முன்னாள் நீதிபதி கர்ணன் கோவையில் கைது

ஓய்வுபெற்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் கோவையில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டு கோவை விமான நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட நீதிபதி கர்ணன்.
கைது செய்யப்பட்டு கோவை விமான நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட நீதிபதி கர்ணன்.

ஓய்வுபெற்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் கோவையில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
தமிழகத்தைச் சேர்ந்த சி.எஸ்.கர்ணன் (62) சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக 2015-ஆம் ஆண்டில் பணியாற்றியபோது, அப்போதைய தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல் உள்ளிட்ட சில நீதிபதிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைத் தெரிவித்திருந்தார். தனது குற்றச்சாட்டுகள் குறித்து பிரதமர் அலுவலகத்துக்கும், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கும் புகார் அனுப்பியிருந்தார்.
இதற்கிடையே, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியின் பரிந்துரையின்பேரில், அவர் கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அங்கு சென்ற பிறகும், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வந்த கர்ணன், இது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கூறிப் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரித்தது. இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு கர்ணனுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில், மார்ச் 31-ஆம் தேதி அவர் ஆஜரானார். அப்போது, வழக்குத் தொடர்பாகப் பதிலளிக்க அவருக்கு 4 வாரம் அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனால், அவர் பதில் எதுவும் அளிக்காத நிலையில் அவருக்கு மனநலப் பரிசோதனை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆனால், அவர் மனநலப் பரிசோதனைக்கு ஒத்துழைக்க மறுத்துவிட்டதுடன், தனக்கு மனநலப் பரிசோதனை செய்ய உத்தரவிட்ட உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி உள்ளிட்ட 7 நீதிபதிகளுக்கும் தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டு வந்ததாகவும், மனநலப் பரிசோதனைக்கு ஒத்துழைக்க மறுத்ததாகவும் கூறி நீதிபதி கர்ணனுக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அவரைக் கைது செய்து ஆஜர்படுத்த மேற்கு வங்க காவல் துறைத் தலைவருக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையே, சென்னையில் தங்கியிருந்த நீதிபதி கர்ணன் தலைமறைவானார். பின்னர், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையைத் திரும்பப் பெறும்படி உச்ச நீதிமன்றத்தில் கர்ணன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை நீதிமன்றம் நிராகரித்துவிட்ட நிலையில், வயது மூப்பு காரணமாக நீதிபதி கர்ணன் கடந்த 11-ஆம் தேதி பணியில் இருந்து ஓய்வுபெற்றார்.
இதையடுத்து, சென்னை மாநகரக் காவல் துறையினரின் உதவியுடன் மேற்கு வங்க காவல் துறையினர் நீதிபதி கர்ணனைத் தேடி வந்தனர். இந்நிலையில், அவர் கோவை மாவட்டம், மலுமிச்சம்பட்டியை அடுத்த மாச்சேகவுண்டன்பாளையத்தில் ஒரு தனியார் வீட்டில் தங்கியிருப்பதாக மேற்கு வங்க காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து கோவை மாநகர, மாவட்ட காவல் துறையினரின் உதவியுடன், கர்ணனின் செல்லிடப்பேசி அழைப்புகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு அவர் தங்கியிருந்த விடுதியை சுற்றி வளைத்த தனிப்படை காவல் துறையினர் அவரைக் கைது செய்தனர். இதையடுத்து கோவையில் இருந்து விமானம் மூலம் அவர் சென்னை அழைத்துச் செல்லப்பட்டார்.

ஊழலுக்கு எதிராக தொடர்ந்து போராடுவேன்

கோவை, ஜூன் 20: நீதித் துறையில் நடைபெற்று வரும் ஊழலுக்கு எதிராகத் தொடர்ந்து போராடுவேன் என கோவையில் கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் கூறினார்.
கோவை அருகே தனியார் வீட்டில் கைது செய்யப்பட்ட கர்ணனை, பலத்த பாதுகாப்புடன் போலீஸார் சென்னை அழைத்துச் செல்வதற்காக கோவை விமான நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நீதித் துறையில் நிலவும் லஞ்சத்துக்கு எதிராகப் போராடியதற்காக கைது செய்யப்பட்டதற்கு மகிழ்ச்சி அடைகிறேன். நீதித் துறையில் லஞ்சம் இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறுகிறது. ஆனால், நீதித் துறையில் லஞ்சம் இருக்கக் கூடாது என நான் தொடர்ந்து கூறி வருகிறேன். இதுதான் என் மீதான வழக்குக்குக் காரணம். இதனைக் கூறியதற்காக என்னை எதற்கு கைது செய்ய வேண்டும்?
என் மீதான வழக்கு விவரங்கள் குறித்து நாட்டு மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். நான் நாட்டு நலனுக்காகப் போராடி வருகிறேன். ஆனால், நீதிபதிகள் தங்களது சொந்த நலனுக்காகப் போராடி வருகின்றனர். நீதித் துறையில் நடைபெறும் ஊழல் முறைகேடுகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராடுவேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com