அப்பா என்பது ஓர் அதிசயமான புத்தகம்! சுகி. சிவம்

அப்பா என்பது ஓர் அதிசயமான புத்தகம். அது கிடைக்கும் வயதில் நம்மால் அதை புரிந்து கொள்ள முடிவதில்லை; புரிந்து கொள்ள நினைக்கும்போது அது கிடைப்பதில்லை என்று ஆன்மிக சொற்பொழிவாளர்
சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற எழுத்தாளர் டி.என்.சுகி சுப்பிரமணியன் நூற்றாண்டு விழாவில் விருது பெற்றவர்களுடன்  சுகி சிவம், தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன், எழுத்தாளர்கள் ஜ.ரா.சுந்தரேசன்,
சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற எழுத்தாளர் டி.என்.சுகி சுப்பிரமணியன் நூற்றாண்டு விழாவில் விருது பெற்றவர்களுடன் சுகி சிவம், தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன், எழுத்தாளர்கள் ஜ.ரா.சுந்தரேசன்,

அப்பா என்பது ஓர் அதிசயமான புத்தகம். அது கிடைக்கும் வயதில் நம்மால் அதை புரிந்து கொள்ள முடிவதில்லை; புரிந்து கொள்ள நினைக்கும்போது அது கிடைப்பதில்லை என்று ஆன்மிக சொற்பொழிவாளர் சுகி.சிவம் கூறினார்.
எழுத்து வேந்தர் டி.என்.சுகி. சுப்பிரமணியன் நூற்றாண்டு விழா சென்னையில் புதன்கிழமை (மார்ச் 22) நடைபெற்றது. சுகி குடும்பம், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ், சுகிசிவம் அறக்கட்டளை ஆகியவை இணைந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன. விழாவில் ஜ.ரா.சுந்தரேசன் (பாக்கியம் ராமசாமி)- படைப்பிலக்கியம், அகிலா சிவராமன்- ஊடகப் பணி, எஸ்.பி.பாலகிருஷ்ணன்-நாடகப் பங்களிப்பு, கட்டுரைத் திறன் - நாகூர் ரூமி ஆகியோருக்கு சுகி நூற்றாண்டு விருதுகள், பொற்கிழி ஆகியவை வழங்கப்பட்டன.
விழாவில் 'அப்பா' என்ற தலைப்பில் சுகி சுப்பிரமணியனின் கடைசி மகனும் ஆன்மிகச் சொற்பொழிவாளருமான சுகி.சிவம் பேசியது: அம்மா என்கிற உணர்வு, மிகுந்த ஆற்றல் வாய்ந்தது. இந்த உணர்வுக்கு அனைத்துக் குடும்பங்களும் மதிப்பளித்து கொண்டாடுகின்றன.
ஆனால் அப்பாவின் தியாகம், பங்களிப்பு வெளியில் தெரிவதில்லை. மெழுகுவர்த்தி தொலைவிலிருந்து பார்க்கும்போது பிரகாசமாக ஒளிவிடுவது தெரியும். ஆனால் குடும்பத்துக்காக அப்பா என்ற மெழுகுவர்த்தி உருகுவது அருகே போய்ப் பார்த்தால் மட்டுமே தெரியும். ஒரு தாயின் புகழ் பலரால் பேசப்படும் அளவுக்கு தந்தையின் புகழ் குறித்து போதுமான அளவு சிந்திக்கப்படுவதில்லை.
தாய்ப் பாசம் - இயற்கையின் கட்டமைப்பு: தாய்ப்பாசம் என்பது இயற்கை கொடுத்திருக்கும் கட்டமைப்பு. ஒரு தாயால் பாசம் இல்லாமல் இருக்கவே முடியாது என்றும் கூறலாம். ஆனால் தந்தைப் பாசம் என்பது ஒரு சமுதாயத்தின் முதிர்ச்சி; பண்பாட்டின் அடையாளம். தாய் என்பவள் அடையாளம் காணப்படுவது விலங்கில்கூட இருக்கிறது. அந்த விலங்கு சமூகத்தில் இருந்து மனித சமூகம் உயர்ந்ததற்கான அடையாளம் தந்தையின் மீதான மரியாதை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அன்று மிகப் பெரிய சக்தி...இன்று..? கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அப்பா என்பவர் ஒரு மிகப்பெரிய சக்தியாக இருந்தார். எந்தக் குடும்பத்தில் மரியாதைக்குரிய தகப்பன் இல்லையோ அந்தக் குடும்பம் கண்ணியமான குடும்பமாக உயர முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
தாயின் இடத்தை தகப்பனால் நிறைவு செய்ய முடியும். ஆனால் தந்தையின் இடத்தைத் தாயால் நிறைவு செய்வது மிகவும் கடினம். எனது தந்தை சுகி.சுப்பிரமணியன், தாம் மேற்கொண்ட பணியில் மிகவும் நேர்மையாக இருந்தார். பல படைப்பாளிகளுக்கு முன்னோடியாக இருந்து வழிகாட்டினார்.
''அப்பா என்பது ஓர் அதிசயமான புத்தகம். அது கிடைக்கும் வயதில் நம்மால் அதை புரிந்து கொள்ள முடிவதில்லை. புரிந்து கொள்ள நினைக்கும்போது அது கிடைப்பதில்லை'' என்றார் அவர்.
திரைப்பட இயக்குநர் முக்தா சீனிவாசன்: காலத்தால் அழிக்கப்படாத சிறந்த எழுத்தாளர் சுகி.சுப்பிரமணியன். அவரைப் பற்றி தேசியவிநாயகம்பிள்ளை, நாமக்கல் கவிஞர், கல்கி என பலர் புகழாரம் சூட்டியுள்ளனர். அவர்கள் சொன்னதைவிட மேலாக என்னதான் கூறிவிட முடியும். ஆழ்ந்த கருத்துக்கு சொந்தக்காரராக திகழ்ந்த அவரது எழுத்துகள் எப்போதும் நிலைத்திருக்கும்.
ஜ.ரா.சுந்தரேசன்: சுகி.சுப்பிரமணியன் ஒரு பெரிய சினிமா பிரபலம் இல்லை. ஆனால் அவர் எந்தளவுக்கு அனைவரிடத்திலிரும் நட்பு கொண்டிருந்தார் என்பதற்கு இங்கு வந்திருக்கும் கூட்டத்தை சான்றாகக் கூறலாம். அவரை நீண்ட நாள்களாக எனக்குத் தெரியும். சுசி.சுப்பிரமணியத்தின் பாணியை யார் வேண்டுமானாலும் கையாளலாம். ஆனால் அவரது சிந்தனை, எழுத்தாற்றல் எவருக்கும் வராது. உச்சரிக்கும் சொற்கள் நகைச்சுவையாகவும் அதே நேரத்தில் பயனுள்ளதாகவும் இருக்கும்.
இந்த நிகழ்ச்சியில் திரைப்பட தயாரிப்பாளர் முக்தா வி.சீனிவாசன், ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குநர் என்.முரளி, சுகி.சுப்பிரமணியனின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com