திமுக சார்பில் இதுவரை 150 குளங்கள் சீரமைப்பு

திமுக சார்பில் தமிழகம் முழுவதும் இதுவரை 150 குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சீரமைக்கப்பட்ட திருப்பாச்சூர் குளத்தை பார்வையிட்ட திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின்.
சீரமைக்கப்பட்ட திருப்பாச்சூர் குளத்தை பார்வையிட்ட திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின்.

திமுக சார்பில் தமிழகம் முழுவதும் இதுவரை 150 குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூர் வாசீஸ்வரர் கோயில் குளத்தை திமுகவினர் சீரமைத்து தூர்வாரினர். பணிமுடிவடைந்த நிலையில், குளத்தை மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை நேரில் பார்வையிட்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எனது வேண்டுகோளை ஏற்று கட்சியினர், நிலத்தடி நீர்மட்டம் உயரும் வகையில் தமிழகம் முழுவதும் இதுவரை 150 குளங்களைச் சீரமைத்து தூர்வாரியுள்ளனர். 234 தொகுதிகளிலும் குளங்கள் தூர் வாரப்படும்.
இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, விவசாயிகளுக்கு பயனளிப்பதாக இருக்கும். சட்டப்பேரவையைப் பொருத்தவரையில், குதிரை பேர விவகாரம் குறித்துப் பேசினாலும், பொதுமக்களின் பிரச்னைகள் குறித்துப் பேசினாலும் பேரவைத் தலைவர் அனுமதி மறுத்து விடுகிறார். இதனால் நாங்கள் தொடர்ந்து வெளி நடப்பு செய்து வருகிறோம்.
வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில், முதல்வர் உள்பட மொத்தம் 9 அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
குடியரசுத் தலைவர் தேர்தலுக்குப் பின்னர், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்.
நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் குறைவாக மதிப்பெண் பெற்றிருப்பது வருத்தமளிக்கிறது. இதற்காகத்தான் நாங்கள் ஆரம்பம் முதலே நீட் தேர்வு வேண்டாம் எனக் கூறி குரலெழுப்பி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றத் துணை நின்றோம். ஆனால் அந்த நகல் முறையாக குடியரசுத் தலைவருக்குச் சென்று சேரவில்லை என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் ஆவடி நாசர், திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருத்தணியில்...
திருத்தணி, ஜூன் 25: பொதட்டூர்பேட்டையில் குளங்கள் தூர்வாரும் பணிகளை மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார்.
அதேபோல் திருத்தணி பழைய தர்மராஜா கோயில் தெருவில் அமைந்துள்ள சதாசிவ கோயிலின் குளத்தை தூர்வாரும் பணிகளையும் அவர் பார்வையிட்டார். மாவட்ட திமுக செயலாளர் கி.வேணு, திருத்தணி நகரச் செயலாளர் எம்.பூபதி, பொதட்டூர்பேட்டை பேரூர் செயலாளர் ஜெ.எம்.தண்டபாணி, பள்ளிப்பட்டு ஒன்றியச் செயலாளர் ஜி.ரவீந்திரா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com