புலிகள் காப்பகத்தையொட்டி யானைகள் வழித்தடத்தில் காகிதத் தொழிற்சாலை

ஆனைமலை புலிகள் காப்பகத்தையொட்டி யானைகள் வழித்தடத்தில் தனியார் காகிதத் தொழிற்சாலையின் கட்டட விரிவாக்கப் பணி நடைபெற்று வருவதால்
புலிகள் காப்பகத்தையொட்டி யானைகள் வழித்தடத்தில் காகிதத் தொழிற்சாலை

ஆனைமலை புலிகள் காப்பகத்தையொட்டி யானைகள் வழித்தடத்தில் தனியார் காகிதத் தொழிற்சாலையின் கட்டட விரிவாக்கப் பணி நடைபெற்று வருவதால், யானைகள் வழிமாறிச் செல்லும்போது மனித - விலங்கு மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோவை, திருப்பூர் மாவட்டங்களை உள்ளடக்கிய ஆனைமலை புலிகள் காப்பகத்தையொட்டி தனியார் சொகுசு விடுதிகள், ஆன்மிகத் தலங்கள் என யானை வழித்தடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன. இவை தவிர, ஆழியாறு பகுதியில், அணையின் அருகில் 500 மீட்டர் தொலைவில் மிகப் பெரிய தனியார் காகித ஆலை வனப் பகுதியின் அருகிலேயே கட்டப்பட்டுள்ளது. பல கி.மீ. தூரத்துக்குப் பரந்து விரிந்து கிடக்கும் இந்தக் காகித ஆலையால் யானை உள்ளிட்ட வன உயிரினங்களின் வழித்தடங்கள் மறிக்கப்பட்டுள்ளதால் அவை வழிமாறி விவசாயப் பகுதிகளுக்குள் சென்றுவிடுகின்றன. காகித ஆலைக் கழிவுகள் வனப் பகுதிக்குள்ளும், ஓடையிலும் கலந்துவிடப்படுகிறது. காகிதக் கழிவுகள் வனப் பகுதியை ஒட்டியப் பகுதிகளிலும், வனப் பகுதிக்குள்ளும் டன் கணக்கில் கொட்டப்பட்டுள்ளது.
இந்தக் காகிதக் கழிவுகள் வனப் பகுதியின் சூழலை மாசுபடுத்துவதுடன், வன உயிரினங்களின் உயிரையும் மாய்த்து வருகின்றன.
தொழிற்சாலையில் இருந்து ராட்சதக் குழாய் மூலமாக வெளியேற்றப்படும் நச்சுப்புகை, வனப் பகுதியில் வெப்பத்தை அதிகப்படுத்துவதுடன், காற்று மாசு, வன உயிரினங்களின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்குவதாக உள்ளது.
புலிகள் காப்பகத்தை ஒட்டி இப்படி செயல்படும் காகிதத் தொழிற்சாலையால் யானை, புலி உள்ளிட்ட வன உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டும் இந்த தொழிற்சாலையின் செயலை வனத் துறையோ, மாவட்ட நிர்வாகமோ கண்டுகொள்ளவில்லை என இயற்கை ஆர்வலர்கள் புகார் எழுப்பியுள்ளனர்.
மேலும், வனப் பகுதியில் இருந்து வன உயிரினங்கள் உள்ளே வராமல் தடுக்க தொழிற்சாலையின் சில இடங்களில் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு, அதில் இரவு நேரத்தில் அதிக வோல்டேஜ் கொண்ட மின்சாரத்தையும் பாய்ச்சுவதாகக் கூறப்படுகிறது. காகிதத் தொழிற்சாலை இயங்கும் நேரத்தில் வனப் பகுதியில் 10 கி.மீ. தூரம் வரை அதன் அதிகப்படியான சப்தத்தால் ஒலி மாசு ஏற்பட்டு, வன உயிரினங்கள் அச்சமடைகின்றன. மேலும், வன உயிரினங்களை வனக் கொள்ளையர்கள் வேட்டையாடினாலும் அது வனத் துறைக்குத் தெரியாமல் போகும் நிலையும் உருவாகியுள்ளது. முள்செடிகள், காகித ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப் புகை, வனப்பகுதியை ஒட்டி போடப்பட்டுள்ள காகிதக் கழிவுகள், தொழிற்சாலைக் கழிவுகள் போன்றவற்றால் தொழிற்சாலையைச் சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் வனப் பகுதியில் பெரிய மரங்கள் வளர்வதில்லை. முள்செடிகள், கள்ளிச்செடிகள் போன்றவையே வளர்ந்துள்ளன.
இது, வன உயிரினங்களுக்கு உணவுப் பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது. இந்தத் தொழிற்சாலையால் வனப் பகுதியின் தன்மையே மாறி வருவதாக இயற்கை ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே இந்தக் காகிதத் தொழிற்சாலையால் வனப் பகுதியும், வன உயிரினங்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது, அதன் அதன் கிழக்குப் பகுதியில் கட்டடம் விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காகப் பல சதுர மீட்டர் அளவுக்கு கான்கிரீட் தூண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
ஏற்கெனவே, இந்தத் தொழிற்சாலையால் பல கி.மீ. வழித்தடத்தை யானைகள் இழந்து தவிக்கும் நிலையில், தற்போது நடைபெறும் விரிவாக்கத்தால் மேலும் பல கி.மீ. வழித்தடத்தை யானைகள் இழக்க நேரிடும். இதனால், தடம் மாறும் யானைகள் விவசாய விளை நிலங்களுக்குள் நுழைவதுடன், மனித விலங்கு மோதலும் அதிகரிக்கும்.
ஏற்கெனவே, வால்பாறையில் மனித } விலங்கு மோதலால் உயிர்ச் சேதம் ஏற்பட்டு வரும் நிலையில், பொள்ளாச்சி வனச் சரகத்தை ஒட்டிய பகுதிகளில் மனித } விலங்கு மோதல் குறைவாகவே உள்ளது. ஆனால், இந்தத் தொழிற்சாலை விரிவாக்கத்தால் கோவையைப் போல, யானை } மனித மோதல் அதிகரிக்கும் அபாயம் ஏற்படும். இதனால், மனித உயிரிழப்புகளும் அதிகரிக்கும். எனவே, வனத் துறையினரும், மாவட்ட நிர்வாகமும் தொழிற்சாலை கட்டட விரிவாக்கப் பணியைத் தடுத்து நிறுத்துவதுடன், புலிகள் காப்பகத்தை ஒட்டி செயல்பட்டு வரும் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே இயற்கை ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
இதுகுறித்து, பொள்ளாச்சி வனச் சரக அலுவலர் ரவிச்சந்திரன் கூறுகையில், குறிப்பிட்ட அந்தக் காகிதத் தொழிற்சாலை விரிவாக்கத்துக்கு வனத் துறையிடம் தொழிற்சாலை நிர்வாகம் எந்த அனுமதியும் பெறவில்லை என்றார்.
கட்டட விரிவாக்கம் நடைபெற்று வரும் பகுதிக்கு உள்பட்ட கோட்டூர் பேரூராட்சி செயல் அலுவலர் சிவசாமி கூறுகையில், காகிதத் தொழிற்சாலை விரிவாக்கத்துக்குப் பேரூராட்சி நிர்வாகத்திடமும் அனுமதி பெறவில்லை என்றார்.
இயற்கை ஆர்வலர் வினோத்குமார் கூறுகையில், ஆனைமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி யானை வழித்தடத்தில் செயல்படும் காகிதத் தொழிற்சாலையால் வன உயிரினங்கள் பாதிப்படைந்துள்ளன. தற்போது மேலும் கட்டட விரிவாக்கம் நடைபெறுவதை மாவட்டநிர்வாகம் தடுக்காவிட்டால் கோவையில் யானையால் மனிதர்கள் தாக்கப்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டதைப் போல ஆழியாறு பகுதியிலும் ஏற்படும்
என்றார்.

மாசு ஏற்படுத்தும் விதமாக காகித ஆலையில் இருந்து வெளியேறும் புகை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com