தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே அமையும்? மத்திய அரசு அறிவிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு


மதுரை, ஜூன் 20: தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் இம்மனுவை தாக்கல் செய்துள்ளார். அதன் விவரம்:
தமிழகத்தில் 3 ஆயிரம் நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர் என்ற நிலை உள்ளது. இதனால் ஏழை மக்கள் தரமான சிகிச்சை பெற முடியாத நிலை நீடிக்கிறது. இதற்குத் தீர்வாக அனைத்து வசதிகளுடன் கூடிய எய்மஸ் மருத்துவமனையை தமிழகத்தில் அமைக்க வேண்டியது அவசியம். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அனைத்து கட்டமைப்பு வசதிகளும் மதுரையில் உள்ளது. தென் மாவட்டங்களின் மையப் பகுதியாக விளங்கும் மதுரையில் தற்போது உயர்தர மருத்துவ வசதிகள் கொண்ட மருத்துவமனை ஏதும் இல்லை.
மதுரையில் எய்ம்ஸ் அமைந்தால் பக்கத்து மாநிலமான கேரள மக்களும் பயனடைவர். இந்நிலையில் தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்பதை மத்திய அரசு இதுவரை தெரிவிக்கவில்லை. இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.
எனவே தமிழகத்தில் எங்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது என்பது குறித்து விளக்கம் அளிக்க மத்திய சுகாதாரத்துறைச் செயலர், எய்ம்ஸ் இயக்குநர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com