ஆகிக் கொண்டனர். அத்தகைய துர்பாக்கிய நிலை ஏற்பட்டு விட்டது.

அத்தகைய கும்பலிடம் இருந்து கட்சியை காப்பாற்றவே இந்த தர்ம யுத்தம் நடக்கிறது. ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்ம முடிச்சு அவிழும் வரை இந்த தர்மயுத்தம் தொடரும் என்று நாட்டு மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனது பதவிக்காலத்தில் மக்கள் போற்றும் பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தினார்.

முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி பல லட்சம் கோடி முதலீடுகளுக்காக புரிந்துணர்வு ஒப்பந்தகளை ஏற்படுத்தினார். ஆனால், அவற்றை முறையாக செயல்படுத்தி வேலைவாய்ப்பை அதிகரிக்க இப்போதைய அரசு தவறிவிட்டது.

தனியார் மோட்டார் தொழிற்சாலையால் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெறும் சூழல் இருந்த நிலையில் ஆந்திராவுக்கு அந்த நிறுவனம் செல்லும் வகையில் செயல்பட்டுவிட்டனர். அம்மா குடிநீர் தாராளமாக கிடைக்கவில்லையெனவும், அம்மா உணவகங்களில் உணவுப் பொருள்கள் முன்பைப்போல தரமில்லையெனவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டும் நிலை உருவாகியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திட்டங்கள் மீது அக்கறையில்லாத அரசாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது.

இதேபோல ஆட்சிக் கவிழ்ந்தால் பதவியைப் பிடித்து விடலாம் என மு.க.ஸ்டாலின் நினைக்கிறார். அதற்கு மக்கள் ஒருபோதும் விட மாட்டார்கள். தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தல் போன்ற எதை நடத்தினாலும் புரட்சித்தலைவி அம்மா அணி வெற்றி பெறும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

சென்னையில் விரைவில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா சிறப்பாக நடத்தப்படும். கவியரங்கம், கருத்தரங்கம் போன்றவற்றுடன் கட்சியின் ஆரம்பகால தொண்டர்கள், உயிர்நீத்த தொண்டர்களின் குடும்பத்தினர் பாராட்டப்பட உள்ளனர். இந்த விழாவில் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்க உள்ளார். தமிழகத்தில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் புகழ் எப்போதும் மங்காத வகையில் மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தவும், மாவட்டங்கள்தோரும் ஜெயலலிதாவின் திருவுருவச் சிலைகளை நிறுவவும் பாடுபடுவோம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com