'நீட்' தேர்வுக்கு விலக்கு கிடைக்குமா? தில்லியில் தமிழக அரசு இறுதிக்கட்ட முயற்சி

அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டும் தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வில் (நீட்) இருந்து நிரந்தர விலக்கு பெற தமிழக அரசு தில்லியில் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.
'நீட்' தேர்வுக்கு விலக்கு கிடைக்குமா? தில்லியில் தமிழக அரசு இறுதிக்கட்ட முயற்சி

அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டும் தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வில் (நீட்) இருந்து நிரந்தர விலக்கு பெற தமிழக அரசு தில்லியில் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. இதையொட்டி, தில்லிக்கு ஒரு நாள் பயணமாக வெள்ளிக்கிழமை வந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அந்தத் துறையின் முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
'நீட்' முறை அமல்: நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகள், மேல் படிப்புகளில் சேர தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு அவசியம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, நிகழ் கல்வியாண்டு முதல் 'நீட்' தேர்வு முறையை கட்டாயமாக அமல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகள், மாநில அரசின் கவுன்சிலிங் அடிப்படையில் தனியார் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் ஒதுக்கப்படும் இடங்கள் ஆகியவற்றுக்கு மட்டும் 'நீட்' தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு அளிக்க வகை செய்யும் இரு மசோதாக்களை தமிழக அரசு மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றியது. இம்மசோதாக்களுக்கு அனுமதி வழங்கக் கோரி குடியரசுத் தலைவருக்கு தமிழக அரசு அனுப்பி வைத்துள்ள கோப்பு மத்திய உள்துறை அமைச்சகம் மூலம் மத்திய சட்டம், சுகாதாரம் ஆகிய துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த போது மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.
அமைச்சர்களுடன் சந்திப்பு: இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து, மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை மாலையில் அவர் சந்தித்து பேசினார். இச்சந்திப்புகளின் போது தமிழக சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் உடனிருந்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் விஜயபாஸ்கர் கூறியதாவது: 'கிராமப்புற மாணவர்களுக்காக ஏற்கெனவே நடைமுறையில் உள்ள இடஒதுக்கீடு, உள் ஒதுக்கீடு உள்ளிட்டவற்றுக்கு எந்தவிதப் பாதிப்பும் வராது. அவற்றுக்கான இடங்களுக்கு பழைய நடைமுறையே தொடரும்' என்று அமைச்சர் நட்டா கூறினார்.
ஆனால், எம்பிபிஎஸ் படிப்புகளில் சேர விரும்பும் தமிழக மாணவர்கள் ஏற்கெனவே பொதுத் தேர்வை எதிர்கொண்டுள்ளனர். இந்நிலையில் 'நீட்' தேர்வுக்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்த மாணவர்கள் மிகவும் குழப்பம் அடைந்துள்ளனர். எனவே, இந்த விஷயத்தில் விரைவாக முடிவு எடுக்க வேண்டும் என்று அமைச்சர் நட்டாவை கேட்டுக் கொண்டோம். மேலும், உச்ச நீதிமன்றம் 'நீட்' விவகாரத்தில் பிறப்பித்துள்ள உத்தரவுக்கு பாதிப்பு நேராதவாறு தமிழக சட்ட மசோதாக்களில் சில பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளதை நட்டாவிடமும் ரவிசங்கர் பிரசாத்திடமும் விளக்கினோம். இதையடுத்து, தமிழக அரசின் கோரிக்கை குறித்து பரசிலித்து முடிவு எடுப்பதாக இரு அமைச்சர்களும் தெரிவித்தனர் என்றார் விஜயபாஸ்கர்.
இதைத் தொடர்ந்து, தமிழக சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியது: 'தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மத்திய உள்துறை மூலம், சுகாதாரம், மனித வளம், சட்டம் ஆகிய துறைகளின் கருத்துகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது எந்தத் துறையின் பரிசீலினையில் மசோதாக்கள் உள்ளன என்ற விவரம் தெரியவில்லை. தமிழகத்தைப் பொருத்தவரையிலும் அனந்தகிருஷ்ணன் குழு பரிந்துரையின்படி மாணவர் சேர்க்கைக்கான கொள்கை முடிவு எடுக்கப்பட்டது. மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்களில் ஏழை மாணவர்கள் சேர்ந்து பயில வாய்ப்பு இருக்காது என்பதைக் கருத்தில் கொண்டே கொள்கை முடிவு எடுக்கப்பட்டது.
தமிழகத்தில் 99 சதவீத மாணவர்கள் மாநிலக் கல்வி வழியில் படிப்பவர்கள். மாநிலத்தில் மொத்தம் 267 பள்ளிகள்தான் மத்திய பள்ளிக் கல்வி வாரிய பாடமுறைப்படி செயல்படுகின்றன. நிகர்நிலைப் பல்கலைக்கழகம், நிர்வாக ஒதுக்கீடு ஆகியவற்றில் அகில இந்திய ஒதுக்கீடு ஆகியவை 'நீட்' அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்பதில் தமிழக அரசுக்கு மாற்றுக் கருத்து கிடையாது. இதை மத்திய அமைச்சர்களிடம் தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் தெளிவாக விளக்கியுள்ளார் என்றார் ராதாகிருஷ்ணன்.
கூடுதல் மையங்கள்: இதற்கிடையே, நாடு முழுவதும் 'நீட்' தேர்வு நடத்தப்படும் மையங்களின் எண்ணிக்கையை 80-லிருந்து 103 ஆக மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை அதிகரித்தது. தமிழகத்தில் இப்போது 'நீட்' தேர்வு மையங்கள் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி ஆகிய இடங்களில் மட்டுமே உள்ளன. இந்நிலையில், நாமக்கல், திருநெல்வேலி, வேலூர் ஆகிய மேலும் மூன்று இடங்களில் 'நீட்' தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com