ஜிஎஸ்டி வரி விதிப்பால் சுற்றுலா மையங்களில் உயரும் கட்டணங்கள்

மத்திய அரசின் ஜிஎஸ்டி புதிய வரி விதிப்பால் நீலகிரி மாவட்டத்திலுள்ள சுற்றுலா மையங்களில் நுழைவுக் கட்டணம்,  வாகன மற்றும் உணவகக் கட்டணங்கள் உயர்கின்றன.
ஜிஎஸ்டி வரி விதிப்பால் சுற்றுலா மையங்களில் உயரும் கட்டணங்கள்

மத்திய அரசின் ஜிஎஸ்டி புதிய வரி விதிப்பால் நீலகிரி மாவட்டத்திலுள்ள சுற்றுலா மையங்களில் நுழைவுக் கட்டணம்,  வாகன மற்றும் உணவகக் கட்டணங்கள் உயர்கின்றன.

மத்திய அரசின் புதிய வரி விதிப்புக் கொள்கையான ஜிஎஸ்டி முறை ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.  இந்நிலையில்,  நீலகிரி மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் துறை,  வனத் துறை மற்றும் தோட்டக்கலைத் துறை  ஆகியவற்றின் சார்பிலான சுற்றுலா மையங்களிலும் நுழைவுக் கட்டணம்,  வாகன கட்டணம் மற்றும் உணவக கட்டணங்கள் உயருகின்றன.

சுற்றுலாத் துறையின் சார்பில் செயல்பட்டுவரும் உதகை படகு இல்லம்,  தொட்டபெட்டா மலைச் சிகர காட்சி முனை,  பைக்காரா படகு இல்லம், ஹோட்டல் தமிழ்நாடு மற்றும் இளைஞர் விடுதி ஆகியவற்றில் 15 சதவீதம் வரை கட்டண  உயர்வு இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல,  இங்கு செயல்பட்டுவரும் உணவகங்களில் குளிர்சாதன வசதி இல்லாத உணவகங்களில் 5 சதவீதம் வரையிலும்,  குளிர்சாதன வசதியுள்ள உணவுக் கூடங்களில் 10 சதவீதம் வரையிலும் கட்டண  உயர்வு இருக்கும் என  சுற்றுலாத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.   அதேபோல இம்மையங்களில் உள்ள தனியார் கேளிக்கை பூங்காக்களிலும் கட்டண  உயர்வு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   ஆனால்,  இறுதி செய்யப்பட்ட கட்டணம்  குறித்து இதுவரையிலும் அறிவிக்கப்படவில்லை.

அதேபோல,   வனத் துறையின் சார்பில் செயல்பட்டுவரும் தங்கும் விடுதிகளோடு,   முதுமலை புலிகள் காப்பகம்  மற்றும் அங்குள்ள தங்கும் விடுதிகள்,   உணவுக் கூடங்கள் ஆகியவற்றுக்கும்,  வாகனச் சவாரி,  யானை சவாரி உள்ளிட்டவற்றுக்கும் வரி விதிக்கப்பட வேண்டுமென ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதன்  காரணமாக இங்கும்  கட்டணம் உயர்கிறது.  இந்தக் கட்டண உயர்வு குறித்து தமிழக அரசு வனத் துறையின் சார்பில் விரைவில் தகவல் தெரிவிக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவற்றைத் தவிர நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் செயல்பட்டு வரும் உதகை அரசினர் தாவரவியல் பூங்கா,   ரோஜா பூங்கா,  குன்னூர் சிம்ஸ் பூங்கா,   கோத்தகிரி  நேரு பூங்கா ஆகியவற்றில் இதுவரையிலும் நுழைவுக்கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட்டு வந்தது. இவற்றில் கூடுதலாக வரி ஏதும் இதுவரையிலும் வசூலிக்கப்படவில்லை.  ஆனால்,  தற்போதைய ஜிஎஸ்டி சட்டத்தின்படி  அனைத்து நுழைவுக் கட்டணங்களுக்கும் வரி வசூலிக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதால் இதுதொடர்பாக தோட்டக்கலைத் துறை  உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.  புதிய கட்டண  உயர்வு  குறித்து ஜூன் 30}ஆம் தேதி அறிவிக்கப்படுமென தெரிவித்துள்ளனர்.

நீலகிரி  மாவட்டம், சுற்றுலாத் தொழிலையே நம்பியுள்ள மாவட்டமென்பதால் ஜிஎஸ்டி வரி விதிப்பால்  அனைத்து சுற்றுலா மையங்களிலும் கட்டண  உயர்வு ஏற்படுவது தற்போது உறுதி செய்யப்பட்டிருந்தாலும்,  இக்கட்டண  உயர்வு எந்த அளவில் இருக்குமென்பதைக் குறித்து  இதுவரையிலும் உறுதியாக ஏதும் அறிவிக்கப்படாததால் சுற்றுலாத் தொழிலில்  ஈடுபட்டுள்ளோர்  அரசின் புதிய அறிவிப்புகளை எதிர்நோக்கியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com