கையூட்டு முறைகேடுகளைத் தடுக்குமா கோவை அரசு மருத்துவமனை நிர்வாகம் ?

கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உள்நோயாளிகளிடம் கையூட்டு பெறும் ஊழியர்கள் மீது மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என
கையூட்டு முறைகேடுகளைத் தடுக்குமா கோவை அரசு மருத்துவமனை நிர்வாகம் ?

கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உள்நோயாளிகளிடம் கையூட்டு பெறும் ஊழியர்கள் மீது மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை, தீவிர சிகிச்சை, எலும்பு முறிவு, இதயம், சிறுநீரகவியல், நரம்பியல், மகப்பேறு சிகிச்சை, பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு, தீக்காயம், கண், காது} மூக்கு} தொண்டை, ஜீரண மண்டலம், பொது சிகிச்சை என 40-க்கும் மேற்பட்ட சிகிச்சைப் பிரிவுகள் மற்றும் ரத்த வங்கி ஆகியவை செயல்பட்டு வருகின்றன.

கோவை அரசு மருத்துவமனையில் ரூ. 80 கோடி மதிப்பில் அண்மையில் பல்வேறு கட்டடங்கள் அமைப்பு, அறுவை சிகிச்சை அரங்கம் என பல்வேறு கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒவ்வொரு சிகிச்சைப் பிரிவிலும் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மருத்துவமனை நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கோவை தவிர அருகிலுள்ள திருப்பூர், மேட்டுப்பாளையம், உதகை, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பல்லடம், வால்பாறை, பாலக்காடு என பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் நூற்றுக்கணக்கானோர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுகின்றனர்.

நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் தவிர, சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவமனைப் பணியாளர்கள், செவிலியர் உதவியாளர்கள் என மூன்று பிரிவுகளாக கடைநிலை ஊழியர்கள் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகின்றனர்.

அரசு மருத்துவமனைக்கு வரும் உள்நோயாளிகள், வெளி நோயாளிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இப்பிரிவுகளுக்கு என அரசால் 296 பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. அதில், 184 பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன.

தற்போது மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டால் 296 பணியிடங்களுக்கும் மேலாகப் பணியாளர்களை நிரப்ப வேண்டும். இதேபோல, மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

ஆனால், அதற்குப் பதிலாக தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் "பத்மாவதி ஹாஸ்பிடாலிட்டி சர்வீஸ்' என்ற தனியார் அறக்கட்டளை மூலமாக காவலாளி, சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவமனைப் பணியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இதில், கோவை அரசு மருத்துவமனையில் மட்டும் 400-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

இந்தப் பணியிடங்களுக்கு தனியார் அறக்கட்டளைப் பணியாளர்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இதில், உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படும் நோயாளிகள் எக்ஸ்ரே, ஸ்கேன், ரத்தப் பரிசோதனை, எண்டாஸ்கோபி, பிற துறைப் பரிசோதனைகளுக்கு மருத்துவமனை பணியாளர்களின் உதவியுடன் அழைத்துச் செல்லப்படுவார்கள்.

அவ்வாறு, அழைத்துச் செல்லப்படும் மருத்துவப் பணியாளர்கள் நோயாளிகளிடமும், அவரது உறவினர்களிடமும் கெடுபிடி வசூலில் ஈடுபடுவதாகப் புகார் எழுந்துள்ளது. சாதாரணமாக எக்ஸ்ரே பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டால் குறைந்தபட்சம் ரூ. 100 என நோயாளிகளின் உறவினர்களிடம் இருந்து மருத்துவமனைப் பணியாளர்கள் கட்டாய வசூலில் ஈடுபடுகின்றனராம்.

இதுகுறித்து, தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ஜெகன் கூறியதாவது:
 என் தந்தையை மருத்துவமனையில உள்ள புற்றுநோய் சிகிச்சைப் பிரிவில் சேர்த்திருந்தேன். அப்போது, மருத்துவப் பணியாளர்கள் பல்வேறு பணிகளுக்கு நோயாளிகள் அல்லது குடும்பத்தாரிடம் கட்டயாப்படுத்தி கையூட்டு பெற்றனர்.
 பரிசோதனைக்கு அழைத்துச் சென்றால் ரூ. 100: ரத்தப் பரிசோதனை முடிவுகளைப் பெற பணம் தரவில்லை என்றால் மருத்துவமனைப் பணியாளர்கள் அதைப் பெற்றுத் தராமல் வேண்டுமென்றே காலம் தாழ்த்தி நோயாளிகளை சிரமத்துக்கு ஆளாக்குகின்றனர். குறைந்தபட்சம் ரூ. 100 கொடுத்தால் மட்டுமே உடனடியாகப் பணிகள் நிறைவேறுகின்றன. இதேபோல, ஸ்கேன், எக்ஸ்ரே, டயாலிசிஸ் போன்ற பரிசோதனை மற்றும் சிகிச்சைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டால் ரூ. 100 முதல் ரூ. 200 வரை வசூலிக்கின்றனர்.

குழந்தை பிறந்தால் ரூ. 500 வசூல்: மருத்துவமனையில் உள்ள மகப்பேறு சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் பெண்களுக்கு குழந்தை பிறந்தால் தந்தை அல்லது உறவினர்களிடம் ரூ. 500 முதல் ரூ. 1,000 வரை கட்டாயமாக வசூலிக்கப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட தொகையை விடக் குறைவாகவோ அல்லது பணமே கொடுக்கவில்லை என்றால் பெற்றோரையும், உறவினர்களையும் தரக் குறைவாகப் பேசுவதும், கீழ்த்தரமாக நடத்துவதும் பணியாளர்களின் வழக்கமாக உள்ளது.

பிரேதப் பரிசோதனைக்கு ரூ. 3 ஆயிரம்: கோவை அரசு மருத்துவமனையில் உள்ள உடற்கூறு ஆய்வுக்கூடத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 10 முதல் 20 பிரேதங்கள் வரை பரிசோதனை நடத்தப்படுகிறது. அவ்வாறு பிரேதப் பரிசோதனை நடத்தப்படும் சடலத்தை பேக்கிங் செய்ய வேண்டும் எனக் கூறி ஒவ்வொரு பிரேதத்துக்கும் ரூ. 2 ஆயிரம் முதல் ரூ. 3 ஆயிரம் வரை வசூல் வேட்டை நடத்துகின்றனர். மேலும், இலவச அமரர் ஊர்தி மூலமாக சடலம் கொண்டு செல்லப்பட்டால் அதற்கு ரூ. 100 முதல் ரூ. 500 வரை வசூலிக்கின்றனர்.

வார்டுக்குள் அனுமதிக்க ரூ. 50: ஒவ்வொரு சிகிச்சைப் பிரிவிலும் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளை அவரது உறவினர்கள் காண காலை, மாலை நேரங்களில் தலா 2 மணி நேரம் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், அனுமதிக்கப்பட்ட நேரம் தவிர பிற நேரங்களில் நோயாளிகளைக் காண வேண்டுமானால் காவலாளியிடம் ரூ. 50 கொடுத்தால் அனுமதி கிடைக்கும்.

புகார் தெரிவிக்க நோயாளிகள் அச்சம்: முறைகேடுகளில் ஈடுபடும் ஊழியர்கள் கையூட்டு கேட்டு தொந்தரவு செய்வது குறித்து பணியாளர்கள் மீது புகார் தெரிவித்தால் அவர்கள் மிரட்டப்படுகின்றனர். மேலும், பணியாளர்களைப் பகைத்துக் கொண்டால் உரிய சிகிச்சை கிடைக்காமல் போய்விடுமோ என நோயாளிகள் அச்சப்படுவதால் புகார் அளிக்க முன்வருவதில்லை.

இதில், குறிப்பாக மகப்பேறு, பிரேதப் பரிசோதனை, பச்சிளம் குழந்தை, விபத்து சிகிச்சை, எலும்பு முறிவு ஆகிய துறைகளில் பணியாற்றும் மருத்துவப் பணியாளர்களால் அதிக அளவில் வசூல் வேட்டை நடத்தப்படுகிறது.

மேலும், தனியார் நிறுவனம் சார்பில் பணியாற்ற 400-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தினசரி மூன்று வேளைகளாகப் பிரிக்கப்பட்டு பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஆனால், போதிய அளவில் பணியாளர்கள் நியமிக்கப்படாததால் பல்வேறு பணிகளில் தனியார் அறக்கட்டளையைச் சேர்ந்த பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் அச்சமின்றி வசூல் வேட்டை நடத்துகின்றனர்.

இதில் ஒருசிலர் பணிக்கு வந்து கையெழுத்திட்டுவிட்டு, பணியாற்றாமல் வெளியே சென்று விடுகின்றனர். அவர்களைக் கண்காணிக்க வேண்டிய மருத்துவரும் கண்டுகொள்வதில்லை. முறைகேட்டில் ஈடுபட்டாலும் நடவடிக்கை எடுப்பதில்லை.

மேலும், மருத்துவமனை வளாகத்தில் ஆங்காங்கே "கையூட்டு கொடுக்கக் கூடாது, கேட்டால் புகார் அளிக்க கூடிய செல்லிடப்பேசி எண்' என்று ஒட்டியுள்ள சுவரொட்டிகளையும் ஊழியர்களே அகற்றிவிடுகின்றனர்.

எனவே, பணியாளர்கள் நடத்தும் வசூல் வேட்டையைத் தடுக்க மருத்துவமனை நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

அண்மையில் கூட பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட மாணவியின் உடலைப் பெற கையூட்டு கேட்டதாக குற்றம்சாட்டப்பட்ட பணியாளர் வேறு துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதுகுறித்து, மருத்துவமனை இருப்பிட மருத்துவ அலுவலர் டாக்டர் சௌந்தரவேல் கூறியதாவது:
 பணியாளர்கள் கையூட்டுப் பெறுவதாக நோயாளிகள் அல்லது உறவினர்கள் புகார் தெரிவித்தாலும், உரிய நபர் மீது எழுத்துப் பூர்வமாக புகார் அளிக்க முன்வருவதில்லை. கையூட்டு கேட்கும் ஊழியர்கள் மீது புகார் அளித்தால் உரிய சிகிச்சை கிடைக்காது என நோயாளிகள் அச்சப்பட வேண்டியதில்லை. எனவே, நோயாளிகள் தயக்கமின்றி புகார் அளிக்க முன்வர வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com