42 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

இலங்கைச் சிறையிலுள்ள 42 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
42 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

இலங்கைச் சிறையிலுள்ள 42 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை எழுதிய கடித விவரம்:
இலங்கைக் கடற்படையினர் கடந்த 24 }ஆம் தேதி தமிழக மீனவர்கள் மீது நடத்திய கண்மூடித்தனமான தாக்குதல் சம்பவங்கள் குறித்து தங்களின் உடனடியான கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். பல நூற்றாண்டுகளாக அமைதியான முறையில் பாரம்பரிய மீன்பிடி இடமான பாக் நீரிணைப் பகுதியில் மீன்பிடித்து வரும் தமிழக மீனவர்களை நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் கடத்திச் செல்கின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மீன்பிடி தளத்தில் இருந்து இரண்டு இயந்திர படகுகள் 11 மீனவர்களும், புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடி தளத்தில் இருந்து 3 மீனவர்கள் ஓர் இயந்திரப் படகு
மூலமும் மீன் பிடிக்கச் சென்றனர். அவர்களை கடந்த 24} ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில் பிடித்துச் சென்ற இலங்கை கடற்படையினர் அனைவரையும் தலைமன்னார் மற்றும் காங்கேசன்துறைக்கு அழைத்துச் சென்றனர்.
கச்சத்தீவு குறித்த இந்தியா}இலங்கை இடையிலான சர்வதேச எல்லைக் கோடு விவகாரம் நீதிமன்றத்தில் வழக்காக நிலுவையில் உள்ளது. இந்தச் சூழ்நிலையில், பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன்பிடிக்கும் எங்களது மீனவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களையும், கடத்தல் சம்பவங்களையும் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
இந்நிலையை மாற்றக் கோரி இலங்கை அரசுடன் தூதரக ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எங்களது அப்பாவி மீனவர்களின் படகுகளை பிடித்துச் செல்லும் இலங்கை கடற்படையின் செயல்கள் அவர்களை மட்டுமின்றி தமிழக மக்களையும் விரக்தி அடையச் செய்கின்றன. கடந்த 2015}ஆம் ஆண்டு ஜனவரியில் இருந்து இலங்கை அரசானது எந்த மீன்பிடி படகுகளையும் விடுவிக்காமல் உள்ளது.
இலங்கை அரசின் இந்த மனிதநேயமற்ற செயல்களானது மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தில் மிகப்பெரிய பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. 
இலங்கை வசமுள்ள படகுகளை விடுவிக்க அந்நாட்டு அரசை வற்புறுத்த வேண்டுமென மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். படகுகளை மீட்டு அவற்றை பயன்படுத்தத்தக்க வகையில் சீர்படுத்தித் தர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
கடந்த ஏப்ரலில் தங்களை இலங்கை பிரதமர் சந்தித்துப் பேசிய போது, தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க சம்மதம் தெரிவிக்கப்பட்டது. இதனால், படகுகளை விடுவிப்பதில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு தமிழக மக்களிடையே நிலவியது.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து பிடித்துச் செல்லும் அபாயகரமான நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. இது தமிழக அரசு மற்றும் தமிழக மக்களிடையே மிகப் பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது. மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பான இந்தப் பிரச்னையில் உயர்நிலை அளவில் உடனடியாகத் தலையிட்டு தீர்வு காண வேண்டும்.
மீனவர்கள் மீன்பிடிப்புக்கு வழக்கமாகப் பயன்படுத்தும் படகுகளுக்குப் பதிலாக புதிய வகை படகுகளாக மாற்றியமைக்க மாநில அரசு அனைத்து வகையான நடவடிக்கைகளையும் மிகக் குறைந்த சாதகமான காலத்தில் எடுத்து வருகிறது. 
படகுகளை மாற்றக் கூடிய இந்தக் காலத்தில் படகுகளை பிடித்துச் செல்லும் கொள்கையை பின்பற்றாமல், இந்தியாவின் தூதரக ரீதியான முயற்சிகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
கடந்த 24 ஆம் தேதி பிடித்துச் செல்லப்பட்ட 14 மீனவர்கள் உள்பட இலங்கைச் சிறையிலுள்ள 42 தமிழக மீனவர்களையும், அந்நாட்டிலுள்ள 141 படகுகளையும் விடுவிக்கும் விஷயத்தை அந்த நாட்டு அரசின் உயர் அதிகாரிகளிடம் எடுத்துச் செல்ல வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com