ஜூன் 27 முதல் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். விண்ணப்ப விநியோகம்

தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 27-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும்.

தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 27-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும்.
2017 - 2018-ஆம் கல்வியாண்டில் மருத்துவ மாணவர் சேர்க்கை நீட் தேர்வின் அடிப்படையில் நடைபெற உள்ளது. இதனால், மாநில பாடத் திட்ட மாணவர்களுக்கு 85 சதவீதமும், சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 15 சதவீதமும் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
இதனையடுத்து, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான அறிவிப்பாணை ஜூன் 26-ஆம் தேதி வெளியிடப்பட்டு, ஜூன் 27-ஆம் தேதி முதல் விண்ணப்ப விநியோகம் தொடங்க உள்ளது. விண்ணப்பங்களைப் பெறுவதற்கு ஜூலை 7-ஆம் தேதி கடைசியாகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூலை 8-ஆம் தேதிக்குள் மருத்துவக் கல்வி தேர்வுக்குழுவுக்கு சென்று சேர வேண்டும்.
இணையதள விண்ணப்பம் இல்லை: தமிழகத்தில் உள்ள 22 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர்கள் விண்ணப்பத்தை நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம். இணையதள விண்ணப்ப விநியோகம் இந்த ஆண்டு இல்லை. தற்போது 25 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கூடுதலாகத் தேவைப்படும் பட்சத்தில் மீண்டும் அச்சடித்து விநியோகிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாநில அரசின் தகுதிப்பட்டியல் ஜூலை 14-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து முதற்கட்ட மருத்துவக் கலந்தாய்வு ஜூலை 17-ஆம் தேதி தொடங்க உள்ளது.
அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு பல் மருத்துவக் கல்லூரி இடங்கள், தனியார் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான இடங்களை நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தமிழக அரசே கலந்தாய்வின் மூலம் நிரப்ப உள்ளது.
நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கான எம்.பி.பி.எஸ்., மற்றும் பிடிஎஸ் இடங்கள் மத்திய சுகாதார சேவைகள் இயக்குநர் ஜெனரல் அலுவலகத்தால் நிரப்பப்படும்.
இடங்கள் எத்தனை?: தற்போது தொடங்கப்பட்ட புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி உள்பட 22 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியின் இடங்கள் அனைத்தையும் சேர்த்து மொத்தம் 3,050 அரசு மருத்துவ இடங்கள் உள்ளன. அவற்றில் 15 சதவீதம்,அதாவது 456 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் ஆகும்.
இடஒதுக்கீடு எவ்வாறு: அகில இந்திய ஒதுக்கீட்டுக்குப் போக மீதம் உள்ள 2,594 இடங்களில் தமிழக அரசாணையின்படி 85 சதவீத இடங்கள், அதாவது 2,203 இடங்கள் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு ஒதுக்கப்படும். மீதமுள்ள 15 சதவீதமான 391 இடங்கள் சிபிஎஸ்சி, ஐசிஎஸ்இ உள்ளிட்ட பிற தேர்வு வாரியங்கள் மூலம் படித்த மாணவர்களுக்கு ஒதுக்கப்பட உள்ளது.
தனியார் கல்லூரி இடங்கள்: தமிழகத்தில் 10 தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மூலம் அரசுக்கு 783 இடங்கள் ஒப்படைக்கப்படும். அவற்றில் 664 இடங்கள் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும், 119 இடங்கள் சிபிஎஸ்இ உள்ளிட்ட பிறப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும் ஒதுக்கப்படும்.
இது தொடர்பாக, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் சனிக்கிழமை தலைமைச் செயலகத்தில் அளித்த பேட்டி: தமிழக அரசின் மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்துவிட்டால், பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே கலந்தாய்வு நடைபெறும். அவ்வாறு கிடைக்காத பட்சத்தில் நீட் தேர்வின் அடிப்படையில், மாநிலப்பாடத் திட்ட மாணவர்களுக்கு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும்.
நீட் தேர்வு மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் வெளிப்படையாக கலந்தாய்வு நடைபெறும் நோக்கில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தனர்.

சந்தேகங்களைத் தீர்க்க தகவல் மையம்!

எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கையில் ஏற்படும் சந்தேகங்களுக்கு பதில் அளிக்க தகவல் மையம் அமைக்கப்பட உள்ளது என்று அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியது: இந்த ஆண்டு புதிய நடைமுறை பின்பற்றப்படுவதால், மருத்துவ மாணவர் சேர்க்கை, கலந்தாய்வு உள்ளிட்டவை குறித்த பல்வேறு சந்தேகங்கள் எழும். எனவே, அதனைத் தீர்ப்பதற்கு தகவல் மையம் அமைக்கப்படும் என்றார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்ககத்தில் ஒரு மருத்துவர் தலைமையில் தகவல் மையம் திங்கள்கிழமை (ஜூன் 26) முதல் செயல்பட உள்ளது. வெளியூர்களில் உள்ளோரும் தகவல்களைத் தெரிந்து கொள்வதற்கு ஏற்ற வகையில், தொடர்புக்கான தொலைபேசி எண் விரைவில் அறிவிக்கப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் ஏ.எட்வின் ஜோ தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com