நம்பிக்கை வாக்கெடுப்புக்கும், எம்எல்ஏ.க்களுக்கு பணம் வழங்கியதற்கும் நேரடித் தொடர்பு

நம்பிக்கை வாக்கெடுப்புக்கும், சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு (எம்எல்ஏ.க்கள்) பணம் வழங்கியதற்கும் நேரடித் தொடர்பு இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த விளக்க மனுவில்
நம்பிக்கை வாக்கெடுப்புக்கும், எம்எல்ஏ.க்களுக்கு பணம் வழங்கியதற்கும் நேரடித் தொடர்பு

நம்பிக்கை வாக்கெடுப்புக்கும், சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு (எம்எல்ஏ.க்கள்) பணம் வழங்கியதற்கும் நேரடித் தொடர்பு இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த விளக்க மனுவில் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் பிப்ரவரி 18 -ஆம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என, அறிவிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுநல மனுக்களை தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற அதிமுக எம்எல்ஏ.க்களுக்குப் பணம் வழங்கிய விவகாரம் தொடர்பாக சிபிஐ மற்றும் வருவாய் புலனாய்வுத் துறை விசாரணைக்கு உத்தரவிட கோரி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இடைக்கால மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவுக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி, சட்டப்பேரவை செயலாளர் கே.பூபதி ஆகியோர் சார்பில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கு விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டது. ஆனால், செவ்வாய்க்கிழமை மாலை வரை விசாரணைக்கு வரவில்லை என்பதை, மு.க. ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் சண்முக சுந்தரம் நீதிபதிகள் கவனத்துக்கு கொண்டு வந்தார்.
இந்த வழக்கில் ஸ்டாலின் தரப்பில் விளக்க மனுத்தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாகவும் கூறினார். இதை ஏற்ற நீதிபதிகள் வழக்கை புதன்கிழமை (ஜூன் 28) விசாரணைக்கு ஏற்பதாக தெரிவித்தனர்.
முதல்வர் மற்றும் சட்டப்பேரவை செயலாளர் பதில் மனுக்களுக்கு மு.க. ஸ்டாலின் அளித்த விளக்கத்தில், நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக நான் ஏற்கெனவே தெரிவித்த குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் ஆதாரமாக தனியார் தொலைக்காட்சிகள் நடத்திய புலன் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நம்பிக்கை வாக்கெடுப்பைத் தொடர்புப்படுத்தியே கோடிக்கணக்கில் பணமும், தங்கமும் கொடுக்கப்பட்டுள்ளது என்ற புகாரால்தான் இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பேரவைத் தலைவர் அறிவுறுத்தியுள்ளார். ஆனால், அதன் பின்னரும் பேரவைத் தலைவர் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது அவரின் தவறான எண்ணத்தை நிரூபிக்கும் வகையில் உள்ளது.
முதல்வரின் பதில் மனுவில், சிபிஐ விசாரணைக்குக் கோரிக்கை வைப்பது என்பது, பிரதான வழக்கின் கோரிக்கைக்கு அப்பாற்பட்டது என்று கூறியுள்ளார். ஆனால், இந்த மனு, அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு பணம், தங்கமாக கொடுத்து, அவர்களை சட்ட விரோதமாக அடைத்து வைத்திருந்ததையும் சார்ந்துள்ளது. எனவே, இந்த இடைக்கால மனுவானது பிரதான வழக்கை நேரடி, முழுமையாக சார்ந்துள்ளது.
சட்டப்பேரவைக்குள் நடக்காத விவகாரம் என்று பேரவைச் செயலாளர் சொல்லும்போது, பேரவைக்கு வெளியில் நடந்த பணப்பட்டுவாடா குறித்து சிபிஐ விசாரணை தேவையில்லை எனக் கூறுவதற்கு, அவருக்கும் முகாந்திரம் இல்லை.
எனவே, சிபிஐ அல்லது வருவாய் புலனாய்வு விசாரணை கோரும் எனது இடைக்கால மனுவை தள்ளுபடி செய்யக் கோரும் இருவரின் மனுக்களையும் நிராகரிப்பதோடு, இரு அமைப்புகள் விசாரணைக்கு இடைக்காலமாக உத்தரவிட்டு, பணம் வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக அனைத்து ஆதாரங்களையும் கைப்பற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com