கச்சத்தீவைத் தாரை வார்த்தது யார்? மு.க.ஸ்டாலின் - அமைச்சர் ஜெயகுமார் கடும் விவாதம்

கச்சத்தீவைத் தாரை வார்த்தது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் டி.ஜெயகுமார் இடையே கடும் விவாதம் நடைபெற்றது.
கச்சத்தீவைத் தாரை வார்த்தது யார்? மு.க.ஸ்டாலின் - அமைச்சர் ஜெயகுமார் கடும் விவாதம்

கச்சத்தீவைத் தாரை வார்த்தது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் டி.ஜெயகுமார் இடையே கடும் விவாதம் நடைபெற்றது.
இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது மு.க.ஸ்டாலின் பேசியது:
இந்திய கடல் எல்லையில் ஆதம் பாலம் பகுதியில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் சரமாரியாகத் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ராமேசுவரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவ இளைஞர் பிரிட்ஜோ கழுத்தில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இரு நாட்டு மீனவர்கள் மற்றும் அரசுகள் நிலையில் பேச்சுவார்த்தைகள் நடத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டும் அதை இலங்கை அரசு தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருகிறது. எனவே, இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்றார்.
அதற்கு அமைச்சர் டி.ஜெயகுமார் எழுந்து, 1974-ஆம் ஆண்டு கச்சத்தீவைத் தாரை வார்த்தார்கள் என்றார்.
இதற்கு திமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அப்போது மு.க.ஸ்டாலின் எழுந்து பேச முற்பட்டார். அதற்கு பேரவைத் தலைவர் அனுமதி தரவில்லை. அமைச்சர் கூறியதை நீக்க வேண்டும் இல்லாவிட்டால் மு.க.ஸ்டாலினைப் பதில் அளிக்க அனுமதிக்க வேண்டும் என்று திமுகவினர் குரல் கொடுத்தனர்.
பேரவைத் தலைவர் தனபால்: அமைச்சர் 1974 என்று ஆண்டைத்தான் குறிப்பிட்டார். யாரையும் குறிப்பிட்டுப் பேசவில்லை.
மு.க.ஸ்டாலின்: 1974-ஆம் ஆண்டு திமுக ஆட்சி. எனவே அதுகுறித்து விளக்கம் சொல்ல நீங்கள் அனுமதி தரவேண்டும். 1974 ஜனவரி 6-ஆம் தேதி கச்சத்தீவு பிரச்னை எழுந்தபோதே, அன்றைய பிரதமர் இந்திரா காந்திக்கு கச்சத்தீவு இந்தியாவுக்குச் சொந்தமானது என பல்வேறு ஆதாரங்களுடன் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார். வெளியுறவுத்துறை அமைச்சரிடத்திலும், அதிகாரிகளிடத்திலும் தமிழக அரசின் சார்பில் கருணாநிதி கடுமையான எதிர்ப்பை அன்றைக்குப் பதிவு செய்துள்ளார். அதையும் மீறிதான் கச்சத்தீவை இலங்கையிடம் மத்திய அரசு வழங்கியது. 1974 ஜூன் 9-ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, அதில் கச்சத்தீவு பற்றி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதைக் கண்டித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் 1974 ஜூலை 24-இல் கண்டனப் போராட்டமே நடத்தப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, 2006 தமிழக சட்டசபையில் தீர்மானமே நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையெல்லாம் மூடி மறைக்கக்கூடிய வகையில் அமைச்சர் பேசுகிறார்.
டி.ஜெயகுமார்: ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கச்சத்தீவை மீட்கத் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்திருக்கிறார். அவருடைய உறுதியான நிலைப்பாடு, கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும் என்பதுதான். 1998-இல் கச்சத்தீவை மீட்க உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா வழக்குத் தொடர்ந்தார். 1974-க்குப் பிறகு இதுபோல் திமுக வழக்குத் தொடர்ந்ததா?
இதற்கு திமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து எதிர்ப்புத் தெரிவித்தனர். காங்கிரஸ் உறுப்பினர்களும் எழுந்து பேசுவதற்கு அனுமதி கேட்டனர். ஆனால் பேரவைத் தலைவர் அனுமதி தரவில்லை.
மு.க.ஸ்டாலின்: கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டாலும், கருணாநிதியின் வற்புறுத்தல் காரணமாகத்தான் பல உரிமைகள் மீனவர்களுக்குக் கிடைத்தன. ஆனால், நெருக்கடி நிலை அமலுக்கு வந்த பிறகு, அதிமுக ஆதரவால்தான் அவை பறிக்கப்பட்டன என்பதை நான் இங்கு பதிவு செய்கிறேன். 1974 ஜூன் 29-இல் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதைக் கண்டித்து அனைத்துக்கட்சிக் கூட்டத்தை அன்றைக்கு முதல்வராக இருந்த கருணாநிதி கூட்டினார். அந்தக் கூட்டத்தில் போடப்பட்ட தீர்மானத்துக்குக் கையெழுத்துப் போட மறுத்தவர்கள் அதிமுகவினர் என்பதையும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
டி.ஜெயகுமார்: துரோகம் செய்தவர்கள் யார் என்பதும் மக்களுக்குத் தெரியும். கடந்த வாரம் தில்லி சென்று மத்திய அமைச்சரைச் சந்தித்தோம். அப்போது மீனவர்களின் பாதுகாப்பு, பாரம்பரிய உரிமை, எதிர்கால அணுகுமுறை ஆகியவை குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினோம். கடலில் மீன் பிடிக்கும் மீனவர்கள் காற்றின் வேகம் காரணமாக கடல் எல்லையைத் தாண்டும் நிலை ஏற்படுகிறது. கடல் எல்லை என்பது ஒரு கற்பனைக் கோடுதான். எனவே எல்லை மீறுவதாகக் கூறி மீனவர்களைக் கைது செய்யவோ, தாக்கவோ, துன்புறுத்தவோ கூடாது என்று கோரிக்கை வைத்தோம். அதை நிறைவேற்றுவதாக உறுதி அளித்துள்ளார். பாக். நீரிணைப் பகுதியில் மீனவர் நலனுக்காக ரூ.1,640 கோடி திட்டம் உள்ளது. இதற்கு மத்திய அரசு உரிய பங்கை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். ஆண்டுதோறும் ரூ.500 கோடி விடுவிப்பதாக உறுதி அளித்துள்ளனர்.
இலங்கையில் இருக்கும் தமிழக மீனவர்களின் விசைப்படகுகளையும் விரைவில் மீட்டு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு உறுதி அளித்திருக்கிறது. இதுவரை 4 சுற்றுப் பேச்சு வார்த்தை முடிந்திருக்கிறது. 95 சதவீதப் பிரச்னைக்குத் தீர்வு கிடைத்திருக்கிறது. எனவே தமிழக மீனவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com