'திரைப்படத் தயாரிப்புத் தொழிலுக்கு புத்துயிர் அளிக்கவே போட்டி'

தமிழ்த் திரைப்படத் தயாரிப்புத் தொழிலுக்குப் புத்துயிர் அளிக்கவே தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடுகிறோம் என, நடிகர் சங்கப் பொதுச் செயலர் விஷால் தெரிவித்தார்.
செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பின்னர், தயாரிப்பாளர் சங்கத்துக்கான தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார் நடிகர் விஷால்.
செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பின்னர், தயாரிப்பாளர் சங்கத்துக்கான தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார் நடிகர் விஷால்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்புத் தொழிலுக்குப் புத்துயிர் அளிக்கவே தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடுகிறோம் என, நடிகர் சங்கப் பொதுச் செயலர் விஷால் தெரிவித்தார்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் ஏப்ரல் 2-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் தற்போதைய தலைவர் தாணு தலைமையில் ஓர் அணியினரும், நடிகர் விஷால் தலைமையில் மற்றோர் அணியினரும் போட்டியிடுகின்றனர். இதற்காக, இரு அணிகளைச் சேர்ந்தவர்களும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் பகுதிகளில் உள்ள தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களைச் சந்தித்து, நடிகர் விஷால் அணியினர் வியாழக்கிழமை ஆதரவு கோரினர்.

இதனைத் தொடர்ந்து, விஷால் புதுவையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மொத்தம் 1,212 உறுப்பினர்கள் உள்ளனர். பல வெற்றிப் படங்களைத் தயாரித்தும் உரிய வருவாய் கிடைக்காததால், பல தயாரிப்பாளர்கள் நலிந்துவிட்டனர்.

எங்கள் அணியில் கெளதம் மேனன், பிரகாஷ்ராஜ், ஞானவேல்ராஜா, மிஷ்கின், எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்டோர் நிர்வாகிகள் பதவிகளுக்கும், ஏனையோர் செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கும் போட்டியிடுகின்றனர்.

முந்தைய நிர்வாகிகள், சங்க உறுப்பினர்களுக்கு எந்த விதமான நன்மையும் செய்யாத நிலையில், எங்களைக் குற்றம் கூறி வருகின்றனர். எத்தகைய அவதூறையும் எங்கள் அணியினர் பொருட்படுத்த மாட்டார்கள்.

எங்களுடைய முக்கிய நோக்கம், தமிழ்த் திரையுலகில் தற்போது நிலவி வரும் வியாபாரச் சமமின்மையைச் சரிசெய்வதுதான். மேலும், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் பல திட்டங்களைச் செயல்படுத்துவோம்.

தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்ற பின்னர், நலிந்த தயாரிப்பாளர்களுக்கு மாதந்தோறும் ரூ. 10,000 உதவித் தொகை, காப்பீடு, திருமண உதவித் தொகை ரூ. 2 லட்சம் வழங்கப்படும். ஏற்கெனவே நாங்கள் நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்று, அறிவித்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றியுள்ளோம். நடிகர் சங்கத்துக்கு ரூ. 28 கோடியில் புதிதாகக் கட்டடம் கட்டி, அதன் மூலம் மாதம் ரூ. 50 லட்சம் வரை வருவாய் கிடைக்க வழிவகை செய்து வருகிறோம்.

தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் நான், அதில் வெற்றி பெற்றாலும் 2 ஆண்டுகளுக்கு எந்தப் பெரிய நடிகரையும் வைத்துப் படம் தயாரிக்க மாட்டேன். எனது கவனம், எல்லாம் 1,212 சங்க உறுப்பினர்களின் குடும்ப நலன் கருதியே இருக்கும்.

புதுதில்லியில் வறட்சி நிவாரணம் கோரி, தமிழக விவசாயிகள் கடந்த 8 நாள்களாகப் போராடி வருகின்றனர். மத்திய அரசு இந்தப் பிரச்னையில் தலையிட்டு, விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்றார் விஷால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com