அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ராஜிநாமா செய்யவேண்டும்: பால் முகவர்கள் கோரிக்கை

தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தனது அமைச்சர் பதவியை உடனடியாக ராஜிநாமா செய்ய வேண்டும்
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ராஜிநாமா செய்யவேண்டும்: பால் முகவர்கள் கோரிக்கை

சென்னை: தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தனது அமைச்சர் பதவியை உடனடியாக ராஜிநாமா செய்ய வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அண்மையில், தமிழகத்தில் தனியார் பால் நிறுவனங்கள், பால் கெட்டுப் போகாமல் இருக்க பாலில் 'ஃபார்மால்டிஹைடு' என்ற வேதிப் பொருள் கலப்பதாக, தமிழக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றஞ்சாட்டியிருந்தார்.

அமைச்சரே இப்படி ஒரு குற்றச்சாட்டைத் தெரிவித்ததால், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள், தனியார் பாலை வாங்க அஞ்சியதுடன், குழந்தைகளுக்குப் பால் வாங்கிக் கொடுக்கக்கூட அஞ்சும் நிலைமை உருவானது. தனியார் பால் நிறுவனங்களின் மாதிரியைச் சோதனைக்கு அனுப்பியிருப்பதாகவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருந்தார்.

இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மேலும், பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 272-இல் திருத்தம் செய்யவும் உத்தரவிட வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் ஏ.பி.சூரியபிரகாசம் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதைத்தொடர்ந்து, 32 மாவட்டங்களில், 886 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. சோதனைக்கு அனுப்பப்பட்ட பால் மாதிரிகளின் முடிவின்படி, அவை அனைத்தும் பயன்படுத்தத் தகுதி உடையவை என்றும் அவற்றில் 187 மாதிரிகள் தரம் குறைந்தவை என்றும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மாதிரிகளில் எதுவும் பாதுகாப்பற்றவை எனக் கண்டறியப்படவில்லை என்பது தெரிய வந்திருக்கிறது.

இந்நிலையில், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்ட அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு பால் முகவர்கள் சங்கம் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, அந்த அமைப்பின் நிறுவனத் தலைவரான சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:

தனியார் பால் நிறுவனங்கள் ரசாயனக் கலப்படம் செய்கின்றன எனவும், தனியார் பாலைக் குடிப்பதால் குழந்தைகளுக்குப் புற்றுநோய் வருகிறது எனவும் தமிழக பால்வளத்துறை அமைச்சர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். அத்துடன், ‘தனியார் பாலில் ரசாயனக் கலப்படம் இல்லை என்று நிரூபித்தால், அமைச்சர் பதவியிலிருந்து விலகவும், தூக்கில் தொங்கவும் தயார்’ என அதிரடியாகப் பேசினார்.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் சுமார் 886 பால் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுசெய்யப்பட்ட 187 பால் மாதிரிகள் தரம் குறைந்து காணப்பட்டதாகவும், எந்த பால் மாதிரியும் பாதுகாப்பற்றது என கண்டறியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பால்வளத்துறை அமைச்சரின் குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது என்பதைத் தமிழக சுகாதாரத்துறை செயலாளரின் பதில் மனு உறுதிசெய்துள்ளது.

அப்படியானால், தனியார் பால் நிறுவனங்கள் உயிருக்குத் தீங்கு விளைவிக்கும் ரசாயனப் பொருள்களைக் கலப்படம் செய்யவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

எனவே, பால் முகவர்களாகிய நாங்கள் மனிதாபிமானமிக்கவர்கள் என்பதால், தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுகின்ற வகையில், தனது அமைச்சர் பதவியை மட்டும் உடனடியாக ராஜிநாமா செய்தால் போதும்.

அத்துடன், இனியாவது ஆதாரமற்ற தகவல்களைப் பொத்தாம் பொதுவாகப் பேசாமல், தனது பொறுப்பை உணர்ந்து அவர் பேச வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com