ஆர்.கே.நகர் தொகுதி: 29 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை! பிரவீண் கே.நாயர்

ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதியில் 29 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகக் கண்டறியப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீண் கே.நாயர் தெரிவித்தார்.

ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதியில் 29 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகக் கண்டறியப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீண் கே.நாயர் தெரிவித்தார்.
சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறியது:
ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 62,721 ஆகும்.
இவர்களில் 1 லட்சத்து 28,305 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 34,307 பெண் வாக்காளர்களும், 109 பிற வாக்காளர்களும் உள்ளனர். இந்தத் தொகுதியில் 256 வாக்குச்சாவடிகளும், 50 வாக்குச்சாவடி மையங்களும் உள்ளன. இவற்றில் 15 வாக்குச்சாவடி மையங்களிலுள்ள 29 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ளன.
கண்காணிப்பு: ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க 3 பறக்கும் படைகள், 3 நிலையான கண்காணிப்புக் குழுக்கள், 2 வீடியோ கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கட்டணமில்லா தொலைபேசி எண்: வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் கொண்டு செல்லப்படுவதைத் தடுக்கப் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் தொடர்பான விவரங்கள் மற்றும் விதிமீறல் புகார்களை தெரிவிக்க 18004257012 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இடைத்தேர்தல் பணிக்காக 21 மண்டல அலுவலர்களும், 21 உதவி மண்டல துறை அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வாக்குச்சாவடிகளுக்கு போகும் வழித்தடங்கள் மற்றும் வாக்குச்சாவடி மையங்களை முன்னதாகவே பார்வையிட்டு தேவையான வசதிகளை மேற்கொள்வர். வாக்கு எண்ணிக்கை ராணி மேரி கல்லூரியில் ஏப்ரல் 15 ஆம் தேதி காலை 8 மணி முதல் நடைபெறும்.
வேட்பு மனுக்கள்: திங்கள்கிழமை மாலை 3 மணி நிலவரப்படி, ஆர்.கே.நகரில் போட்டியிடுவதற்கு 13 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி சார்பாக ஒரு வேட்புமனுவும், பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சி சார்பாக 2 வேட்புமனுக்களும் மற்றும் 10 சுயேச்சை வேட்புமனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்றார் பிரவீண் கே.நாயர்.

ஒப்புகை சீட்டு
*சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு வாக்களித்த பிறகு (ஏப்ரல் 12) முதன்முறையாக ஒப்புகைச் சீட்டு வழங்கப்பட உள்ளது.
*இந்தத் தொகுதியில் தேர்தல் விதிமீறல் தொடர்பாக இதுவரை 18 புகார்கள் வந்துள்ளன. இதில் பணப் பட்டுவாடா குறித்த புகார் எதுவும் இல்லை.
*ஆர்.கே.நகர் தொகுதிக்கு மத்தியப் படை விரைவில் வர உள்ளது.
*இத்தொகுதியில் 1,638 தேர்தல் பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். இவர்களுக்கான சிறப்புப் பயிற்சி வரும் 25 -ஆம் தேதி நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com