தமிழகத்தில் முதன்முதலாக பெண் குழந்தைகளுக்கான உதயம் விழிப்புணர்வு திட்டம் தொடக்கம்

தமிழகத்திலேயே முதன்முதலாக குழந்தைகளை பாலியல் வன்கொடுமையில் இருந்து பாதுகாக்கும் உதயம் விழிப்புணர்வு திட்டம் சேலத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலேயே முதன்முதலாக குழந்தைகளை பாலியல் வன்கொடுமையில் இருந்து பாதுகாக்கும் உதயம் விழிப்புணர்வு திட்டம் சேலத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

குழந்தைகளை பாலியல் வன்கொடுமையில் இருந்து பாதுகாப்பது குறித்த உதயம் விழிப்புணர்வு திட்ட தொடக்க நிகழ்ச்சி, சேலம் கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
உதயம் புதிய விழிப்புணர்வுத் திட்டத்தை, மாவட்ட ஆட்சியர் வா.சம்பத், சேலம் மாநகர காவல் ஆணையர் சஞ்சய்குமார் மற்றும் தமிழகம், கேரளம் யுனிசெப் குழந்தை பாதுகாப்பு நிபுணர் குமரேசன் ஆகியோர் தொடக்கி வைத்தனர்.
இதில் ஆட்சியர் வா.சம்பத் பேசியது : சேலம் மாநகர காவல் துறை மற்றும் யுனிசெப் நிறுவனம் இணைந்து குழந்தைகளை பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாப்பு குறித்து உதயம் என்ற புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
இத் திட்டத்தின் மூலம் பள்ளி செல்லும் அனைத்துக் குழந்தைகளுக்கும் மற்றும் அவர்களுடைய பெற்றோர்களுக்கும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது. குழந்தைகளை மையமாக வைத்து இத் திட்டமானது செயல்படுத்தப்படவுள்ளது. பள்ளிகளில் குழந்தைகளுக்கு எதிரான அனைத்து விதமான வன்முறைகளையும் தடுப்பதே இத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
சேலம் மாநகரக் காவல் துறையின் சார்பில், 20 உதவி காவல் ஆய்வாளர்கள் குழந்தை நலக் காவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த குழந்தைகள் நலக் காவலர்களுக்கு குழந்தைகளை பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாப்பது குறித்த பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் சேலம் மாநகரில் உள்ள 109 பள்ளி மாணவ, மாணவியருக்கு பாலியல் வன்கொடுமையிலிருந்து முழுமையாகப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள். மேலும், பள்ளி மாணவ, மாணவியருக்கு பாலியல் தொந்தரவுகள் ஏதேனும் இருப்பின் முதலில் பெற்றோர்களுக்கும், இரண்டாவதாக ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாம். "1098' என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார்களைத் தெரிவிக்கலாம்.
உதயம் திட்டமானது, தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக சேலம் மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
இதுகுறித்து யுனிசெப் அதிகாரி குமரேசன் கூறுகையில், உதயம் திட்டம் பிற மாவட்டங்களுக்கும், பிற மாநிலங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும். மேலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் "சைல்டு பிரண்ட்லி ரூம்' என்ற குழந்தைகளுக்கான அறை 10 நாள்களில் திறக்கப்படும். இந்த அறையில் குற்ற வழக்குகளில் வரும் சிறு குழந்தைகள் விசாரிக்கப்படுவர்.
மேலும், பாலியல் கொடுமை குறித்து பள்ளிகளில் அமைக்கப்படும் புகார் பெட்டிகளில் போடலாம் என்றார்.
நிகழ்ச்சியில், காவல் துணை ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) ஜோ.ஜார்ஜ், காவல் துணை ஆணையர் (போக்குவரத்து) ராமகிருஷ்ணன், முதன்மைக் கல்வி அலுவலர் அ.ஞானகெளரி, காவல்துறை உதவி ஆணையாளர் பி.இளங்கோவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com