மார்ச் 27-இல் ஆணையர் ஜார்ஜ் கட்டாயம் ஆஜராக வேண்டும்: உயர்நீதிமன்றம்

பிடியாணையைத் தவிர்க்க சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ் மார்ச் 27-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் கட்டாயம் ஆஜராக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மார்ச் 27-இல் ஆணையர் ஜார்ஜ் கட்டாயம் ஆஜராக வேண்டும்: உயர்நீதிமன்றம்

பிடியாணையைத் தவிர்க்க சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ் மார்ச் 27-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் கட்டாயம் ஆஜராக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016 ஆகஸ்டில் ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது, மத்திய குற்றப்பிரிவில் 2011 வரை முடிக்கப்படாமலும், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாமலும் கிடப்பில் போடப்பட்ட வழக்குகளின் நிலை குறித்து அறிக்கை அளிக்க மத்திய குற்றப்பிரிவுக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் உத்தரவிட்டிருந்தார்.
நிலுவையில் உள்ள கொடுங்குற்ற வழக்குகளை 2 மாதங்களில் முடிக்கும்படி அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பவும், அந்த வழக்குகளின் நிலை குறித்தும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் காவல் துறையில் உள்ள கருப்பு ஆடுகளுக்கும் இடையிலான தொடர்பு பற்றியும், உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு அறிக்கை அனுப்ப வேண்டும் எனவும் மாநகர காவல் ஆணையருக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் வழங்கிய அவகாசம் கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்தது. இந்நிலையில், காவல் ஆணையர் திங்கள்கிழமை நேரில் ஆஜராக வேண்டும் எனக் கூறி, வழக்குகள் பட்டியலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ் நேரில் ஆஜராகவில்லை. அப்போது ஆஜரான அரசு வழக்குரைஞர், சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள வழக்குகளின் விவரங்கள் கொண்ட அறிக்கை உயர்நீதிமன்ற பதிவுத் துறையில் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது என்றார்.
அதையடுத்து நீதிபதி, அறிக்கை எப்போது தாக்கல் செய்யப்பட்டது? கடந்த வெள்ளிக்கிழமை இந்த வழக்கு ஆவணங்களை நான் பார்த்தபோது, அறிக்கை இல்லை. அதன் பிறகுதான் நேரில் ஆஜராக உத்தரவிட்டேன் என்று கூறினார்.
அதற்குப் பதிலளித்த வழக்குரைஞர், வெள்ளிக்கிழமை இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது என்றார்.
அப்போது நீதிபதி கூறியது: வெள்ளிக்கிழமை அறிக்கை தாக்கல் செய்தால், அந்த அறிக்கையை வாங்கிய பதிவுத் துறை அதிகாரி யார்? விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் வழக்குகளின் விவரப் பட்டியலில், அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதைக் குறிப்பிட்ட பதிவுத் துறை அதிகாரி யார்? உயர்நீதிமன்ற பதிவுத் துறையிலும் கருப்பு ஆடுகள் உள்ளன. டிசம்பரில் தாக்கல் செய்ய வேண்டும் என்ற உத்தரவை, கடந்த வெள்ளிக்கிழமைதான் ஆணையர் நிறைவேற்றியுள்ளார் என்றார்.
இதற்குப் பதிலளித்த அரசு வழக்குரைஞர், ஓட்டேரி காவல் நிலையம் தொடர்பான வழக்கில்தான் அறிக்கை தாக்கல் செய்ய, இந்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு விவரங்களை ஓட்டேரி போலீஸார், ஆணையரின் கவனத்துக்குக் கொண்டு வரவில்லை. உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்வதற்குப் பதில், மாவட்ட முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஓட்டேரி போலீஸார் தாக்கல் செய்து விட்டனர்.
அந்த அறிக்கைதான் இப்போது தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை அவமதிக்க வேண்டும் என்ற எண்ணம் ஆணையருக்குக் கிடையாது என்றார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு: இதுவரை உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல், காவல் ஆணையர் ஆஜராவதைத் தவிர்க்கும் வகையில், அவசர கதியில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எனவே, அவருக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத பிடியாணையைத் தவிர்ப்பதற்கு வரும் 27-ஆம் தேதி கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும். முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரியில் ஆணையர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதா என்று விசாரித்தேன். முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி என் முன் நேரில் ஆஜராகி, கடந்த பிப்ரவரி மாதமோ அல்லது இதுநாள் வரையிலோ எந்த ஒரு அறிக்கையும் காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்படவில்லை என்று விளக்கம் அளித்தார் என்று தனது உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com