பல்கலைக்கழக மாணவர்களுக்கு கருத்துரிமை, பேச்சுரிமை மறுக்கப்படுகிறது: முதல்வர் நாராயணசாமி வேதனை

பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவ, மாணவியருக்கு கருத்துரிமை, பேச்சுரிமை மறுக்கப்பட்டு வருகிறது என முதல்வர் நாராயணசாமி வருத்தம் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக மாணவர்களுக்கு கருத்துரிமை, பேச்சுரிமை மறுக்கப்படுகிறது: முதல்வர் நாராயணசாமி வேதனை

பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவ, மாணவியருக்கு கருத்துரிமை, பேச்சுரிமை மறுக்கப்பட்டு வருகிறது என முதல்வர் நாராயணசாமி வருத்தம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையத்தின் 3-வது பட்டமளிப்பு விழா கம்பன் கலையரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இயக்குநர் டாக்டர் தமிழரசி தமிழ்மணி வரவேற்றார். தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி டாக்டர் கருப்புசாமி ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். அமைச்சர்கள் ஆர்.கமலக்கண்ணன், எப்.ஷாஜஹான், அன்பழகன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தனர்.

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் வள்ளி பட்டமளிப்பு விழா உரையாற்றினார். 
விழாவுக்கு தலைமை தாங்கி முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:
பட்டங்களை பெறும் மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுக்கு நன்றிக் கடன் செலுத்துபவர்களாக இருக்க வேண்டும். வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டால் தான் வெற்றியை காண முடியும். பல தோல்விகளை கண்டால் தான் வெற்றி பெற வேண்டும் என உத்வேகம் கிடைக்கும்.

புதுவையில் வாழ் பொதுமக்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும் என்பது தான் அரசின் எண்ணம். பட்ஜெட்டில் கல்விக்காக அதிக நிதியை ஒதுக்கி திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

மத்திய பல்கலை, ஜிப்மர், புதுச்சேரி பொறியியல் கல்லூரி, மருத்துவக்கல்லூரி, வேளாண் கல்லூரி, கால்நடை கல்லூரி என புதுவை மாநிலம் கல்விக்கேந்திரமாக திகழ்கிறது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே கேரளத்துக்கு அடுத்து புதுவை முழு கல்வியறிவு பெற்ற மாநிலம் என்ற பெருமையைப் பெற்றது. புதுச்சேரியில் இந்திய மேலாண்மைக் கல்வி (ஐஐஎம்) நிறுவனத்தை கொண்டு வர மத்திய அரசிடம் கோரியுள்ளோம். இதுகுறித்து நீதி ஆயோக் அமைப்பில் முடிவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி பொறியியல் கல்லூரியை தொழில்நுட்பப் பல்கலையாக மாற்ற மத்திய அரசு ரூ.60 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. இதற்கான ஆயுத்தப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

புதுச்சேரி சட்டக்கல்லூரி நிலை சரியாக இல்லை. அதை மேம்படுத்துவதில் அரசு தீவிர கவனம் செலுத்தும். வரும் கல்வியாண்டில் சட்டக்கல்லூரிக்கு கூடுதல் நிதி தரப்படும். வேளாண் கல்லூரியை பல்கலையாக மாற்ற திட்டமிட்டுள்ளோம். புதுவை பெண்களுக்கு பாதுகாப்பு நிறைந்த மாநிலமாக விளங்குகிறது. 

பட்டமேற்படிப்பு பயிலும் மாணவர்கள் சுயமாக சிந்தித்து செயல்பட வேண்டும்.

எழுத்துக் கல்வியோடு மட்டுமின்றி ஆராய்ச்சிக் கல்வியிலும் கவனம் செலுத்த வேண்டும். நமது நாட்டில் ஆராய்ச்சிக்கு வெறும் 1.2 சதவீதம் நிதியே ஒதுக்கப்படுகிறது.

அரசியல் சட்டத்தின்படி ஒவ்வொருவருக்கும் எழுத்துரிமை, பேச்சுரிமை, கருத்துரிமை உள்ளது. ஆனால் தற்போது நமது நாட்டில் துரதிஷ்டவசமாக பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு பேச்சுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை மறுக்கப்படுகிறது. 

இது வேதனை தருகிகிறது. இந்நிலை மாற வேண்டும் என்றார் நாராயணசாமி.

மொத்தம் 2011-13, 2012-14, 2013-15 ஆண்டுகளில் முதுநிலை பட்டம் பெற்றவர்கள், 2012-13, 2013-14-ல் எம்.பில் நிறைவு செய்தவர்கள் என மொத்தம் 270 பேருக்கு பட்டங்களை முதல்வர் நாராயணசாமி வழங்கினார்.

மேலும் எம்.பில் மாணவர்கள் 20 பேருக்கும், முதுநிலை மாணவர்கள் 15 பேருக்கும், தங்கப் பதக்கங்களையும் அவர் வழங்கினார்.
அனைத்துத் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com