நடிகர் விஜய் அரசியலுக்கு வர மாட்டார்: எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி

எந்தச் சூழ்நிலையிலும் நடிகர் விஜய் அரசியலுக்கு வர மாட்டார் என அவரது தந்தையும், திரைப்பட இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்தார்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வர மாட்டார்: எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி

எந்தச் சூழ்நிலையிலும் நடிகர் விஜய் அரசியலுக்கு வர மாட்டார் என அவரது தந்தையும், திரைப்பட இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்தார்.

கன்னியாகுமரியில் தனியார் கல்லூரி நிகழ்வில் பங்கேற்ற அவர், வியாழக்கிழமை இரவு செய்தியாளர்களிடம் கூறியது:

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் சினிமா மட்டுமே மக்களின் பொழுதுபோக்கு சாதனமாக இருந்ததால், திரையரங்குகளை நோக்கி ரசிகர்கள் சென்றனர். தொலைக்காட்சியின் வருகைக்குப் பின் தற்போது செல்லிடப்பேசி, இணையம், முகநூல், கட்செவி அஞ்சல் ஆகியவற்றின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. எம்.ஜி.ஆர். சினிமாவில் இருந்த காலகட்டத்தில் தயாரிப்பாளர்களுக்கு மரியாதையும், பணம் சம்பாதிக்கும் வாய்ப்பும் இருந்தது. ஆனால், இன்றைக்கு சினிமா வெளியாகும் அன்றே திருட்டு சி.டி. வெளியாகி விடுகிறது. இதனால் இன்றைய தயாரிப்பாளர்கள் மிகவும் பாதிப்படைகின்றனர்.

சினிமா தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதில் தகுதியானவர்கள் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட வேண்டுமென்பது எனது விருப்பம். தேர்தலில் நிற்பவர்கள் ஒரு சங்கத்தில் மட்டுமே பொறுப்பாளர்களாக இருப்பது நல்லது. இரு சங்கங்களில் பொறுப்பாளர்களாக இருப்பவர்களிடம் நியாயத்தை எதிர்பார்க்க இயலாது. இதனால் வீண் பிரச்னைகள் ஏற்படும். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் அரசியல் மீது அதிகமான ஆர்வம் இருந்தது. அப்போது நிறைய பேர், அரசியல் ஒரு சாக்கடை என்றனர். அந்த சாக்கடையை நாம் ஏன் சுத்தம் செய்யக் கூடாது என்று அவர்களிடம் வாதிட்டேன். எனது மகன் விஜய் அரசியலுக்கு வருவது மூலம் மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்று நான் நினைத்ததும் உண்மைதான். காலப்போக்கில் அரசியல் ஒரு சாக்கடைதான், அதனை சுத்தம் செய்ய இயலாது என்பதை உணர்ந்து அதிலிருந்து ஒதுங்கி விட்டேன். எந்தச் சூழ்நிலையிலும் நடிகர் விஜய் அரசியலுக்கு வர மாட்டார்.

இசையமைப்பாளர் இளையராஜா மிகச் சிறந்த கலைஞர் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. அவரின் முதல் படமான அன்னக்கிளி வெளிவந்த பின்னர், தொடர்ந்து இசைக் கச்சேரிகளை நடத்தி வந்தார். அவரது இசைக் கச்சேரியில் எனது மனைவி ஷோபாவும் பங்கேற்று வந்தார். ஒரு படத்துக்கு மட்டுமே இசையமைத்திருந்த அந்த காலகட்டத்தில் நடைபெற்ற கச்சேரிகளில் அவர் பிறர் இசையமைத்த படங்களில் உள்ள பாடல்களையும் பாடினார். அப்போது அவர் யாருக்கெல்லாம் ராயல்டி கொடுத்தார்? தற்போது அவர் ராயல்டி கேட்பது நியாயமற்ற பேச்சு என்பது எனது கருத்து என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com