நிசப்தமாகும் விசைத்தறிகள்: அரசு உதவியை எதிர்பார்க்கும் நெசவாளர்கள்

நாட்டில் விவசாயத்துக்கு அடுத்து அதிக வேலைவாய்ப்பை அளித்துவரும் விசைத்தறித் தொழில் அரசின் பாராமுகத்தால் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. தொழில் செய்ய முடியாததால், நெசவாளர்கள் பலர் வாழ்வாதாரத்தை இழந்
நிசப்தமாகும் விசைத்தறிகள்: அரசு உதவியை எதிர்பார்க்கும் நெசவாளர்கள்

நாட்டில் விவசாயத்துக்கு அடுத்து அதிக வேலைவாய்ப்பை அளித்துவரும் விசைத்தறித் தொழில் அரசின் பாராமுகத்தால் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. தொழில் செய்ய முடியாததால், நெசவாளர்கள் பலர் வாழ்வாதாரத்தை இழந்து பரிதவித்து வருகின்றனர்.
இந்தியாவின் ஜவுளித் தேவையில் 5 சதவீதம் மட்டுமே நிறுவனப்படுத்தப்பட்ட முறையில் ஆலைகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. சுமார் 20 சதம் கைத்தறி மூலமும் 15 சதவீதம் பின்னலாடை மூலமும் சுமார் 60 சதவீதம் விசைத்தறி மூலமும் உற்பத்தி செய்யப்படுகிறது.
நாட்டின் ஜவுளித் தொழிலில் விசைத்தறி உற்பத்தி முக்கிய இடம் வகிக்கிறது. நாடு முழுவதும் சுமார் 19.42 லட்சம் விசைத்தறிகள் உள்ளன. இதில் 70 லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர்.

இரண்டாவது இடத்தில் தமிழகம்

மகாராஷ்டிர மாநிலம் 8 லட்சம் தறிகளுடன் முதலிடத்திலும் தமிழகம்
5 லட்சம் தறிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன. குஜராத்
மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆண்டுக்கு நமது உள்நாட்டுத் தேவைக்குப் போக சுமார் ரூ.4,500 கோடி அளவுக்கு விசைத்தறி ரகங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

தமிழகத்தில் விசைத்தறியின் வரலாறு 1928-லிருந்து துவங்குகிறது. அப்போது 6 தறிகளுடன் ஆரம்பித்தது. தற்போது 5 லட்சம் தறிகள் இயங்குகின்றன. இதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 15 லட்சம் பேர் இத்தொழிலில் உள்ளனர். தமிழகத்தில் கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களில் இத்தொழில் பரவி உள்ளது. நெல்லை மாவட்டம்
சங்கரன்கோவில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, சத்திரம்பட்டி பகுதியிலும் விசைத்தறிக் கூடங்கள் உள்ளன. தமிழகத்தில் 24,000 விசைத்தறிகளை உள்ளடக்கிய 142 விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு
சங்கங்கள் உள்ளன. இவற்றில் மட்டும் ரூ.20 கோடி அளவுக்கு
கொள்முதல் நடைபெறுகிறது.

கூலிக்கு வேலை செய்யும் நெசவாளர்கள்

இதில் ஈடுபட்டுள்ளவர்கள் மூன்று வகையைச் சார்ந்தவர்கள். பல நூறு தறிகளை வைத்து
தொழிற்சாலை வடிவத்தில் தொழில் நடத்தும் மாஸ்டர் வீவர்ஸ் என ஒரு பிரிவினர். இவர்கள் சொந்த மூலதன வசதியுள்ளவர்கள் அல்லது வங்கி மூலதனம் பெற வாய்ப்பு உள்ளவர்கள், ஆரம்ப மூலதன திரட்சிக்குச் சொந்தக்காரர்கள். இவர்களிடம் நூலும், கூலிப் பணமும்
வாங்கி தானும், தனது குடும்ப உறுப்பினர்களும் அல்லது ஓரிரு கூலித் தொழிலாளிகளையும் பயன்படுத்தி சொந்தத்தறிகளில் வேலை செய்வோர் அடுத்த பிரிவினர்.
மூன்றாவது பிரிவினர் கூலி உழைப்பாளிகள். தனது உழைப்பை மட்டுமே வாய்ப்பாகக்
கொண்டவர்கள். அன்றாடக் கூலிக்கு மூலதனத்தோடு பரிவர்த்தனை செய்து கொண்டு பிழைப்பு நடத்துவோர். இவர்கள்தான் எண்ணிக்கையில் அதிகம்.

இறக்குமதிக்கு அனுமதி, ஏற்றுமதிக்குத் தடை

தங்குதடையற்ற இறக்குமதிக்கு அனுமதி, ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடுகள் போன்றவற்றால் சந்தையில் வெளிநாட்டுப் போட்டியாளர்கள் சுலபமாக நுழைந்து விட்டனர். 2000-ஆவது ஆண்டுக்கு முந்தைய உள்நாட்டுத் தொழில் பாதுகாப்புக்கான இறக்குமதியைக் கட்டுப்படுத்தும் சுங்கக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன.
இதனால் உள்நாட்டு சந்தைக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. மேலும், உலகப் பொருளாதார மந்த நெருக்கடி அன்னிய நாட்டுச் சந்தையிலும் ஆபத்தை உருவாக்கியது. டாலருக்கு எதிரான ரூபாயின் ஏற்ற, இறக்கம் என ஏற்றுமதி ரகங்களை உற்பத்தி செய்வோர் எதிர்கொள்ளும் சவால்கள் கூடிக்கொண்டே போகின்றன.

நூல் விலையேற்றம், மறுக்கப்படும் கடனுதவி

நூல் விலையிலும் இதேநிலைதான் உள்ளது. மூலப்பொருள்களின் விலையேற்றம் மற்றும் விசைத்தறி உதிரி பாகங்களின் விலையேற்றம் போன்றவற்றால் சிறிய நடுத்தர விசைத்தறி உரிமையாளர்கள் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளனர்.
மேலும் சிறிய நடுத்தர விசைத்தறி உரிமையாளர்களுக்குக் கடன் வசதி என்பது இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளது. மாஸ்டர் வீவர்ஸ் எனப்படும் ஒருசிலருக்கே கடன் வசதி கிடைக்கும். மீதமுள்ள பெரும்பாலானோர் உள்ளூர் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கித்தான் தொழில் நடத்த முடியும். இதனால் கடன் பொறியில் சிக்கிக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளைப் போன்ற நிலைக்கு விசைத்தறியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

ஆட்சியாளர்களின் கவனம் தேவை

இதுகுறித்து நாமக்கல் மாவட்டம், எலச்சிப்பாளையம் விசைத்தறி நெசவாளர்கள் சங்க நிர்வாகி எஸ்.பழனிவேல் கூறியது: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் எந்நேரமும் ஓயாது ஒலித்துக் கொண்டிருந்த விசைத்தறிக் கூடங்கள் நிசப்தம் ஆகி வருகின்றன. லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புக் கொடுத்து வந்த விசைத்தறித் தொழில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாகவே கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.
ரூபாய் நோட்டு பிரச்னையால் இருக்கிற கொஞ்ச நஞ்ச ஓட்டமும் படுத்துவிட்டது. ஒரு வாரத்தில் 6 நாட்கள் வேலைசெய்த தொழிலாளிக்கு இப்போது 6 ஷிப்ட் வேலை கூடக் கிடைப்பதில்லை. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதியில் விசைத்தறித் தொழிலாளர்கள் சிறுநீரகத்தை விற்ற அவலம் நடந்தது. பட்டினிச் சாவும் தற்கொலையும் தஞ்சை விவசாயிகளுக்கு ஏற்பட்டது போல, விசைத்தறி தொழிலுக்கும் வராமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கூலிக்குப் போராட்டம்

தொழிலின் இந்தச் சூழலில் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிப்படைகிறது. சிறு, குறு விவசாயிகள் விவசாயக் கூலித் தொழிலாளர்களாக மாறி வருவதைப் போன்று சிறிய விசைத்தறி உரிமையாளர்கள் பலரும் பெரிய விசைத்தறிக் கூடங்களுக்கு கூலி வேலைக்குச் செல்லும் நெருக்கடி நிலைக்கு ஆளாகியுள்ளனர். விசைத்தறித் தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்சக் கூலி, பண்டிகைக் கால போனஸ் போன்றவை பெரிய கனவாகவே உள்ளன. இதனைப்பெற ஒவ்வோர் ஆண்டும் போராட வேண்டிய நிலையில்தான் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com