ஒசூரில் ரயிலை கவிழ்க்கும் சதித் திட்டம் முறியடிப்பு

ஒசூரில் ரயிலை கவிழ்க்க நடந்த சதித் திட்டம் கண்டறியப்பட்டு முறியடிக்கப்பட்டது.

ஒசூரில் ரயிலை கவிழ்க்க நடந்த சதித் திட்டம் கண்டறியப்பட்டு முறியடிக்கப்பட்டது.
ஒசூரில் ரயில்வே தண்டவாள இணைப்புக் கம்பிகளை அகற்றி ரயிலை கவிழ்க்க நடந்த சதித் திட்டம் முறியடிக்கப்பட்டது. இதுதொடர்பாக, காவல்துறை உயர் அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர், தமிழகத்தின் எல்லைப் பகுதியில் உள்ளது. ஒசூர் வழியாக தினசரி ஏராளமான ரயில்கள் பெங்களூரு, மும்பை மற்றும் பல்வேறு வட மாநிலங்களுக்குச் செல்கின்றன. அதேபோல மைசூரு, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட நகரங்களில் இருந்தும், வட மாநிலங்களில் இருந்தும் ஒசூர் வழியாக கோவை, நாகர்கோவில், தூத்துக்குடி உள்ளிட்ட நகரங்களுக்கு ரயில்கள் செல்கின்றன.
இந்த ரயில் பாதையில், தினசரி ரயில்வே ஊழியர்கள் நடந்து சென்று தண்டவாளத்தை சரிபார்ப்பது வழக்கம். அதேபோல, ரயில்வே ஊழியர் டேனியல், ஒசூரில், தளி ரயில்வே கேட் பகுதியில் திங்கள்கிழமை தண்டவாளத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டார். அப்போது ரயில்வே தண்டவாளம் மற்றும் சிமென்ட் சிலாப்புகளை இணைக்கக் கூடிய இணைப்புக் கம்பிகள் பல இடங்களில் அகற்றப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அவர், உடனடியாக ஒசூர் ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து தென் மேற்கு ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஒசூர் -பெங்களூரு ரயில் பாதையில் தண்டவாளத்தில் அகற்றப்பட்டிருந்த 15-க்கும் மேற்பட்ட இடங்களில் மீண்டும் இணைப்புக் கம்பிகளைப் பொருத்தினர். இதனால், ரயில் சேவையில் எந்தப் பாதிப்பும் இல்லாமல் வழக்கம்போல ரயில்கள் இயக்கப்பட்டன.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தென்மேற்கு ரயில்வே முதன்மைக் கோட்டப் பாதுகாப்பு ஆணையர் சுரேஷ் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தார். மேலும், ஒசூர் ஏ.எஸ்.பி. ரோஹித் நாதன், சேலம் ரயில்வே உதவி கண்காணிப்பாளர் குமரேசன் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.
ஒசூர் வழியாகச் செல்லக்கூடிய ரயிலை கவிழ்க்கும் நோக்கத்தில் தண்டவாளத்தில் இருந்த இணைப்புக் கம்பிகளை மர்ம நபர்கள் அகற்றி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக தென் மேற்கு ரயில்வே நிர்வாகம் மற்றும் ஒசூர் ரயில்வே போலீஸார் ஆகியோர் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஒசூரில் ரயில் நிலையம் அருகில் தண்டவாளத்தில் இருந்த இரும்பு இணைப்புக் கம்பிகள் அகற்றப்பட்டிருந்தது உடனடியாக கண்டறியப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com