புதுச்சேரியில் அமித் ஷாவுடன் என்.ரங்கசாமி, அதிமுகவினர் சந்திப்பு

புதுச்சேரிக்கு வந்துள்ள பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை முன்னாள் முதல்வர் ரங்கசாமி மற்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் திங்கள்கிழமை நேரில் சந்தித்து, குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு

புதுச்சேரிக்கு வந்துள்ள பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை முன்னாள் முதல்வர் ரங்கசாமி மற்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் திங்கள்கிழமை நேரில் சந்தித்து, குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
பாஜக சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக பிகார் முன்னாள் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் போட்டியிடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா 2 நாள்கள் பயணமாக திங்கள்கிழமை புதுவைக்கு வந்தார்.
தொடர்ந்து, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவரை என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, அந்தக் கட்சியின் எம்.பி. ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் ஜெயபால், கோபிகா, சுகுமார் ஆகியோர் நேரில் சந்தித்துப் பேசினர்.
இதே போல, சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவர் அன்பழகன் தலைமையில் எம்.பி. கோகுலகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் வையாபுரி மணிகண்டன், பாஸ்கர் ஆகியோரும் அமித் ஷாவை சந்தித்துப் பேசினர். அப்போது அவர்கள் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்துக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.
இந்தச் சந்திப்புக்குப் பிறகு எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி கூறியதாவது: குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளரை என்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆதரிக்கும் என்று ஏற்கெனவே தெரிவித்திருந்தோம். அதன்படி, புதுச்சேரி வந்த பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவைத் சந்தித்து எங்களது ஆதரவைத் தெரிவித்தோம் என்றார் அவர்.
சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவர் அன்பழகன் கூறியதாவது:
அதிமுக துணைப் பொதுச் செயலர் தினகரனின் அறிவுரைப்படி, பாஜக வேட்பாளருக்கு புதுச்சேரி மாநில அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஆதரவை அமித் ஷாவிடம் தெரிவித்தனர்.
இந்தச் சந்திப்பின் போது, கடந்த ஓராண்டாக புதுச்சேரியில் செயல்படாத காங்கிரஸ் ஆட்சியின் நிலை குறித்தும் தெரிவித்தோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com