2 தனியார் பால் நிறுவன தயாரிப்பில் வேதிப் பொருள்கள்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

இரண்டு தனியார் பால் நிறுவனங்களின் தயாரிப்புகளில் காஸ்டிக் சோடா, பிளீச்சிங் பவுடர் கலந்திருப்பதாக பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆதாரத்துடன் தெரிவித்தார்.
2 தனியார் பால் நிறுவன தயாரிப்பில் வேதிப் பொருள்கள்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

இரண்டு தனியார் பால் நிறுவனங்களின் தயாரிப்புகளில் காஸ்டிக் சோடா, பிளீச்சிங் பவுடர் கலந்திருப்பதாக பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆதாரத்துடன் தெரிவித்தார்.

இது குறித்து, சென்னையில் செய்தியாளர்களுக்கு அவர் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:
இரண்டு தனியார் பால் நிறுவனங்களில் காஸ்டிக் சோடா, பிளீச்சிங் பவுடர் ஆகிய வேதிப் பொருள்கள் கலந்திருப்பதாக ஆய்வின் முடிவுகளில் தெரியவந்துள்ளது.
வயிற்றுப் போக்கு, காலரா...:
இரண்டு தனியார் நிறுவனங்களின் பால் மாதிரிகள், மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்திடம் சோதனைக்காக அனுப்பப்பட்டன. இதன் முடிவுகள் எனது கையில் உள்ளன. காஸ்டிக் சோடா, கெட்டுப் போன பாலில் உள்ள அமிலத்தன்மையைக் குறைக்கிறது. இதனை பாலாக்காமல் பால் பவுடராக்கி விற்பனை செய்கிறார்கள். இந்த பால் பவுடரை வெந்நீரில் ஊற்றி பாலாக்கி கொடுக்கிறார்கள். இதனை அருந்துவதால் வயிற்றுப்போக்கு, காலரா என அத்தனை நோய்களும் வரக்கூடிய வாய்ப்பு உள்ளது.
ஆவின் பொருள்கள் தரமானவை. ஆவின் பாலில் எந்தக் கலப்படமும் இல்லை. ஆவின் பால், தயிர், பால் பவுடர் இந்த மூன்றையும் ஆய்வு செய்ததில், அத்தனையும் தரமானது என்ற ஆய்வு முடிவு உள்ளது. ஆவின் பால் கொள்முதல், விற்பனையை அதிகரிக்க உள்ளோம்.
மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற உறுதியான நிறுவனம் அறிக்கை அளித்துள்ளது. உலகத்தரம் வாய்ந்த பால் கம்பெனிகளில் இவ்வளவு ரசாயனம் இருக்கிறது. அதே நேரத்தில் கலப்படம் இல்லாத பால் பொருள்கள் தயாரிப்பு கம்பெனிகளும் உள்ளன.
சில தனியார் பாலில் கலப்படம் உள்ளது. இப்போது தனியார் பாலில் கலப்படம் செய்ய யோசிக்கிறார்கள். இதையடுத்து இப்போது பால் பவுடரில் கலப்படம் செய்கிறார்கள்.
அந்த ரசாயனம் உடலுக்குள் செல்லும்போது பல பிரச்னைகள் உருவாகின்றன. உடலின் பல்வேறு உறுப்புகளான சிறுநீரகம், இதயம் போன்றவை பாதிக்கப்படுவதுடன், சர்க்கரை நோய், அல்சர் பிரச்னைகளும் வரும். மக்கள் அச்சமடைய வேண்டும் என்பதற்காகச் சொல்லவில்லை. விழிப்புணர்வு அடைந்து நல்ல பாலை அருந்த வேண்டும் என்றுதான் சொல்கிறேன்.
கலப்படம் செய்வோர் மீது வழக்குப் போட்டால் ரூ.1,500 அபராதம் செலுத்தி விட்டு சென்று விடுவார்கள். எனவே தனி நபர்கள் மூலமாக மாதிரிகள் எடுத்து ஆய்வு செய்யப்பட்டது.
நடவடிக்கைக்கு உத்தரவு: எந்தப் பாலில் கலப்படம் உள்ளது என்பதை அறிந்து நடவடிக்கை எடுக்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். பாலில் கலப்படம் செய்வோருக்கு தண்டனையை அதிகப்படுத்த வேண்டும், வழக்கை உறுதிப்படுத்த வேண்டும், தடை செய்ய வேண்டும் என்பதே எனது இலக்கு. பிரபலமானகம்பெனிகள் இப்படிச் செய்யும் போது, சாதாரண கம்பெனிகள் என்ன மாதிரியான கலப்படம் செய்யும் என்பதே தெரிவிக்கவே கூறுகிறேன்.
கலப்படம் செய்யாத தனியார் நிறுவனங்கள் உள்ளன. அதற்காக நாங்கள் எந்த நிறுவனங்களுக்கும் சான்று கொடுக்க முடியாது. எந்த தனியார் பாலிலும் ரசாயனம் கிடையாது எனக் கூறுகின்றனர். அவர்களுக்காக இந்தப் பதிலைத் தெரிவிக்கிறேன். கலப்படம் செய்யும் பாலை உடனடியாகத் தடை செய்ய முதல்வரிடம் பேசி முடிவு செய்யப்படும்.
மிரட்டல்கள் வருகிறது: தனியார் பாலில் கலப்படம் எனக் கூறுவதால் பெயர் கூறாமல் தினமும் மிரட்டல்கள் வருகின்றன. இரவு 12 மணிக்கு தொலைபேசியை எடுத்தால் மிரட்டுகிறார்கள். பெரிய கம்பெனி பாதிக்கும் போது ஆள் வைத்து மிரட்டுகிறார்கள். வெளிநாட்டிலிருந்து மிரட் டுவது போல அவர்கள் மிரட்டல் செய்கிறார்கள்.
பயம் கிடையாது: இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். கலப்படம் குறித்த விவரங்களை பிரதமருக்கும் அனுப்ப உள்ளேன். தனியார் பால் மட்டுமல்ல. பொருள்களிலும் கலப்படம் செய்கிறார்கள். அதனை ஆய்வுக்காக அனுப்பியுள்ளேன். தைரியமாக நடவடிக்கை எடுக்க முதல்வர், எனக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மக்களின் உயிர் பிரச்னை என்பதால் நான் அமைதியாக இருக்க முடியாது. ரசாயனம் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ளோம். கலப்படம் இல்லாத பாலை யார் விற்றாலும் அரசு அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் என்றார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com