நீட் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை: சி.விஜயபாஸ்கர்

தேசிய தகுதி நுழைவுத் தேர்வு (நீட்) அடிப்படையில் நிகழாண்டில் மருத்துவக் கலந்தாய்வு நடத்தப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
நீட் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை: சி.விஜயபாஸ்கர்

தேசிய தகுதி நுழைவுத் தேர்வு (நீட்) அடிப்படையில் நிகழாண்டில் மருத்துவக் கலந்தாய்வு நடத்தப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சட்டப் பேரவையில் சனிக்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் இந்தப் பிரச்னையை பேரவையில் எழுப்பினார். அப்போது நடந்த விவாதம்:
துரைமுருகன்: நீட் தேர்வின் முடிவுகள் வந்திருக்கின்றன. முடிவுகளைப் பார்த்தால் தமிழக மாணவர்கள் பலமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இது முக்கியமான பிரச்னை என்பதால் அரசின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.
எஸ்.விஜயதரணி (காங்கிரஸ்): நீட் தேர்வில் பிரச்னையில் மாநிலத்தின் விதிகள் என்னவாக இருக்குமென்று அறிய விரும்புகிறோம்.
அமைச்சர் சி.விஜயபாஸ்கர்: தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் 4.2 லட்சம் பேரும், 4, 675 பேர் மத்திய பாடத் திட்டத்திலும் தேர்வு எழுதியுள்ளனர்.
மாநிலப் பாடத்திட்டத்தில் எழுதியவர்களுக்கு 85 சதவீத இடங்கள் ஒதுக்கீடு: இதைக் கருத்தில் கொண்டு கடந்த 22-ஆம் தேதியன்று அரசு உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்தபடி இப்போது 15 சதவீதம் மத்திய அரசுப் பாடத் திட்டத்தில் தேர்வு எழுதியவர்களுக்கும், உள் ஒதுக்கீடாக நம்முடைய மாநில மாணவர்களின் உரிமையை நிலைநாட்டக் கூடிய வகையில் மிகுந்த கவனத்தோடு மாநில பாடத் திட்டத்தில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 85 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கி அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தங்கம் தென்னரசு (திமுக): பிளஸ் 2 மாணவர்கள் பெற்றிருக்கக் கூடிய மதிப்பெண்களின் நிலை என்ன, எந்த மதிப்பெண்களின் அடிப்படையில் கலந்தாய்வு அமையும்?
அமைச்சர் விஜயபாஸ்கர்: நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி நிறைவேற்றிய சட்ட மசோதாக்கள் மத்திய அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டால் பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்படும். மசோதாக்கள் ஏற்கப்படாத பட்சத்தில் நீட் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் கவுன்சிலிங் நடத்துவோம். இருக்கும் அத்தனை இடங்களும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் படித்த மாணவர்களுக்கு போய்விடக் கூடாது என்பதற்காக பெரும்பான்மையாக இருக்கக் கூடிய 4.25 லட்சம் மாணவர்களின் பிரதிநிதித்துவத்தை நிலைப்படுத்தக்கூடிய வகையில் 85 சதவீத உள் ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது என்றார் அமைச்சர்.
ஜூலை 17-இல் கலந்தாய்வு
எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க வரும் ஜூலை 17-இல் மருத்துவக் கலந்தாய்வு நடைபெறும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் சனிக்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு திமுக உறுப்பினர் க.பொன்முடி எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பதில்: ஜூலை 16-ஆம் தேதிக்குள் அகில இந்திய மருத்துவ சேர்க்கைக்கான கலந்தாய்வு முடிந்து விடும். அதன் பிறகு நமது மாநிலத்தில் கலந்தாய்வு தொடங்கும் என்றார் விஜயபாஸ்கர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com