இன்று முதல் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் விண்ணப்பம் விநியோகம்

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 27) முதல் தொடங்குகிறது.
இன்று முதல் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் விண்ணப்பம் விநியோகம்

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 27) முதல் தொடங்குகிறது.
நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. அதன் காரணமாக தமிழ்நாடு பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீதமும், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்ளிட்ட பிற பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 15 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
அரசு மருத்துவக் கல்லூரி இடங்களுக்கும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும் மருத்துவக் கல்வி தேர்வுக்குழுவினரே கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்த உள்ளனர். அதன்படி, தமிழகத்தில் ஜூன் 27-ஆம் தேதி முதல் விண்ணப்ப விநியோகம் தொடங்குகிறது.
22 கல்லூரிகள்: தமிழகத்தில் உள்ள 22 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் விண்ணப்பங்கள் கிடைக்கும். கல்லூரிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பங்களை நேரடியாகச் சென்று பெற்றுக் கொள்ளலாம். இந்த ஆண்டு இணையதள விண்ணப்ப விநியோகம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும் ஒரே விண்ணப்பமும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு தனி விண்ணப்பமும் விநியோகிக்கப்பட உள்ளது. இதற்கென்று 25 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இடங்கள் எத்தனை?: 22 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி இடங்களையும் சேர்த்து 2,594 இடங்களும், 10 தனியார் மருத்துவக் கல்லூரிகளின் 783 அரசு ஒதுக்கீட்டு இடங்களும் உள்ளன.
கட்டணம் எவ்வளவு?: அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.500 ஆகும். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.1000 ஆகும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
கடைசி தேதி: விண்ணப்பங்களைப் பெறுவதற்கு ஜூலை 7-ஆம் தேதி கடைசியாகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூலை 8-ஆம் தேதிக்குள் மருத்துவக் கல்வி தேர்வுக்குழுவுக்கு சென்று சேர வேண்டும். நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தமிழக அரசின் தகுதிப்பட்டியல் ஜூலை 14-ஆம் தேதி வெளியிடப்படும். ஜூலை 17-ஆம் தேதி முதற்கட்ட கலந்தாய்வு நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com